மார்கழி மகிமை – மார்கழி சிவனுக்கும் பெருமாளுக்கும் உரிய மாதம்

Share Button
மார்கழி மகிமை
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையிலே உயர்ந்தவற்றைப் பற்றிக் கூறும் போது “மாதங்களில் நான் மார்கழி” என்கிறார். மார்கழி சிவனுக்கும் பெருமாளுக்கும் உரிய மாதம். ‘ஹரியும் ஹரனும் ஒன்றே’ என்று சிறப்பிக்கும் மாதம்.
இம்மாதத்தில் சிவனடியார்கள் சிவனைத் தரிசித்து கைலாயம் அடைய ஆருத்ரா தரிசனமும், வைணவர்கள் பெருமாளின் பரமபதத்தை அடைய சொர்க்க வாசல் திறக்கும் வைகுண்ட ஏகாதசியும் ஒருங்கே இருப்பது சிறப்பு. பண்டை காலம் தொட்டே கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் எழுந்து கோலம் இட்டு வாசலை அலங்கரித்து பாவை நோன்பு இருப்பது வழக்கமாக உள்ளது.
கோவில்களிலே சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் பாடியருளிய திருப்பாவையும், ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்ற பெருமை பெற்ற திருவாசகத்தின் ஒரு பகுதியான மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருவெம்பாவையும் இசைக்கப்படுகின்றன.
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது திருவெம்பாவை. “எம்பாவாய்” என்னும் தொடர்மொழி இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது.
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை ‘திருவெம்பாவை’ விளக்குகிறது.
ஸ்ரீபூமாதேவியின் அம்சமாக பூமியில் அவதரித்த ஸ்ரீஆண்டாள், இறைவனையே ஆட்கொண்டதால் ‘ஆண்டாள்’ எனவும், கோதை நாச்சியார் என்றும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும் பெயர் பெற்றவர். மானுடர் யாரையும் மணக்கமாட்டேன், மாலவனையே மணப்பேன் என லட்சிய சபதம் ஏற்று பாவை நோன்பை மேற்கொண்டு, ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் கையிலே இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து, ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்’ எனத் துவங்கி ‘வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை’ என முடியும் முப்பது பாடல்களைப் பாடி, பூமாலையோடு பாமாலையும் தொடுத்து மாலவனுடன் இரண்டறக் கலந்தார்.
அந்த முப்பது பாடல்களுமே திருப்பாவை என வழங்கலாயிற்று. திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவை என்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று.
திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சியிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து, முப்பது பாடல்களாக மார்கழிமாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது. திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.
இப்படிப் பட்ட சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும், இசையைக் கேட்டு மகிழ்ந்தும், கோலங்கள் இட்டுக் கொண்டாடியும் மகிழ்வோம்.
திருப்பாவை – 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
மார்கழி மாதம் பிறந்து விட்டது. முழு நிலவும் ஒளிவீசுகிறது. செல்வ வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போலப் பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும் ஆகிய நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.
திருவெம்பாவை பாடல் – 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்என் னேயென்னே
ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை உடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்றனையோ? உன் காது என்ன செவிடாகி விட்டதா?. அந்த மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி கேட்டு தெருவில் சென்ற எங்கள் தோழி ஒருத்தி விம்மி அழுது, பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சித்துக் கிடந்தாள்.
ஆனால், என் தோழியே நீ இன்னமும் உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனை வாழ்த்திப் பாட உடனே எழுந்து வருவாயாக!
– முனைவர். சுடர்க்கொடி கண்ணன்
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *