புஷ்பா திரைப்படத்தை முன்வைத்து, திரைப்படத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுனின் எழுச்சியும் ஆட்சியும்-4
Allu Arjun : Pushpa The Rise
புஷ்பா திரைப்படத்தை முன்வைத்து, திரைப்படத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுனின் எழுச்சியும் ஆட்சியும் – 4
’அலா வைகுந்தபுரமுலொ’ படம் வெளிவந்தபோது அல்லு அர்ஜுனின் வளர்ச்சியின் வரைபடம் அல்லது வரைகட்டம் (graph) ஏறுமுகமாகி ஏறுவரிசையில் புஷ்பா படத்தில் இன்னும் உச்சத்தில் ஏறிவிட்டது.
இந்தப் படத்தில் தன்னைப் பொருட்படுத்தாமல், அனைவரின் நன்மைக்காகவும் அவர் விளையாட்டைப்போல், யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு பிரச்சினையையும் சரி செய்வார். வேறு வீட்டில் தந்தையின் பாசமின்றி வளரும் இவருக்கு, தன் பெற்றோர் குறித்த விபரங்கள் தெரிவதற்கு முன்பே அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்திருப்பார்.
மொத்த குடும்பத்தையும் சிரித்தபடி, சிரிக்க வைத்தபடி, யாரோ செய்யும் தவறை தான் சுமந்தபடி இவர் வரும் காட்சிகள் எல்லாமே அத்தனை உயிர்ப்புடன் இருக்கும். நடனமும், சண்டைக்காட்சிகளும் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவருக்கென்றே நடனத்தில் பிரத்தியேக ஸ்டெப் இருக்கும்.
சுவரில் சாய்ந்தபடி கால்களில் அவர் அளிக்கும் அந்த ஸ்டெப், ஜிம்னாஸ்டிக் செய்யும் தன்மையை பயிற்சி செய்தால்தான், ரப்பர் போன்ற உடலை வளைத்து ஆட முடியும். படிப்படியாக இப்படி முன்னேறி வந்து ஸ்டைலிஷ் ஸ்டார் என்று பெயர் பெற்றவர்தான் புஷ்பா படத்தில் தன்னை முற்றிலும் வேறுவிதமான முகத் தோற்றத்துடன் முன்னிறுத்திக்கொண்டார்.
சரி இந்தப் படக்கதைக்கே வருவோம். இவருக்கு அப்பாவாக இந்தப் படத்தில் ஜெயராம் நடித்திருப்பார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையிலான மனஸ்தாபத்தை சரிசெய்ய அவர் சொல்வது, ‘பேசாமல் இருப்பது தீர்வல்ல; பேசி சரி செய்துகொள்ளவேண்டும்; அதுதான் சரியான தீர்வைக் கொடுக்கும்’ என்பார்.
அப்படியே அந்தப் படத்தில் பொருத்தமாக பிரச்சினைகளும் சரியாகி விடும். தபு, ரோகிணி, சமுத்திரக்கனி என அனைவரும் சிறந்த நடிப்பைக் கொடுத்திருப்பார்கள். நடிகர் முரளி சர்மா இல்லையென்றால் படமே இல்லை.
திரிவிக்ரம் ஸ்ரீ நிவாஸ் இயக்கத்தில் கதாபாத்திரங்கள் அனைவரும் சிரப்பாக நடிக்க அத்தனை விருதுகள் பெற்ற படம். 100 கோடியில் எடுக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக 262.05 கோடி வசூல் பெற்ற வெற்றிப்படம்.
///‘பேசாமல் இருப்பது தீர்வல்ல; உண்மையைப் பேச வேண்டும். நேரடியாகப் பேசி சரி செய்துகொள்ளவேண்டும்; அதுதான் சரியான தீர்வைக் கொடுக்கும்’///
இதை நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்கும்போது முதலில் நம்மைப் பற்றிய தவறான கருத்துதான் யாருக்கும் வரும்; நெருங்கிய சொந்தங்களில் இது நிகழ்வது தவிர்க்க முடியாதது.
ஆனால் தவறாகப் புரிந்து கொள்ளும் சொந்தங்கள், ஈகோவால் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் என்று பல விளைவுகள் நேரும் என்பதை நாம் வாழ்வில் அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்போம்.
இருந்தும் நாம் நம் வாழ்வின் கடைசி வரையிலும் நாம் இதை பரீட்சித்துப் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் இந்தக் கருத்து (இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல), அது போல ஓவ்வொரு படத்திலும் ஒவ்வொன்று நாம் கற்று நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அளவில் காதல், சண்டைக்காட்சிகள் கடந்தும், நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
அப்படி ஒவ்வொரு படத்திலும் என்ன இருக்கின்றன அதையும் பிறகு விரிவாகப் பார்ப்போம்.
இந்த, ‘அலா வைகுந்தபுரமுலொ’ படம் வெளிவந்தபிறகு, Google search இல் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தேடிய கேள்விகளை மொத்தமாக எடுத்து, அல்லு அர்ஜுன் அதற்கு பதில் சொல்லும் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள்.
இத்தனை லட்சம் இல்லை இல்லை இத்தனை கோடிக்கானவர்கள் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு கூகிளில் தேடுகிறார்களா என்று அவரே அதிசயித்துப்போனார்.
நம் சமூகம், நம் மக்கள், இலக்கியம், நூலகம், நீர்நிலை பாதுகாப்பு, அரசியல் என்று நம் கவனம் வேறு விஷயங்களில் முதன்மையாக வைத்திருக்கும்போது, திரைப்படத்துறையில் இத்தனை மக்கள் இத்தனை ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அதன் பிறகு ஒவ்வொன்றாகத் தேடி இவரின் படங்களைப் பார்ப்பது இந்த கூகுள் காணொலியினை யூட்யூபில் பார்த்த பிறகு நடந்தது.
ஒவ்வொரு படமாக தேடி எடுத்துப் பார்த்து முடித்த பிறகு, தானாக இந்தக் கட்டுரை எழுத நேர்ந்தது.
ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீடும், வருமானமும் இருக்கும் திரைப்படத்துறை. வெறும் சினிமாவை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கும் மக்களிடைய திரைத்துறை ஆளுமைகள் குறித்த இத்தனை கேள்விகள் இருக்குமா? இதில் வாழ்வை பணயம் வைத்து வாழ்க்கை இழந்தவர்களைப் பார்த்திருக்கிறோம்.
ஒருவர் வாழ்வை அடித்து ஜெயித்து வந்தவர்களைப் பார்த்திருக்கிறோம். எத்தனையோ சொல்லப்பட்ட சொல்லப்படாத கதைகள் உலவுகின்றன. கடலைப் போல விரிவான வியாபாரம் சார்ந்தது இந்தத் துறை. யாருக்குமே தெரியாத ரகசியங்கள் அடங்கிய சினிமா அரசியல் நிலவும் மாயத்தொழிற்சாலை இது.
இதில் தன் தந்தைக்காக, தந்தையின் வருமானத்துக்காக நடிக்க வந்து, உழைத்து முன்னேறி ஜெயித்து நிற்கும் ஒரு குழந்தையின் வெற்றியை, தன் சுயம் இழக்காத மனிதனின் ஆன்ம பலத்தை, எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருக்கிறாள் இவள்.
அலா வைகுந்தபுரமுலோ படத்தில் நம் தோழி நடிகை ரோகிணி அல்லு அர்ஜுனைத் தன் மகனைப் போல வளர்ப்பார். அதைப் போன்று எந்த ஜென்மத்திலோ தன் மகன் இவன் எனக் கொண்டாடும் ஒரு தாயின் எழுத்து இது.
ஒரு கேள்வி பதில் நிகழ்வில், தந்தையின் நிறுவனத்தில் பணிபுரிவது, வேறு பேனரில் பணி புரிவது தொடர்பான கேள்வி வரும்போது, அப்பாவின் பேனரில் பணி செய்து ஹிட் கிடைத்தாலும் தனக்கான சம்பளம் கிடைக்காது என்று சிரித்துக்கொண்டே சொல்வார்.
மற்ற யூட்யூப் காணொளிகள் எப்படி தானாக இவற்றைக்கொண்டு வந்து காட்டின என்பதற்கான இதுவரைக்கும் தெரியாது. இனி கீழே இருக்கும் அனைத்தும் கூகுளும், யூட்யூபும் தானாக கொண்டு வந்து காட்டிய சுட்டிகளே.
அப்பா அல்லு அர்விந்துடன் சேர்ந்து அல்லு அர்ஜுன் பேட்டி தரும் நிகழ்வுகள் சுவையாக இருக்கும். பார்வையாளர்களாக இருக்கும் ரசிக ரசிகைகள் கேட்கும் கேள்விகளும் அதற்கு அவர் அளிக்கும் பதில்களும் அனைவருடனும் பார்த்த கணத்திலேயே இயல்பான அன்புடன் ஒட்டிக்கொள்ளும் அந்த இயல்பு பார்ப்பது அரிது.
