“உங்கள் தந்தையைப் பற்றி சொல்லுங்கள்” என்று செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம் நான் அவரின் திரைப்பாடல்கள் குறித்து பேசியிருக்கிறேன். அவரின் புத்தகங்கள் குறித்து பேசியிருக்கிறேன். அவரின் பேச்சாற்றலைப் பற்றி உரையாடியிருக்கிறேன். அதையெல்லாம் இன்று திரும்பிப் பார்க்கிறேன். என் தந்தையாகிய கவிப்பேரரசு அவர்களைப் பற்றித்தான் நான் பேசியிருக்கிறேனே தவிர – என் தந்தையைப் பற்றி பேசவில்லை. எந்த நிருபரும் என் பதில்களில் இருந்த இந்த அடிப்படைப் பிழையைக் கண்டறியவில்லை. அல்லது கண்டுகொள்ளவில்லை. இன்று நானும் ஒரு தந்தையாக இருப்பதால் இந்தப் பிழையை என்னால் கடந்துபோக முடியவில்லை. அவருக்கு பரபரப்பான வாழ்க்கைதான்.
அவருக்காகக் காத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களை விட, அவர் எழுத்துக்காகக் காத்திருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம்தான். பெரும்பாலான தந்தை – மகன் உறவில் இருக்கும் மரியாதைக்குரிய மெளனம் எங்கள் உறவிலும் உண்டுதான். ‘நான் உன் நண்பனைப் போல’ என்று ஒருமுறை என் தந்தை என்னிடம் சொன்னபோது அந்த குரலில் நட்புக்கு பொருந்தாத ஆதிக்கம் இருந்தது உண்மைதான். சிறுவயது முதலே அவரது மீசையும் கண்களும் என்னை பயமுறுத்தியதை மறுக்க முடியாதுதான். இருந்தும் – காலவெளியில் தேடாமல் எனக்குள் நான் தேடுகிறபோது என் தந்தையை நான் கண்டுகொள்கிறேன். சிறுமலையின் காட்டுப்பகுதிக்குள் நான் நடக்க அஞ்சியபோது என்னைத் தோளில் தூக்கிக்கொண்டு அவர் ஓடிய ஓட்டம். நான் பள்ளியில் அதிக மதிப்பெண் வாங்கியபோது அதிகம் பாராட்டாதவர் – கல்லூரியில் குறைவான மதிப்பெண் வாங்கியபோது எனக்கு சொன்ன கலகலப்பான ஆறுதல்.என் முதல் புத்தக வெளியீட்டு விழா அன்று அவர் என்னைக் கட்டித் தழுவி சிந்திய ஆனந்த கண்ணீர். எல்லா அன்பையும் சொல்ல அவருக்கு நேரமில்லை என்ற போதும் எல்லா கோபத்தையும் அன்பில் முடிக்கும் தன்மை. எனக்குள் தேடத் தேட என் தந்தை என்ற உருவம் விஸ்வரூபம் எடுக்கிறது. ஆனாலும் – ‘உங்கள் தந்தையை பற்றி சொல்லுங்கள்’ என்று கேட்டால் நான் தமிழாற்றுப்படை பற்றிதான் பேசுவேன். வார்த்தைகளில் அதிகம் வெளிப்படாமல் இதய எல்லைக்குள் இயங்கும் உன்னதமான உணர்வுகளில் தந்தை – மகன் உணர்வும் ஒன்று. அது குயிலின் கானம் போன்றது. மீனின் தியானம் போன்றது.
நன்றி : கபிலன் வைரமுத்து / இந்துதமிழ்
தந்தையின் மிக ஆழமான அன்பை புரிந்து கொள்ள காலம் கடக்க வேண்டும்.
மிக அருமையான பகிர்வு