மற்றவர்கள் கூறும் பாராட்டுக்களை விட அவர்கள் கூறும் குற்றசாட்டுக்களை மட்டும் எப்போதும் என் மனம் அசைபோடுகிறது. இதைத் தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?
கேள்வி : மற்றவர்கள் கூறும் பாராட்டுக்களை விட அவர்கள் கூறும் குற்றசாட்டுக்களை மட்டும் எப்போதும் என் மனம் அசைபோடுகிறது. இதைத் தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?
- எஸ். மனோஜ், கல்லூரி மாணவர்
பதில்: பொதுவாக குழந்தைகள் அல்லது பள்ளிப்பருவத்தினர் சிறுவயது முதலே பெற்றோர்களிடமும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடமும், ஆசிரியர்களிடமும், அக்கம் பக்கத்தினரிடமும், வெளியில் பழகும் மனிதர்களிடமும் மேலும் அனைவரிடமும் அமைதியான பையன்/பொண்ணு, யாரிடமும் வம்புக்கு போகமாட்டான்/ள், அடம்பிடிக்க மாட்டான்/ள் என்று சான்றிதழ் கொடுத்து மேலும் இதுபோன்று பல பட்டங்கள் பெறவேண்டும் என்றே சொல்லி வளர்க்கபடுகின்றனர்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
இதுபோதாதென்று பள்ளியில் ஆசிரியர்களும் ஒழுக்கம் என்ற பெயரில் ‘அவனை/ளைப் பார்த்தாவது திருந்து’, ‘அவனை/ளைப் போல் நல்ல பிள்ளையாக இரு’ என்றும், ஊக்குவிக்கிறேன் என்ற பெயரில் ‘அவளை/னை விட அதிக மார்க் வாங்கவேண்டும்’, அவளை/அவனைப் போல் சிறந்து விளங்கவேண்டும்’, ‘எல்லாரும் பாராட்டும்படி நன்றாக வாழவேண்டும்’ என்றும் அவர்களை அறிந்தும் அறியாமலும் குழந்தைகளின் மனதில் மற்றவர்களிடம் பாராட்டு மட்டுமே வாங்கவேண்டும் என்ற விதையை விதைத்துவிடுகின்றனர்.
ஆனால் இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் விபரீதத்தை யாரும் உணர்வதாகத் தெரியவில்லை. இதனை பலகோணங்களில் அணுகலாம். ஒன்று பாராட்டு மட்டுமே இந்த உலகில் நமக்கு கிடைக்கும் என்ற மாயையான எண்ணம் மனதில் வேரூன்றுகிறது. இரண்டாவது மற்றவர்கள் நம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் மட்டுமே கொண்டிருக்கவேண்டும் என்றொரு கட்டாய விதியை நமக்குள் நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.
மூன்றாவதாக மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் கருத்திற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே இழந்து கொண்டிருக்கிறோம். நான்காவதாக நம்மிடம் குறைகளே இருக்கக் கூடாது என்று யதார்த்தம் புரியாது நம்மை நாமே வதைத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் கேள்விக்கான அடிப்படையை ஆராய்வோம். மற்றவர்கள் உங்களைப் பாராட்டும்போது உங்கள் மனம்/ஆணவம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது.
ஏனென்றால் சிறுவயது முதலே நீங்கள் எப்படிக் கற்றுக்கொடுக்கப்பட்டீர்களோ அவ்வாறே மற்றவர்களிடம் பாராட்டு பெற்று நல்ல பெயர் எடுக்கும்போது நீங்கள் வசதியாக உணர்குறீர்கள். உங்களிடம் ஏதும் குறை இருப்பதாக நீங்கள் உணராதவராக இருக்கிறீர்கள். சுருக்கமாக சொல்லப்போனால் மகிழ்ச்சி போதையில் நீங்கள் உங்களை மிக லேசாக உணர்குறீர்கள்.
இதற்கு மாறாக உங்களை யாரேனும் குறை சொல்லும்போது உங்கள் மனம்/ஆணவம் காயப்படுகிறது. நீங்கள்
மனதில் இதுவரை சேர்த்துவைத்த ‘பாராட்டு மட்டுமே பெறவேண்டும்’ என்ற கருத்துக்களை உங்களால்
நடைமுறைப்படுத்த முடியவில்லையே என்ற தோல்வி/தாழ்வு மனப்பான்மை உங்களை நிம்மதியாக
இருக்கவிடுவதில்லை. உங்களை நீங்களே வெறுக்கும் சூழ்நிலைக்கு ஆளாகுறீர்கள்.
இதற்கு தீர்வு என்ன? நீங்கள் செய்யும் செயல்களோ அல்லது உங்களின் குணங்களோ அல்லது உங்களின் பழக்கவழக்கங்களோ உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு பலவிதமான எண்ணங்களை/அபிப்ராயங்களைக்
கொடுக்கும் என்பதனையும் அவர்களின் கருத்திற்கும் உங்களுக்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதனையும் உங்கள் மனதில் அல்லது உணர்வில் நீங்களே விதையுங்கள்.
இங்கும் தலைகீழாகத் தொடங்காதீர்கள். மற்றவர்களின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும்போது மட்டும் இதனை பயிற்சி செய்யாதீர்கள். இந்த உணர்தலை முதலில் நீங்கள் மற்றவர்களால் பாராட்டப்படும்போது பயிற்சி செய்யுங்கள்.
பெரும்போதையான பாராட்டையே நீங்கள் உங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று உணரும் நிலையில் மற்றவர்கள் உங்களின்மேல் வைக்கும் குற்றச்சாட்டை உங்கள் மனம் தானாகவே விலக்கிவைக்கும். இது புரிதலுக்கும் அடுத்தநிலையான உணர்தல்.
கேள்வி – பதில் தொடரும்…
……………………………………………………………………………………………………………………………………………
“எங்க ஏரியா… உள்ள வாங்க”
(இது குழந்தைகளுடன் ஓர் உரையாடல்)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ, குழந்தைகளாகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
மனநலத்தை பேண அவசியமான கேள்வி.. பதில்கள்..
வாழ்த்துகள்
உங்களுடைய பதிலுக்கு நன்றி