’தோச ஸ்டெப்’ யூட்யூப் வீடியோவுக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தன் மகளுடன் உரையாடும் இன்னும் இரண்டு காணொளிகள் பார்க்க நேர்ந்தது. அவையும் தாமாக கண் முன்னே வந்தவையே. இதிலும் மகள் அல்லு அர்ஹா அத்தனை உயிர்ப்புடன் பதில் சொல்லி இருப்பார்.
’கலர் என்ன Bay’ என்று அல்லு அர்ஜுன் தன் மகளிடம் கேட்க, தந்தையின் சட்டையில் இருக்கும் வண்ணத்தைக் காட்டி, அல்லு அர்ஹா, ‘பிங்க் bay’ என்று சொல்கிறாள். உடனே என்னையே பே என்கிறாயா பே என்று அல்லு அர்ஜுன் கேட்க, ஆமா பே என்கிறாள் மகள். இரண்டு முறை அப்பாவை பே என்கிறாயா என்று கேட்டதும், ஆமாம் பே என்று மீண்டும் சிரித்தபடி சொல்கிறாள்.
மூன்று முறை சொந்த டாடியை, own father ஐ, பெத்த தந்தையை பே என்று சொல்வாயா என்று கேட்க, ஆமாம் பே என்று சொல்ல… மீண்டும் இருவரும் இதையே பேசுவார்கள். உனக்கு பயம் இருக்கா, பயமே இல்லையா என்று அப்பா கேட்க, ஆமாம் பே என்று குழந்தை சொல்ல, மறுபடியும் பே சொல்கிறாய் என்று அல்லு அர்ஜுன் மகளைக் கொஞ்சும் காட்சி அவ்வளவு மகிழ்வான காட்சியாக இருக்கும்.
Bay என்றால் என்ன அர்த்தம் என்றும் தேடிப் பார்த்து ரசிக்கவும். அல்லு அர்ஜுன் தன் மகளிடம், ‘என் செல்லமே என் தங்கமே என் அம்மால்ல, அப்பா சொல்லும் பையனை கல்யாணம் செய்து கொள்வாயா’ என்று கேட்க, ம்ஹூம் என்று குழந்தை சொன்னவுடன், அப்பா சொல்வதைக் கேட்பாயா மாட்டாயா என்று மறுபடியும் கேட்க, செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு, சிரித்துக்கொண்டு ஓடும் குழந்தை உற்சாகத்தை அள்ளித் தெளிப்பாள். அந்தக் கொஞ்சல் நா புஜ்ஜி தல்லி, நா பங்காரு தல்லி என்னும் கொஞ்சல் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் குழந்தைகளை இப்படிதான் கொஞ்சுவோம்.
எந்த ஒரு கிரீடமும் வைத்துக்கொள்ளாமல், உங்களைப் போலதான் நாங்களும், எல்லோரைப் போலவும் குடும்பத்தில் இப்படிதான் இயல்பாக இருக்கிறோம் என்று தோன்ற வைக்கும் இந்தக் காணொளியை பார்க்கும்போது இயல்பாக ஒரு மகிழ்வு நமக்குள் பொங்கி எழும். இதுவரை இப்படி எந்த திரையுலக ஆளுமையும் இப்படி இருந்தில்லை.
அஞ்சலி படத்தில் வெளிவந்த, ‘அஞ்சலி அஞ்சலி அஞ்சலி’ பாடலுக்கு குழந்தை அஞ்சலி வந்ததைப் போல, அதே பாடலுக்கு குழந்தை அர்ஹா வரும் காட்சி, இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படத்தில் வரும் காட்சியைப் போலவே இருக்கும். சிறுமி அர்ஹா செஸ் விளையாட்டில் பயிற்சி பெற்று, 50 பேருடன் விளையாடி சாதனை படைத்த வீடியோவொன்றும் காணக் கிடைத்தது. இதுபோல, மனைவி அல்லு ஸ்னேகா ரெட்டி, மகன் அல்லு அயான், மகள் அல்லு அர்ஹா என்று குடும்பத்தை அன்புடன் கொண்டாடுவதைப் பார்க்கும்போது நெகிழ்வாக இருக்கிறது.
நடிப்பு என்னும் தொழிலில் இத்தனை நேரமின்மைக்கு நடுவிலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குவேன் என்பதை நேர்காணலிலும் சொல்லி இருக்கிறார். இதைதான் தானும் மகிழ்வாக இருந்து சுற்றி இருப்பவர்களையும் மகிழ்வாக வைத்துக்கொள்வது என்று குறிப்பிட்டிருந்தேன். இது மிகவும் சிரமமான விஷயம்.
இந்த சின்ன வயதில், திரையுலகில் இருப்பவர்கள், திருமணத்தையோ, குழந்தைகளையோ கொண்டாடிக்கொண்டு இப்படி இருப்பது இதுவரை யாரும் செய்யாதது. அனைவரும் தங்கள் குடும்பத்துடன் அன்பாக இப்படிதான் இருப்பார்கள்; இவர் வெளியிட்டதுபோல வீடியோ வெளியிட்டிருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம் தான். ஆனால், வெளியில் வரும்போதும் செயற்கை சிரிப்புடனும், கடுமையான முகத்துடனும், நடிப்பது போன்ற பாவனையுடனும் இருப்பவர்க்கு நடுவில் மிக மிக இயல்பாக சிரித்துக்கொண்டு உலவும் இவர் வித்தியாசமாகத் தெரிகிறார். இதை திரைப்பட வெளியீடு விழாக்களிலும் காணலாம்.
புஷ்பா திரைப்பட விழா நிகழ்வில் மேடையில் இல்லாமல், கீழே பார்வையாளராக அல்லு அர்ஜுன் அமர்ந்திருக்கும்போதும் அவர் இயல்பாக இருப்பதை கேமராக்கள் பதிவு செய்து வெளியிட்டவற்றைப் பார்க்கும்போது, அந்த இருப்பின் தன்மை அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும்.
அருகில் அமர்ந்திருக்கும் கதாநாயகியுடன் இயல்பாகப் பேசுகிறார். உதாரணமாக, மேடையில் சித் ஸ்ரீராம் பாடும் போது அவரை அவர் பாடுவதை அல்லு அர்ஜுன் ரசித்து கவனிக்கும் ஒரு காட்சி போதும். அதுவும் ‘சூப்பே பங்கார மாயனே ஸ்ரீ வள்ளி’ வரியைப் பாடும்போது அல்லு அர்ஜுனின் முக பாவனையைப் பார்க்க வேண்டும்.
ஆண் குரல் பாடல் அது. சித் ஸ்ரீராம் மேடையில் தன்னுடைய பாடலைப் பாடும்போது, அதை எங்கோ இருந்து யூட்யூபில் பார்க்கும் நாம் அவருடன் இணைந்து நாமும், சூப்பே பங்கார மாயனே என்று பாடுகிறோம்.
விழாவில் அல்லு அர்ஜுன் அருகில் அமர்ந்திருக்கும் புஷ்பா பட கதாநாயகி அந்தப் பாடலை நம்மைப் போலவே வாயசைத்துப் பாடுகிறார்; அல்லு அர்ஜுன் வாயைத் திறக்கவேயில்லை. படத்தில் அவருக்கான பாடல் அது. ஆனாலும் அசையாமல் மேடையில் பார்வை நிலைத்திருக்க, அப்படியே சித் ஸ்ரீராமின் பாடலில் ரசனையுடன் ஆழ்ந்து போயிருப்பதைக் காணலாம்.
நடிகர் விஜய்க்கும் இவருக்கும் இந்தப் பாடலில் தான் ஒரு வேறுபாடு இருக்கிறது. வாய்ப்பு இருக்கும்போது விஜய் பாடி விடுவார். அல்லு அர்ஜுன் பாடல் பாடுவதில்லை. ஒதுங்கி விடுவார். ஏனோ நேர்காணல்களிலும் பாட மாட்டேன் என்றே சொல்லி விடுவார்.
ஒவ்வொரு படத்திலும், தன்னுடன் நடிக்கும் இணை கதாபாத்திரங்களுக்கென தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவர்கள் இருக்கும் காட்சியில் இவரின் நடிப்பு இன்னும் மெருகேறி இருக்கும்.
கங்கோத்ரி முதல் படத்தில் பிரகாஷ்ராஜ் நேசிக்கும் பாத்திரமாக இருந்தாலும், பாதி காட்சிகளுக்குப் பிறகு எதிர்க்கும் கதாபாத்திரமாக மாற நேரிடும். சமாளித்து நடித்திருப்பார். Bunny பன்னி, பத்ரிநாத், S/O சத்யமூர்த்தியிலும் பிரகாஷ்ராஜ் உடன் நடிப்பார். நடிப்பு ஆரம்பித்து அநாயசமாக சிறந்த நடிப்பைக் கொடுத்திருப்பார்.
அந்த கதாபாத்திரங்களுடனான நட்பும் நடிப்பும் எப்படி இருக்கும்?
தொடரும்…
அன்புடன்
மதுமிதா
19.04.2022
Leave a Reply