வரலாற்று ஆய்வாளர் அறம் கிருஷ்ணன் நேர்காணல்!
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் :-
வரலாற்று ஆய்வாளர் அறம் கிருஷ்ணன் நேர்காணல்!
புதுவரவு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அடையாளமாக விளங்கும் மதிப்பிற்குரிய அறம்கிருஷ்ணன் அவர்களிடம் உரையாட உள்ளோம்.
கவிஞர், எழுத்தாளர், தொழிற்சாலை நிறுவனர், அறம் இலக்கிய அமைப்பின் தலைவர், அறம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர், ஓசூர் 11 வது புத்தகத் திருவிழா தலைவர், வரலாற்று ஆய்வாளர், ஓசூர் அட்டைப்பெட்டி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இப்படி பன்முகத் தன்மையைக் கொண்ட அற்புத மனிதர் அறம் கிருஷ்ணன்.
புதுவரவு மாத இதழின் சிறப்பு நேர்காணல் பகுதியில் அறம் கிருஷ்ணனின் பன்முகத் திறமைகளை நம்மோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறார் வாருங்கள் அவரோட பயணிப்போம்…
தான் காணும் நடுகற்கள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், கோட்டைகள் இவற்றின் பழமையையும், பெருமையையும் உலகறியச் செய்வதைத தன் பெரும் பணியென எண்ணி பணியாற்றி வருகிறார்.
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய் ‘‘இராஜேந்திர சோழன் & அறிய தகவல்கள் 1001’’ என்ற வரலாற்று நூலை வெளியிட்டதன் மூலம், தான் போகும் பாதையை பலரும் வியந்து திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மேலும், இவருடைய இலக்கு என்பது தனது தேடலின் விளைவாக பலரும் நேசிக்கும் நூலாக வெளிவந்த ‘‘வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்’’ என்ற பொக்கிஷம். புதுவரவு மாத இதழிற்காக உங்களின் நேரம் ஒதுக்கி எங்களிடம் உரையாடுவதற்கு நன்றி!
உங்கள் தமிழ் ஆர்வம் பற்றி சொல்லுங்கள். உங்கள் கல்லூரி படிப்பு எங்கே?
பள்ளியில் படிக்கும்போதே மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டேன். இலக்கியத்தில் ஆர்வம் அதிகம்.
நிறைய புத்தகங்கள் படிப்பேன். தமிழ் பேராசிரியர் ஆக வேண்டும் என்பதே என் ஆசை. கிருஷ்ணகிரி கலைக்கல்லூரியில் தமிழ் பாடப் பிரிவில் சேர்ந்தேன்.
அதன் பிறகு சில மாதங்களிலேயே திருப்புமுனையாக தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்தேன். என் முதல் நூல் வெளியீடு அங்குதான் நடைபெற்றது.
உங்கள் முதல் படைப்பு மற்றும் முதல் நூல் வெளியீடு பற்றி சொல்லுங்க… நூலின் பெயர் என்ன?
1988 ல் ‘‘அழகின் தாகம்’’ என்ற நூலை வெளியிட உதவியவர்கள் என் தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினர். என் நூலிற்கு அப்துல் ரகுமான் அவர்கள் முன்னுரை எழுதினார்.
இந்திய அளவில் ஒரு தொழில் நுட்பக் கல்லூரியில் வெளியிடப்பட்ட முதல் நூல் என்ற சிறப்பைப் பெற்றது. அப்துல் ரகுமான், அப்துல் காதர் மற்றும் பேராசிரியர் இக்பால் போன்ற சான்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டது மகிழ்ச்சியான தருணம்.
தருமபுரி மாவட்டத்தில் இருந்து நூலகத்திற்கு தேர்வான முதல் நூல் ‘‘அழகின் தாகம்’’.
நீங்கள் எந்த ஆண்டு ஓசூரில் பணியில் சேர்ந்தீர்கள்?
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த தொழில் நகரமான ஓசூருக்கு 1990 ல் வந்தேன். அன்றைய காலகட்டத்தில் மிகுந்த சிரமங்களுக்குப் பின் 1992 ல் வேலை கிடைத்தது.
