புஷ்பா திரைப்படத்தை முன்வைத்து, திரைப்படத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுனின் எழுச்சியும் ஆட்சியும்-1

Share Button

Allu Arjun : Pushpa – புஷ்பா (The Rise)

புஷ்பா திரைப்படத்தை முன்வைத்து, திரைப்படத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுனின் எழுச்சியும் ஆட்சியும் – 1

///மனித உயிர்களை விட செம்மரக் கட்டைகளுக்கு மதிப்பு அதிகமோ. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட….///

மேலிருக்கும் இந்த வரிகளை, 2015 ஆம் வருடம் ஏப்ரல் 9, வியாழன் இரவு 8.07 மணிக்கு பேஸ்புக்கில் பதிவிட்டதாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டி காட்டுகிறது.

https://www.facebook.com/1425145499/posts/10207522755213409/

செய்தித்தாள்களில், ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தலில் தமிழர்கள் கைது என்று அடிக்கடி வரும் செய்திகளைப் பார்த்து மனம் நொந்து எழுதிய நாட்களை இதை எழுதும்போதும் நினைவு கூர்கிறேன்.`

வாழ்க்கையே ஒரு நாடகமேடை. வாழ்க்கை ஒரு மாயை. இப்படி இருக்கையில், திரைப்படமோ திரைப்படத் துறையோ நிஜம் இல்லாத நிழல்; இன்னும் மாயை. எத்தனையோ பேரை வாழவும் வைத்திருக்கிறது. பலரை மீண்டு எழ முடியாமல் வீழ்த்தியும் இருக்கிறது.

திரைப்படத்தில் அறம் பற்றி பேசுவது, குடும்பக் கதைகளாக எடுப்பது, உறவுகளின் மேன்மையைப் பேசுவது, தீமை அழிந்து நன்மை நிலைப்பது, தீயவர்கள் அழிந்து நல்லவர்கள் கடைசியில் வாழ்வார்கள் என்பது போன்ற திரைக்கதைகள் மறைந்து விட்டன.

சைக்கோ, சைக்கோ திரில்லர், தொடர் கொலைகள், துப்பறியும் கதைகள், பேய் பிசாசு கதைகள் இவை கொஞ்சம் அதிகமாகவே வெளிவருகின்றன. இவற்றுக்கிடையில் சில நல்ல படங்களும் வெளி வந்து வரவேற்பைப் பெறுகின்றன.

கதாநாயகர்கள், வில்லன்கள் என்னும் கதாபாத்திரங்கள் மாறி, வில்லன்கள் கதாநாயகர்களாகவும், அவர்களை விட இன்னும் கொஞ்சம் மோசமானவர்கள் வில்லன்களாகவும் வரும் கதைகள்தான் இப்போதைய திரைப்படங்களில் அதிகமாக வருகின்றன.

நெகடிவ் கதாபாத்திரங்கள் கதாநாயகனாக அறிமுகமாவதும், கதாநாயகிகள் அப்படிப்பட்ட கதாநாயகர்களை விரும்புவதுமாக படங்கள் தொடர்ந்து வருகின்றன. எல்லா மொழிப்படங்களிலும் இந்த மாற்றம் நீக்கமற நிறைந்திருக்கின்றது.

அப்படி ஒரு நெகடிவ் கதாபாத்திரம் கதாநாயகனாக வரும் படம் தான் புஷ்பா (தி ரைஸ் The Rise) . புஷ்பா, புஷ்பராஜ் என்னும் கதாபாத்திரமாக கதாநாயகனாக அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.

காட்டின் அழகு, இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் போன்ற காட்சி அவ்வளவு இனிமையாக இருக்கிறது. அங்கே வசிக்கும் எளிமையான மனிதர்கள் எப்படி கொஞ்சம் அதிகாரம் கொண்டவர்களால் வேலை வாங்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள்; சுரண்டப்படுகிறார்கள் பெண்கள் எப்படி உபயோகப்படுத்தப்படுகிறார்கள் என்பதெல்லாம் கதையின் போக்கில் வருபவை.

கதையோ செம்மரக் கடத்தல், அதில் ஈடுபடுவர்களின் வாழ்க்கையைச் சொல்வது. கடத்தலில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கை என்றால், செம்மரக்கட்டைகளை வெட்டுவதில் ஆரம்பித்து, இந்தக் கடத்தல், கடத்திச் செல்வதை போலீசில் அகப்படாமல் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தல், அதை விற்றல், என்ன விலைக்கு விற்பது என்பது ஆகிய அனைத்திலும் அடித்தட்டிலிருந்து, அரசியல் தலைமை வரை உள்ள அனைத்து வகை மனிதர்களையும் அப்படியே கண் முன்னால் காண்கிறோம். அந்த வகையில் கதையின் கருவும் காட்சிப்படுத்துதலும் புதியவை.

எப்போதும் திரைப்படங்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் நிகழும் அதே துரோகங்கள், வன்முறைகள், கோரச் சண்டைகள், பழி வாங்குதல்கள், கொலைக்காட்சிகள், இரத்தம் சிந்தும் காட்சிகள் நிறைந்த கதைதான்.

ஆனால், காட்சிகள் ஒவ்வொன்றும் புதிதாக ஒரு கருத்தை எடுத்துச் சொல்கிறது. விறுவிறுப்பு குறையாமல் தொய்வே இல்லாமல் கடைசி வரை படம் செல்கிறது.

புஷ்பா சுயம் சார்ந்து, சுயமரியாதையுடன், எந்த இடத்திலும் தன்னையும், தன் தாயையும், தன்னைச் சார்ந்தவர்களையும் விட்டுக்கொடுக்காமல், எந்தச் சூழலிலும் தானும் மகிழ்வுடன் இருந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்வுடன் இருக்கச் செய்கிறான்.

தனது நன்மைக்கும் தன்னைச் சார்ந்தவர்களின் நன்மைக்கும் யோசித்து உழைக்கிறான். செய்யும் தொழில் சரியானது அல்ல என்றாலும், தான் செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருக்கிறான்; பெண்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறான்.

தனக்கு எஜமானர்களாக இருப்பவர்களிடம், அடிபணியாமல், சம்பளம் அல்ல பங்குதாரராக இருந்தால்தான் சரிக்கு சமமாக இருக்க முடியும் என்று யோசித்து தன்மானம் குறையாமல் நடந்து கொண்டு தன்னைத் தானே நேசித்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உயர்வின் பாதைக்கு எடுத்துப் போகிறான். யோசனை அல்ல புஷ்பாவின் இயல்பும் ஆளுமையும் அதுவே.

இது மிகப் பெரிய வெற்றியை அவனுக்குத் தருகிறது. தன் பிறப்பை இழிவு செய்யும் சகோதரனிடம் கூனிக்குறுகிப் போவதும், தன் பிறப்பை மறைமுகமாக சொல்லி காயப்படுத்த தன்னைச் சீண்டும் போலிஸ் அதிகாரியிடம், நேரம் பார்த்து வெகுண்டு எழுந்து பதில் சொல்வதும் ஒரு மனிதனின் உளவியல் சார்ந்த வலி, வேதனையின் வெளிப்பாடு.

இந்தக் கதாபாத்திரத்தின் கடத்தல் தொழிலை கவனத்தில் கொள்ளாமல், ஆளுமையை மட்டும் மனதில் இருத்திக்கொண்டால், ஒவ்வொருவரின் வாழ்வின் வெற்றியும் தவிர்க்க முடியாது.

தோல்வியில் பாடம் கற்று அனுபவமாக்கிக்கொண்டு வெற்றியை நோக்கிச் சென்று வெற்றியின் கனியைப் பறித்துச் சுவைத்தல்தான் எத்தனை சுவையானது. இது பார்ப்பவர்களை ஈர்த்து விரும்பச் செய்கிறது.

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் இதில் அடிமட்டத் தொழிலாளியாக பொறுக்கியாக காட்டப்பட்டிருக்கிறார். அப்படியே கதாபாத்திரத்தில் ஒன்றி புஷ்பாவாகவே அவர் மாறியமைக்கு டைரக்டர் சுகுமார் உறக்கமில்லாமல் பணியாற்றியதே காரணம் என்று, தன் அர்ப்பணிப்பு உணர்வுக்கு முக்கியம் தராமல், சுகுமாருக்கு மொத்த புகழாரத்தையும் சூட்டி இருக்கிறார்.

