புதுவரவு ஆன்மிகம்
அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள் : விவேகானந்தர்
விவேகானந்தர் அமெரிக்காவுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அதற்கு முன் தன் குருவுடைய மனைவியான அன்னை சாரதா தேவியிடம் ஆசிவாங்கிக்கொள்ள ஆசைப்பட்டார். அன்னையிடம் சென்று
விஷயத்தை சொன்னார்.
“நீ அமெரிக்காவில் போய் என்ன செய்யப்போகிறாய்?” – அன்னை சாரதா தேவி கேள்வி :
“நீ அமெரிக்காவில் போய் என்ன செய்யப்போகிறாய்?” என்று அன்னை கேட்க, “நான் நமது தர்மத்தின் செய்தியை அந்த நாட்டில் பரப்பப் போகிறேன்” என்றார் விவேகானந்தர். சமையல் கட்டில் இருந்த அன்னை, “அந்தக் கத்தியை எடுத்துக் கொடு” என்று காய்கறி நறுக்கும் கத்தியை கேட்க, கத்தியை எடுத்து விவேகானந்தர் கொடுக்கிறார்.
கத்தியை வாங்கிக்கொண்ட அன்னை “என் ஆசிகள் உனக்கு உண்டு” என்கிறார். ஆனால் விவேகானந்தருக்கு ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. தான் கத்தியை கொடுத்ததற்கும், அன்னை அதன்பிறகு ஆசி வழங்கியதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என்று அறிய விரும்பினார்.
அன்னை சொன்னார் :
“ஆமாம், நீ கத்தியை எப்படி? எந்த முறையில்? எடுத்து கொடுக்கிறாய் என்று பார்த்தேன். நீ சரியாகத்தான் எடுத்து கொடுத்தாய். தர்மத்தின் செய்தியை அமெரிக்காவில் சொல்ல நீ தகுதியானவன்தான் என்று முடிவுக்கு வந்த பிறகே ஆசி வழங்கினேன்” என்றார்.
இந்த நிகழ்ச்சியிலே ஒரு மிகப்பெரிய விஷயம் அடங்கியுள்ளது. அது வாழ்வில் வெற்றி பெற விரும்புபவர்களுக்கு மிகவும் அத்யாவசியமானது. பொதுவாக கத்தியை, அல்லது எந்த கூர்மையான பொருளையும் நாம் எடுத்து ஒருவருக்கு கொடுத்தோமென்றால், பிடியை நம் கையில் பிடித்து, கூர்மையான பக்கம் அடுத்தவரை நோக்கி இருக்குமாறுதான் கொடுப்போம்.
இது தவறு என்று சொல்ல வரவில்லை. ஆனால் விஷயம் அதுவல்ல. விவேகானந்தர் அப்படி கொடுக்கவில்லை. அன்னை கேட்டவுடன், கத்தியை எடுத்த அவர், கூர்மையான பகுதியை தன் பக்கம் வைத்துக்கொண்டு, அதன் பிடியின் பக்கம் அன்னையிடம் கொடுத்தார்.
ஒருவேளை கத்தி குத்த நேர்ந்தால், அது கொடுப்பவரைத்தான் குத்தும், வாங்குபவரை அல்ல. இதுதான் வாழும் முறை. இதுதான் அஹிம்சை. இதுதான் தர்மம். ‘தான் வேதனைப்பட்டாலும் அடுத்தவர் நன்றாக இருக்கவேண்டும்’ என்ற மனநிலையின் வெளிப்பாடு. நம்மை எந்நாளும் ‘நல்ல நிலையில்’ வாழ வைக்கும்.
அடுத்தவர் நலத்தை நினைப்பவருக்கு ஆயுள் முழுதும் சுபதினம்தான்.
Leave a Reply