இப்படியாக நான் வேலை பார்க்கும் கம்பெனியில், தொழில்முறை அனுபவமே என்னால் தொழிற்சாலை துவங்க முடியும் என்ற நம்பிக்கை அளித்தது.
1990 தொடங்கி 2000 ஆண்டு வரை பத்தாண்டு காலம் பசியும் பட்டினியும் நிறைந்தது. வறுமை வாழ்வின் நிழலாக தொடர்ந்த காலமது. பத்தாண்டு உழைத்த நிறுவனம் ஒருநாள் நிரந்தரமாக மூடப்பட்டது.
வாழ்க்கை மீண்டும் கேள்வி குறியானது. பத்து வருட ஸ்பிரிங் கம்பெனி அனுபவம் வீனாய் போனது. எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு புதிய தொழிற்சாலையில் கால்பதிக்கிறேன் மீண்டும் ஒரு சாதாரணமான ஊதியத்துடன் வாழ்க்கை முதலில் இருந்து தொடங்குகிறது.
இந்த வேலைதான் பின்னாளில் என் வாழ்க்கையை நிலை நிறுத்தப்போகிறது என்று அப்போது எனக்கு தெரியாது. அவ்வளவு எளிதாக வாழ்க்கை நம்மை விட்டுவிடுமா என்ன 2003 ஆம் ஆண்டோடு முற்று பெருகிறது.
மூன்று வருட தொழில் அனுபவத்தை வைத்துக்கொண்டு ஓசூரில் அன்றைய நிலையில் அட்டைப்பெட்டி தொழில் முதல் மூன்று நிலைகளில் இருந்த நிறுவனங்களிடம் வேலை கேட்டு செல்கிறேன்.
இரண்டு நிறுவனங்கள் ஏதோ காரணங்களால் வேலை வழங்கவில்லை. ஒரு நிறுவனம் மட்டும் மார்கெட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கியது.
இந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்த நான் ஓசூர் வேண்டாம் என்று கோவையை தேர்வு செய்தேன்.
மார்கெட்டிங் என்றால் எனக்கு என்னவென்று தெரியாது, ஆனால் எப்படியாவது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாக தெரியாத ஒன்றை தெரியும் என்று பொய் சொல்லிவிட்டு, சொல்லிய பொய்யை நிஜபடுத்த வேண்டும் என்ற ஆவலுடன், அதுவரைக்கும் பயணபடாத புதிய திசை நோக்கி என் கால்கள் பயணப்பட்டது.
கோயமுத்தூர் எனக்கு தாய் வீடு போல் மாறியது. கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களிலும் ஆர்டர்களை எடுத்தேன்.
மிகச்சிறப்பாக நகர்ந்து கொண்டிருந்த வாழ்க்கையில் மீண்டும் ஒரு இடத்தில் முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தமுறை எடுக்கும் முடிவு வாழ்க்கையை மாற்ற கூடியதாக இருக்க வேண்டும், குறைந்தது நூறு பேருக்காகவது வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவோடு முதல் அடியை எடுத்து வைத்தேன். 2009 மே மாதம் 31 ஆம் தேதி மறக்க முடியாத நாளாக மாறியது. தொழில் முனைவராக மாற்றம் பெற்ற நாளது.
உங்கள் தொழிற்சாலையின் வளர்ச்சி பற்றியும், அறம் இலக்கிய அமைப்பின் தொடக்கம் பற்றியும் சொல்லுங்கள்?
2009 ல் நண்பருடன் இணைந்து Universal Packages என்ற நிறுவனம் தொடங்கினேன். பின் தம்பியுடன் பயணித்து எங்கள் தொழிற்சாலை நன்கு வளர்ச்சியடைந்தது.
0% மூலதனத்தில் மிக தைரியமாக தொழிற்சாலை துவங்கி, இன்று 100 பேர் கொண்ட ஒரு தொழிற்சாலையாக வளர்ந்துள்ளோம்.
ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்களமே…! என்ற பாடல் வரிகளில் வரும் ‘‘ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்…’’ இந்த வரிகள் என் வாழ்க்கையை மாற்றிப்போட்டது.
அன்றைய காலகட்டத்தில் புதிய தலைமுறை வாத இதழில் நடுப்பக்கத்தில் இந்த வரிகளை போட்டு மிகவும் அழகாக பிரிண்டிங் செய்யப்பட்டிருந்த பக்கத்தை எடுத்து எனது பார்வையில் தினமும் படும்படி ஒட்டி வைத்திருந்தேன்.
நிஜவாழ்வில் ஒருநாள் நிறைவேறியது. கல்லூரி நண்பருடன் இணைந்து யுனிவர்சல் பேக்கேஜ் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டாலும் ஒரு வருடத்திற்குள்ளாகவே தொழிலை தொடர்ந்து செயல்முறைபடுத்துவதற்கான வழியை பெற்றுக்கொண்டேன்.
நிர்வாகத்தை திறம்பட செய்வது எப்படி என்ற வழிமுறைகளை கண்டறிய தொடங்கிய நிலையில் நண்பர் இந்த கம்பெனியை தாங்களே வைத்து கொள்ளுங்கள் அதுவே சரியாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்தார்.
எப்போதுமே எதையுமே சவலாக ஏற்றுக்கொள்ளும் பழக்கம் இயல்பாகவே இருந்த காரணத்தால் மீண்டும் தம்பியுடன் இணைந்து இன்னும் அதிக உத்வேகத்துடன் செயற்பட தொடங்கினேன்.
வாழ்க்கை அப்படி ஒன்றும் நம்மை இலகுவாக விட்டு விடாது. துன்பங்களும், துயரங்களும் நமது தோள்மீ‘து பயணம் செய்வதை விடாது என்பதால் மீண்டும் ஒருநாள் தம்பியும் விலகுவதாக தெரிவித்தார்.
இந்த நிமிடம் எனக்கு பயம் வரவில்லை. நேர்மாராக துணிவு வந்தது. நாம பார்க்காத போராட்டமா என்ற கேள்வியுடன் அதனையும் சவாலாக ஏற்று வெற்றிகரமாக 13 ஆண்டுகளை கடந்து சிறந்த முறையில் வெற்றிகரமாக தொழிற்சாலையை நடத்தி வருகிறேன்.
உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் போதும் வாழ்க்கையில் வெற்றி பெருவது பெரிய விஷயமில்லை. முதலீடே இல்லாமல் கூட முன்னேற் முடியும்.
செய்யும் தொழில் நேர்மையும், தொழில் பற்றிய தெளிவான புரிதலும் இருந்தால் போதும் எல்லோராலும் வாழ்க்கையில் வெற்றி கொள்ள முடியும்.
2012 ஆம் ஆண்டு ‘‘அறம் இலக்கிய அமைப்பு’’ என்பதை தொடங்கி மிகச் சிறப்பாக பல நிகழ்வுகளை நடத்தியுள்ளோம்.
அமைப்பின் நோக்கம் என்னவாக இருந்தது?
அரசுப்பள்ளி மாணவர்களை இணைத்து பல நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்பது மற்றும் தமிழ் ஆர்வலர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பது.
20 வருடமாக அடங்கி இருந்த இலக்கிய ஆர்வம் 2012 ஆம் ஆண்டில் மீண்டும் துளிர்விட தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அறம் இலக்கிய அமைப்பை தொடங்கி மாதந்தோறும் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இலக்கிய விழாக்களை நடத்தி வருகிறோம்.
உங்கள் இலக்கிய அமைப்பு பணிகளில் திருப்புமுனையாக இருந்த நிகழ்வு ஏதேனும் உண்டா?
நிச்சயம் உண்டு. 2012 முதல் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் பள்ளி மாணவர்களை (கிட்டத்தட்ட 20 அரசுப்பள்ளி) இணைத்து மாதந்தோறும் தமிழ் சார்ந்த விழாக்களை நடத்தினோம். என் பயணம் 2014 ல் திசை மாறியது.
வரலாற்றில் ஈடுபாடு ஏதும் அப்போது இல்லை. 2014 இல் ஜூலை 25, 26 தேதிகளில் கங்கை கொண்ட சோழபுரத்தில் விழாவிற்காக அழைப்பு வந்தது.
அந்த விழாவில் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமான என் வாழ்வில் நான் நேர்கோட்டில் பயணம் செய்ய உற்றதுணையாக எழுத்தக்களின் மூலம் என்னை பெரிதும் கவர்ந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் கலந்து கொள்வதை அறிந்தேன்.
விழாவிற்கு சென்றேன். ராஜேந்திர சோழனுக்கு ஆயிரமாவது ஆண்டு விழா எடுக்கிறார்கள். பாலகுமாரன் அவர்களை நேரில் சந்திப்பது அப்போதுதான். அந்த நாள் முதல் நான் வரலாற்றைத் தேடத் தொடங்கினேன். இப்போது வரை தொடர்கிறேன்.
உங்கள் ‘‘இராஜேந்திர சோழன் & அறிய தகவல்கள் 1001’’ நூல் வெளியீடு எப்படி நடந்தது? அந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?
இராஜேந்திர சோழனை நாம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 2015 ஆம் ஆண்டு தகவல்கள் வெளியிட வேண்டும் என எண்ணி அவரைப் பற்றிய தகவல்கள் நிறைய சேகரித்து நூல் வெளியிட முற்பட்டேன்.
நண்பர் கோமகன் அவரிகளின் உறுதுணையோடு முயற்சி செய்யப்பட்டு, பல முன்னேற்பாடுகளுடன், பாலகுமாரன் அவர்கள் என் நூலை வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டேன்.
ஆனால், அப்போது அவர் உடல்நிலை சரியாக இல்லை. வாய்ப்புகள் இல்லை என்றபோதும், அவரை அனுகி நேரில் சந்தித்து சம்மதம் பெற்று மிக பிரம்மாண்டமாக விழா நடந்தது. என் கனவு நாயகன் பாலகுமாரன் அவர்கள் என் நூலை வெளியிட்டார்.
உங்கள் மரபு நடை பயணம் பற்றி கூறுங்கள்?
2015 முதல் என் மனம் மண்ணின் வரலாறு நோக்கி நகர்ந்தது. தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து பல தகவல்கள் சேகரித்தேன்.
தருமபுரி & கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள், கல்வெட்டுகள், கோட்டைகள் இப்படி பலவற்றை ஆராய்ந்து தகவல்களை வெளியிட்டோம். மாணவர்களிடத்தில் வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
அதற்காகவே மரபு நடைப்பயணம். ஏராளமானோர் பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பயணமும் தேடலின் பயணம்; வெற்றி பயணம்.
உங்கள் வரலாற்றை மக்களிடம் எப்படி கொண்டு சென்றீர்கள்?
வரலாற்றை செய்திகளாகத் தருகிறோம். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. வசந்த் டிவியின் ‘‘மண் பேசும்‘‘ சரித்திரம் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிடப்படுகிறது. ஒரு வருடம் தொடர்ந்து 52 வாரங்கள், 15 பத்திரிகைகளில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் ஒரு சாதனை என்றே சொல்லலாம். தெலுங்கு, தமிழ், ஆங்கில மொழிகளில் தொடர் வரலாற்று செய்திகள் மூலம் மக்களை அனுகினோம்.
சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட நூல் ‘‘வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்’’ பற்றி சொல்லுங்கள்?
2022 இந்த ஆண்டில் ஜூலை மாதம் ‘‘வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்‘‘ நூலை வெளியிட்டேன்.
மூன்று மாதங்களிலேயே 700 பிரதிகள் விற்பனையானது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. பலரும் தொடர்ந்து நூலை வாங்கி படிக்கின்றனர். இதற்கிடையில் ‘‘புதிய செப்பேடு’’ என்ற காலாண்டு இதழை கொண்டுவந்தோம். பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்க்கப்பட்டது.
உங்கள் அடுத்த இலக்கு பற்றி?
இராஜேந்திர சோழன் அரிய தகவல்கள் முதல் மற்றும் இரண்டாவது பாகமும் சேர்த்து முழுமையாக இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன்.
தங்களின் வரலாற்றுப் பயணங்கள் மேலும் சிறப்புடன் தொடர தங்களின் அடுத்தகட்ட இலக்கை வெற்றிகரமாக தொடங்க புதுவரவு மாத இதழின் சார்பாக நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a Reply