கேசவன் கதாபாத்திரம் இந்தக் கதையைச் சொல்வதாக படம் ஆரம்பிக்கிறது. கேசவனின் பார்வையில் புஷ்பராஜ் ஒரு கதாநாயக ஆளுமையில் உயர்ந்தெழுகிறான். ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கிறார்கள்.

காட்சியைக் காணும்போது அருகில் இருந்து அங்கே நடக்கும் நிகழ்வுகளைப் பார்ப்பது போல உணரச் செய்வது, ஒளிப்பதிவாளர் செய்யும் அற்புதம்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை விருந்தளித்திருக்கிறார். பாடலாசிரியர் நியாயம் செய்திருக்கிறார். பாடக பாடகிகள் கலக்கி இருக்கிறார்கள். பாடல்கள் அனைத்தும் ஐந்து மொழிகளிலும் தொடர்ந்து சிறப்பாக பேசப்பட்டாலும், முதல் பாடலான பசி முகத்தில் அறையும் உண்மை. ஒவ்வொரு பசியும் ஒவ்வொன்றைத் தின்பது இயற்கை வகுத்த விதியல்லவா. படத்தின் கதையும் இதையே சொல்கிறது.

சித்ஸ்ரீராம் பாடிய, ’நின்னு சூஸ்தூஉண்டே கண்னுல ரெண்டு திப்பேஸ்தாவே’ பாடலில் ‘சூப்பே பங்கார மாயனே’ குழந்தைகளும் விரும்பிப் பாடி ஆடும் பாடலாக மாறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அல்லு அர்ஜுனின் நடனம்.

மைக்கேல் ஜாக்சனைப் போல கலக்கலாக நடனம் ஆட விரும்பி, தான் நடிக்க வந்ததிலிருந்து ஒவ்வொரு படத்திலும் நடனத்துக்கு முக்கியம் அளித்து நடித்த அல்லு அர்ஜுனுக்கு, பசி பாடலும், ‘ஊ அண்டாவா’ பாடலும் நடனத்துக்கான இடத்தைக் கொஞ்சம் அளித்தது.

ஆனால், இடது பக்கத் தோளை சற்றே லேசாக தூக்கி வைத்து, செருப்புக் காலுடன் லேசாக காலை இழுத்து நடந்து, கண்களில் கண்ணாடியை மாட்டி, செருப்பு கழண்டதும், மறுபடியும் காலில் செருப்பை மாட்டி திரும்பி வந்து வலது கையை கழுத்தில் இருந்த கன்னம் வரை எடுத்து வந்து நிறுத்துவது, அந்தப் பாடலின் இரண்டு வரி, ஹிட் ஆகுமென்று கணித்தவர்களை என்னவென்று சொல்வது.

காவல் நிலைய காட்சிகள், ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளும் போதும் உடனடியாக அதற்கான தீர்வைத் தானாக கண்டுகொள்வது அதை செயல்படுத்துவது, சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் கண்கள், பேச்சு, உடல்மொழி மொத்தமும் அப்படி ஒத்துழைக்கின்றன.

இப்படி இருக்கும் வாழ்க்கையை வாழ்பவர்களுக்குள்ளான காதலும், மகிழ்வும், நட்பும், குடும்பமும் காட்சிப் படுத்திய விதமும், வெற்றியும் அடுத்து புஷ்பா (தி ரூல் The Rule) எப்படி வரும் என்னும் எதிர்பார்ப்பை எழுப்பி இருக்கிறது.

இந்தப் படத்தின் வெற்றி நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் மட்டுமல்ல, இந்தியத் திரைப்படத்துறையில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக உருவாகி இருக்கிறார் என்பதை பறை சாற்றி இருக்கின்றது.

ஏதோ ஒரு ஜென்மத்தில் இவளுக்கு மகனாகப் பிறந்திருக்கிறாய் Bunny பத்ரி நாத் 🙏 அன்பு மகன் அல்லு அர்ஜுனுக்கு மென்மேலும் புகழுடன் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.
அல்லு அர்ஜூன் எழுச்சியும் ஆட்சியும்

தொடரும்…

அன்புடன்,

மதுமிதா
14.04.2022

 

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *