பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு
கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் : – கட்டுப்பாடுகளை மீறி ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு மேற்கொள்வது, வாகன சோதனைகளில் ஈடுபடுவது, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்துவது, அதோபோல பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக், சினிமா திரையரங்கம் போன்றவை திறக்கப்பட்டுள்ளதாகவும் கோயில்களில் மட்டும் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி தமிழக அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி தமிழகம் முழுவதிலும் உள்ள 20 கோவில்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில தலைவர் மீது வழக்குப்பதிவு
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலை உள்ளிட்ட 600 பாஜகவினர் மீது அனுமதியின்றி கூடுதல் நோய்த் தொற்று பரவும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மகளிர் அணித்தலைவர் மீது வழக்குப்பதிவு
இதேபோல கோவையிலும் பாஜக தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வானதி ஸ்ரீனிவாசன் உட்பட 11 பேர் மீது சமூக இடைவெளி இல்லாமல் கூடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியே ஸ்தம்பிக்கும் என சவால்
இன்னும் 10 தினங்களுக்குள் கோயில்களைத்திறக்கவில்லை என்றால், போராட்டம் மட்டுமல்ல ஆட்சியே ஸ்தம்பிக்கும் அளவிற்கு நாங்கள் செயல்படுவோம் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக தமிழக அரசை எச்சரித்திருந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply