நீரில் மின்னும் நட்சத்திரங்கள் (ராணியின் வருகை) பாகம்-3
ராணியின் வருகை :
(பாகம்-3)
ராணி ஜந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவள் மதுரையில் ஜெய்ஹிந்த்புரத்தில் வசிக்கிறாள். அது மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. அங்கு வீடுகள் ரயில்பெட்டி போன்று தொடர்ச்சியாக இருந்தன.
தெருக்களில் கழிவு நீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆடுகளும் , கோழிகளும் வீதிகளில் வளர்க்கப்பட்டு வந்தன. சிலர் வீடுகளில் புறாக்களை வளர்த்தனர். ராணி கிளி, புறா, நாய், ஆடு என எல்லாவற்றையும் வளர்த்து பராமரித்து வந்தாள்.
அப்பகுதியில் தெருக்கள் பலவிதம். பட்டியக்கல் பதித்தத் தெருக்கள். செம்மண் தெருக்கள் . மணல் தெருக்கள். அவள் மணல் ரோட்டில் வசித்து வந்தாள்.
அவளது தெருவின் தொடக்கத்திலும், முடிவிலும் இரண்டு குப்பை மேடுகள். அந்த மேடுகளே கோழிகள், ஆடுகளின் மேய்ச்சல் நிலங்கள். தெருக்களில் தண்ணீர் குழாய்களும் உண்டு.
எப்போதும் குழாய்களுக்கு முன்பு பிளாஸ்டிக் குடங்கள், வாளிகள் வரிசையில் காத்துக் கிடந்தன. சண்டையில்லா நாட்களே இல்லை. ஏதாவது ஒரு குடம் அல்லது வாளி உடைந்து விடும்!
ராணியின் கிளியின் பெயர் குறளி. அது மனிதர்களைப் போல் பேசும். மதுரை மீனாட்சியின் கிளியைப் போல் அவளது தோளில் அமர்ந்திருக்கும். பள்ளிக்கு உடன் செல்லும்.
வகுப்பறைக்கு அருகில் உள்ள மரத்தில் அமர்ந்து பாடத்தைக் கவனிக்கும். இடைவேளையில் கிளிக்குப் பழம் தருவாள். நண்பர்களுடன் கிளியை உரையாடச் செய்வாள். கிளி ஆசிரியரைப்போல் கேள்விகள் கேட்கும்.
மதியம் ஆனதும் ,பறந்து வீட்டிற்குச் செல்லும். மீண்டும், மாலை பள்ளி முடியும் நேரத்தில் வந்துவிடும். இருவரும் நண்பர்களுடன் பேசிக் கொண்டே வருவார்கள்.
மாலை வீட்டிற்கு வரும் ராணியை நாய் டாமி வாலை ஆட்டி வரவேற்கும். அவள் மீது கால் வைத்து தாவும். அவள் டாமியை தூக்கிக் கொள்வாள். குறளி ‘இறக்கு இறக்கு ‘ என கத்திக் கொண்டு பரணில் அமரும்.
டாமி குரைத்து துரத்துவான். குறளி ‘ டாமி போ! ‘ என்று சொல்லும். ராணி வேடிக்கையை ரசிப்பாள்.
சிறிதுநேரத்தில் டாமியின் உடம்பின் மீது குறளி உட்கார்ந்து கொள்ளும். அவள் வீட்டுப்பாடங்களை எழுதுவாள். பின்பு , கிளிக்கு மிளாகாய் உண்ணக் கொடுப்பாள். கொய்யப்பழம் விரும்பி சாப்பிடும்.
நாய்க்கு சாதமும் , முட்டையும் பிசைந்து தருவாள். புறாக்களுக்கு அரிசி போடுவாள். சில சமயம் புறாக்களும் அவளது தோளில் வந்து அமர்ந்து கொள்ளும். அப்போது குறளி, “டாமி, புறாவை விரட்டு!” என்று கூறும். டாமியும் “லொள், லொள்’ என குரைத்து விரட்டும்.
ஒருநாள் மதியம் 2 மணிக்கு வகுப்பில் ராணி கணக்குகளைச் செய்து பார்த்துக் கொண்டிருந்தாள். குறளி , “கீ…! கீ…! ” என குரல் எழுப்பி பறந்து வந்தது. குறளியின் குரல் கேட்டு திரும்பினாள்.
“ராணி! அங்க என்ன வேடிக்கை. “என ஆசிரியர் அதட்டினார்.
“மிஸ். குறளி பதறி கத்துது…” என்றாள்.
“எப்ப பாரு ,கிளியை வச்சு விளையாடிகிட்டே இரு! படிப்புதான் கெட்டு போக போகுது.”
“ஆமாம்! ஆமாம். படிப்பு கெட்டுதான் போக போகுது.” என்றது கிளி.
“ஸ்…” என உதட்டில் ஆளகாட்டி விரலை வைத்து அதட்டினாள்.
“உன் தாத்தாவுக்கு உடம்புக்கு முடியலையாம்! பார்த்துக்க ஆள் இல்லையாம். நீங்க குடும்பத்தோடு ஊருக்கு போகப் போறீங்க. உங்கம்மா டி.சி வாங்க வர்றாங்க!” என்றது குறளி.
ராணி கண் கலங்கினாள்.
தொடரும்…
Leave a Reply