புஷ்பா திரைப்படத்தை முன்வைத்து, திரைப்படத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுனின் எழுச்சியும் ஆட்சியும்-2
Allu Arjun : Pushpa – புஷ்பா (The Rise)
புஷ்பா திரைப்படத்தை முன்வைத்து, திரைப்படத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுனின் எழுச்சியும் ஆட்சியும் – 2
திரைப்படங்கள் கற்பனைக் கதைகளாக எடுக்கப்பட்டாலும், உண்மைக் கதை சற்றே கற்பனை கலந்த கதையாக கொடுக்கப்படும்போது அது பார்க்கும் ஈர்ப்பைக்கொடுத்து ரசிக்கும் சுவையை சற்றே அதிகரித்து விடுகிறது.
கற்பனைக் கதைகளைச் சார்ந்த பல பிரம்மாண்டமான படங்கள், பல மொழிகளில் வெளிவந்திருந்தாலும், உண்மை நிகழ்வான சிறுபான்மையினர் கஷ்டப்படும் செம்மரக் கடத்தல், ‘புஷ்பா’ படத்தில், பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்படும்போது, அதன் வசீகரம் பார்வையாளரை அசைய விடாமல் கட்டிப்போட்டு விடுகிறது. இயற்கையை இறையாக வணங்குவதுபோல், மரங்களை தெய்வமாக வணங்கிய காலம் மாறிவிட்டது.
நாம் நெகடிவ் கதாபாத்திரங்களை விரும்பவில்லை என்றாலும், மரங்களை வெட்டிக் கடத்தும் கதாபாத்திரம் கதாநாயகனாகக் காட்டப்பட்டு பிரம்மாண்ட வெற்றியும் கிடைத்திருக்கிறது. அத்தனை சிறப்பான காட்சியமைப்புகள்.
ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி அந்த கதாநாயகனை அவனுடைய வெற்றிக்கான போராட்டத்தை ஆதரிக்கச் செய்யும் மனநிலைக்கு ரசிகர்களை தயார் செய்வதில் இந்தப் படம் முழு வெற்றியை அடைந்திருக்கிறது.
திரைப்படத்துறை என்னும் ஒரு கனவுத் தொழிற்சாலையின் முன்னணியில் இந்தப் படத்தின் மூலமாக, அல்லு அர்ஜுன் முழுமையான பரிமாணத்தில் விஸ்வரூபம் எடுத்து, இப்போது இந்தியா முழுக்க ஒற்றை ஆளாக கோலோச்சுகிறார்.
இத்தனை ஆண்டுகள் இந்தத் துறை கடந்து வந்த பாதையில், கலைஞர்கள் கண்ட வளர்ச்சியின் செங்கோல் இப்போது அல்லு அர்ஜுன் கையில். இது ஒருநாளில் கிடைத்த வெற்றி அல்ல.
இந்த இடத்தை வந்து அடைவதற்கு அல்லு அர்ஜுன் மேற்கொண்ட திரைப்பட பயணமும், தன் ஆளுமையின் வளர்ச்சி, குடும்ப, திரைப்பட, ரசிகப்பெருமக்கள், சமூக வளர்ச்சி என அனைத்தையும், அவருடைய திரைப்படங்களில் அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களின் வளர்ச்சியும், அவருடைய உரைகளும் கண் முன்னே காட்சிப்படுத்துகின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஒருமுறை பேஸ்புக்கில் தற்செயலாக ஒரு வீடியோ கண் முன்னால் வந்தது. ஒரு குழந்தை சிரித்துக்கொண்டே கையை அசைத்து, ‘தோச ஸ்டெப்’ என்று சொன்னதைக் கேட்டு, அவசர வேலை என்று, பேஸ்புக்கிலிருந்து வெளியில் வந்து விட்டேன். மறுபடியும் எப்போதோ அதே வீடியோ வந்ததும், பார்த்தேன்.
“உனக்கு பிடிச்ச அப்பா பாட்டு என்ன” என்று அப்பா தெலுங்கில் கேட்க, அப்பாவின் மேலே உட்கார்ந்திருக்கும் அந்தக் குட்டி தேவதை, சிரித்தபடி ஏதோ சொல்வதை உன்னிப்பாக கவனித்தேன். ராமலொ பாட்டு என்று பதில் சொன்னாள் மகள்.
அப்பா ஆடின டான்ஸ் என்ன டான்ஸ் என்று அப்பா கேட்டதும், வலது கையை உள்ளங்கை தரைப்பக்கம் பார்ப்பதுபோல் வைத்துக்கொண்டு அந்தக் குழந்தை தோசைக்கு மாவு தேய்ப்பது போல அசைத்தபடி, ”தோச ஸ்டெப்” என்று சொல்ல, கலகலவென ஒலித்த அந்த சிரிப்புக்கு அத்தனை ஆகர்ஷண சக்தி இருந்தது.
சிரித்தபடியே, என்ன படம்? என்று அப்பா கேட்க மகள், ‘அலா வைகுந்தபுரம்லோ’ என்று சொல்கிறாள். இடையில் மகன் ஏதோ சொல்ல வர, நீ இரு அவள் சொல்லட்டும் என்று சிரித்தபடி அவ்வளவு மகிழ்வுடன் பேசிய அந்த அப்பா அல்லு அர்ஜுன் என்பது பிறகே தெரிந்தது.
ஒன்னரை நிமிடங்கள் இருக்கும் (என்று நினைக்கிறேன்) இந்த வீடியோவை மூன்று முறை பார்த்த பிறகே, அப்பா தன் மேல் அமர்ந்திருக்கும் மகளுடன் இப்படி பேசுவதை, எதிரில் இருக்கும் கண்ணாடி வழியாக மொபைலில் பதிவு செய்திருக்கிறார் என்பதும், கோர்வையான இந்த உரையாடலும் புரிந்தது.
ஒரு நடிகர் தன்னுடைய மகளுடன் இப்படி பேசுவதும், தான் திரைப்படத்தில் ஆடி ஹிட் ஆன தன்னுடைய நடனத்தை, ‘தோச ஸ்டெப்’ என்று மகள் சொல்வதை, அப்பா பூரிப்புடன் அப்படி ரசிப்பதை, பார்க்கும்போது, அதுவரை இருந்த அத்தனை சோகமும் சட்டென மறைந்து மனம் மலர்ந்து ஒரு சிரிப்பு என்னை அறியாமல் வெளிப்பட்டது.
பிறகு யூட்யூபில் அந்தப் படத்தின் பாடலைத் தேடியபோது, ’புட்ட பொம்மா புட்ட பொம்மா’ பாடல் கிடைத்தது. பிறகு, ‘ராமுலோ ராமுலோ’ என்னும் அந்தப் பாடலைத் தேடிப் பார்த்தபோதுதான், அந்த தோச ஸ்டெப் டான்ஸ் அதுதான் என்றும் அந்த நடிகர் அல்லு அர்ஜுன் என்றும் தெரிந்தது.
தான் வீட்டில் பதிவு செய்த அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் என்பதும் தன் மகிழ்வை அனைவருக்கும் மகிழ்வு என்னும் தொற்றுவியாதிபோல பரவச் செய்திருக்கிறார் என்பதும் புரிந்த அந்த நொடியில் ஏதோ நடிகராகத் தெரியவில்லை. நம் வீட்டு குழந்தைபோல உணர முடிந்தது.
இனி இந்தத் திரைப்படங்கள் குறித்துப் பேசும்போது சொந்தக் கதையும் இணைந்து வரும் இடங்களில் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள். அந்த இடங்களை மட்டும் கடந்து விட்டுத் திரைப்படங்களைப் பற்றி மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
பத்ரிநாத் – 2011 இல் வெளிவந்த இந்தப் படத்தில், ‘நாத் நாத் நாத் நாத் நாலோ பத்ரிநாத்’ பாடலின் நடனம் பெரிதும் பேசப்பட்டது. ஏதோ ஒரு ஜென்மத்தில் மகனாகவே இருந்த உணர்வு இந்தப் பெயர் கொண்ட படத்தில் நடித்ததைப் பார்த்த பிறகு இந்த உணர்வு அதிகமானது.
இந்தப் படத்தை போனமாதம் தான் பார்த்தேன். போனமாதம் ஏன் பார்த்தேன்? வாசிக்கவோ எழுதவோ முடியாத, எதிலும் மனம் ஒன்றாத துயர்நாட்களைக் கடந்தபோது, குழந்தைகள் என்னை ஏதாவது திரைப்படத்தைப் பார்க்க வைக்க பெரும் முயற்சி செய்தார்கள்.
எந்தப் படமும் பார்க்க முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஏதேதோ படங்களைப் பார்த்தாலும், படத்தின் பெயரோ காட்சிகளோ கதையோ நினைவில் இல்லை. அதனால் பார்க்கும் படங்களின் பெயர்களை எழுதி வைக்க ஆரம்பித்தேன்.
பன்னிரண்டாவது படமாக பார்த்த, புஷ்பா படம்தான் முதலில் முழுவதுமாகப் பார்த்த படம்.
அதற்குப் பிறகு பேஸ்புக்கிலோ, யூட்யூபிலோ எதைத் திறந்தாலும் அல்லு அர்ஜுன் குறித்த படங்களோ செய்திகளோ நேர்காணலோ வரும். ஏன் இப்படி வருகிறது என்று தெரியவில்லை.
ஒரு மாதத்துக்குப் பிறகு மேலே சொன்ன, அப்பாவும் மகளும் பேசும் தோச ஸ்டெப் டான்ஸ் வீடியோ வந்ததும் மகளிடம் காட்டினேன். இதோ இப்படி அதுவாகதான் வருது என்றேன். இப்படியே இரண்டு மாதங்கள் கடந்த பிறகு, அலா வைகுந்தபுரம்லோ படம் பார்த்தேன்.
மற்ற படங்கள் என்ன என்று தேடியபோது, பிரைமிலோ நெட்பிளிக்சிலோ படங்கள் கிடைக்கவில்லை. அல்லது தேடத் தெரியவில்லை. யூடியூபில் அல்லு அர்ஜுன் நடித்த 20 படங்கள் கிடைத்தது. இரண்டு படங்கள் தமிழில், இரண்டு படங்கள் ஹிந்தியில், மற்ற படங்கள் தெலுங்கில் பார்த்தேன்.
சர்ரைநொடு Sarrainodu – 2016 இல் வெளி வந்த இந்த படம் மட்டும் முழுமையாகக் கிடைக்கவில்லை. சிறு சிறு பகுதிகளாகப் பார்க்க முடிந்தது. மீதி ஐந்து படங்கள் குழந்தை நட்சத்திரமாகவும், சிறப்பு விருந்தினராகவும் நடித்த படங்கள்.
கங்கோத்ரி – 2003 அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த முதல் படம். அவருடைய தந்தை அல்லு அரவிந்த், தங்கள் பேனரான கீதா ஆர்ட்சில் தயாரித்த படம். முதல் படத்திலேயே அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரம் நட்பு, பாசம், பெற்றோர் இழப்பு, சண்டை, காதல், காதலுக்காக போராட்டம் என்று கொஞ்சம் கனமான பாத்திரம்தான்.
இந்த முதல் படத்திலேயே பெண் வேடமும் ஏற்றிருப்பார். இந்தப் படத்தில் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். தன்னால் முடிந்த அளவில் நன்றாக நடிக்கப் பார்த்திருக்கிறார். குழந்தை முகம் இன்னும் மாறாமலே அனைத்தையும் செய்து முடித்திருப்பார்.
திரைப்படத்துக்கான குழந்தை நட்சத்திரமாக இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் தந்தை அல்லு அரவிந்த்தின் கீதா ஆர்ட்ஸில் எடுக்கப்பட்ட விஜேதா – 1985 படத்தில் சாரதாவின் மகனாக வாயில் விரல் வைத்து சூப்பும் சிறுவனாக சின்ன காட்சியில் வந்து அவர் பேசும் வசனம், ’கோவிந்தா கோவிந்தா’ மட்டுமே. சிரஞ்சீவி, பானுப்பிரியா நடித்த படம்.
தாத்தா அல்லு நடித்த படம். இரண்டாவது படம் ஸ்வாதி முத்யம் – 1986 தமிழில் சிப்பிக்குள் முத்து படம். கமல் ராதிகா சரத்குமார் நடித்த படத்தில் கமலின் பேரனாக வரும் காட்சியில், அல்லு அர்ஜுனின் முகம் சரியாக அடையாளம் பார்க்க முடியாமல், பேரன் பேத்திகள் சூழ்ந்திருக்க கமலின் முகமே தெரியும்.
சிறுவயதிலேயே சிரஞ்சீவி, கமல்ஹாஸன் படங்களில் நடித்தது அவருக்குள் நடிக்கும் ஆர்வத்தையும் நடனத்தின் மீதான தீராத கனவையும் இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம்.
சிறப்பு விருந்தினராக மூன்று படங்களில் வந்திருக்கிறார்.
டாடி 2001 – சிரஞ்சீவி, சிம்ரன் நடித்த இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் நடன வகுப்பில் நடனம் கற்கும் மாணவனாக அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறார். இந்தப் படம் தான் இவர் நடனம் ஆடும் முதல் படம்.
தனியாக இவர் நடனம் புரியும் காட்சியை மேலிருந்து சிரஞ்சீவி பார்ப்பது போன்ற காட்சியில், அப்போதே ஜிம்னாஸ்டிக்ஸ் செய்வது போன்ற நடன அசைவுகளைக் கொடுத்திருப்பார். சிரஞ்சீவி நடனமாடும் காட்சியில் அவருக்கு பின்னால் ஆடும் நடனக்குழுவில் சிரஞ்சீவிக்கு இடது கை பக்கம் இவர் இருப்பார்.
அவ்வளவு சிரத்தையுடன் ஆடுவார். ஒரு விபத்து காட்சியும் இருக்கும். அதில் முகம் க்ளோஸப் வரும்போது பின்னாட்களில் இன்னும் சிறந்த நடிப்பைக் கொடுப்பார்; நடனத்திலும் ஜொலிப்பார் என்பதை இந்தப் படம் காட்டுகிறது.
சங்கர் தாதா ஜிந்தாபாத் – 2007 தெலுங்கில் பிரபுதேவா இயக்கிய படம். சிரஞ்சீவி, பிரபுதேவா, ராஜு சுந்தரம் இவர்களுடன் நடனம் ஆடுவார்.
ஆக சிறுவயதிலிருந்தே நடனம் ஆடுபவர்களைப் பார்த்தும் தான் நடனம் ஆடியும் வந்த அனுபவம் இப்போது வரை அவருக்கு கைகொடுக்கிறது. எவடு – 2014 அல்லு அர்ஜுன் சில காட்சிகளே வந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் ஒரு ஆகர்ஷணத்தை ஈர்ப்பை தந்திருப்பார்.
இதில் ராம் சரண் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். பின் கதையின் நீட்சியில் ராம் சரண் அல்லு அர்ஜுனாக இருப்பது போன்ற ஒரு கதாபாத்திரம். அல்லு அர்ஜுன் ஏற்கும் கதாபாத்திரங்களில் கொஞ்சம் கார்த்திக், பிரசாந்த், விஜய், சிம்பு, தனுஷ் என இவர்கள் எல்லோரும் கலந்த கலவையாகத் தெரிவார்…
ஆனால் தனித்துவம் பொருந்திய ஆளுமையாகவும் இருக்கிறார்… இவர்கள் அனைவருமே தந்தையின் மூலமாக அறிமுகமாகி திரைப்படத்துறைக்கு வந்திருந்தாலும், தங்கள் உழைப்பால் இன்னும் உயர்ந்தவர்கள். முதல் படத்தில் இருந்த தோற்றத்தைத் தங்களின் அடுத்தடுத்த படங்களில் மாற்றிக்கொண்டு முன்னேறியவர்கள்.
திரைத்துறையில் வெற்றி பெற்ற, வெற்றி பெறும் அனைவருக்குமே சில முக்கிய தகுதிகள் உள்ளன. அனைவரிலும் இருந்து அல்லு அர்ஜுன் வேறுபட்டு இன்னும் உயர்ந்து எப்படி தென்படுகிறார்?
தொடரும்…
அன்புடன்,
மதுமிதா
17.04.2022
Leave a Reply