என் மகள் ஐந்தாம் வகுப்பும், என் மகன் இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். நல்ல பழக்கவழக்கங்கள் எவற்றையெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்?
கேள்வி: என் மகள் ஐந்தாம் வகுப்பும் என் மகன் இரண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் நல்ல பழக்கவழக்கங்களை நான் சொல்லித் தரட்டுமா? சரியென்றால் எவற்றையெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்?
- கீர்த்தனா மௌலி, பெற்றோர் – அரக்கோணம்.
பதில்: இது மிக ஆழமான கேள்வி. ஏனென்றால் நல்ல பழக்கங்கள் என்று நீங்கள் எதனைக் கணித்து வைத்திருக்கிறீர்கள் என்பதனை முதலில் ஆராய வேண்டும். நீங்கள் நல்லவைகள் என்று நினைக்கும் அப்பழக்கங்கள் உங்கள் பிள்ளைகள் இருக்கும் வயதில், சூழ்நிலையில் ஒத்துப் போகுமா என்பதனை கவனிக்கவேண்டும்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
இருந்தாலும் ஒரு பெற்றோராக அவர்களின் எதிர்காலம் கெட்டுவிடக்கூடாதே எனும் நோக்கில் இக்கேள்வியை முன்வைக்கிறீர்கள் என்பதாகப் புரிந்துகொள்கிறேன். பெரும்பாலானப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விஷயத்தில் தலைகீழாகத் தொடங்குகிறார்கள்.
தங்கள் பிள்ளைகளின் குணநலன்களை சீர் செய்யும் பணியில் தொடங்குகிறார்கள். அது அறவே முடிவதில்லை எனும்போது மன உளைச்சலின் உச்சிக்குச் செல்கிறார்கள். மற்றவர்களுக்குக் கொடுத்து உதவவேண்டும், அடம்பிடித்தல் கூடாது, தன்னிடம் உள்ளதை மற்றவர்களுடன் பகிரவேண்டும், மற்றவர்களை மரியாதையில்லாமல் பேசக் கூடாது போன்ற குழந்தை வயதிற்கு ஒத்துவராத பல சீரமைப்புப் பணிகளை செய்யத் தொடங்குகிறார்கள்.
பொதுவாக குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் இதுபோன்ற பழக்கவழக்கங்களை அவர்கள் பெரியவர்களாகும்போது மட்டுமே, அவர்கள் இருக்கும் சூழ்நிலையை அடிப்படையாக வைத்து மட்டுமே கற்றுக் கொள்கிறார்கள். அப்படியென்றால் எதுவும் சொல்லிக் கொடுக்க வேண்டாமா? வேண்டும்… கண்டிப்பாக வேண்டும்.
ஏற்கனவே சொன்னதுபோல் தலைகீழாகத் தொடங்காமல் நேராகத் தொடங்கவேண்டும். எப்படி?
நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறீர்கள் அல்லவா? தற்போதைய அவர்களின் வயதுக்குத் தகுந்தமாதிரி சில குணங்களை தவிர பெரிதான குணநலன்கள் இப்போது அவர்களுக்குத் தேவையில்லாதது.
அவர்களாகக் கேட்கும்போது அல்லது அதற்க்குண்டான வயதை அடையும்போது அதனைச் சொல்லிக்
கொடுக்கலாம். இப்போதைக்கு அவர்களுக்குத் தேவை உடல் ஆரோக்கியம். அதனை எப்படி கையாளுவது என்று சொல்லிக்கொடுங்கள். ஏனென்றால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போது அதற்குண்டான மன ஆரோக்கியம் எதிர்காலத்தில் வரும் வாய்ப்பு உண்டு.
எதையெல்லாம் தங்கள் உடல் ஆரோக்யத்திற்கு சொல்லிக் கொடுக்கலாம்?
- காலையில் அவர்களை எழுப்பும்போது அல்லது அவர்களாகவே எழுந்திருக்கும்போது அவசரம் இல்லாமல், கோவம் இல்லாமல் பொறுமையாக எழுந்திருக்கச் சொல்லிகொடுங்கள்.
- காலை உணவைத் தவிர்க்காமல் நன்றாக வயிறு நிறைய சாப்ப்பிட ஊக்கப்படுத்துங்கள்.
- நொறுக்குத் தின்பண்டங்களாக வீட்டில் செய்த (நீங்கள் சோம்பேறித்தனப்படாமல் செய்து
கொடுக்கவேண்டும்) பண்டங்களை சாப்பிட வையுங்கள். - மதிய உணவாக சாதத்தை குறைவாகவும், காய்கறிகளை அதிகமாகவும் சாப்பிடும் முறையைக் கற்றுக்கொடுங்கள்.
- சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கைவிட அறிவுறுத்துங்கள். வேகமாக சாப்பிட வேண்டாம் என்று சொல்லுங்கள்.
- பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருட்களை சாப்பிடவேண்டாம் என்று உறுதியாக இருங்கள்.
- இரவுச் சாப்பாட்டினை அரை வயிறாக சாப்பிட வையுங்கள். நேரத்துடன் உறங்கச் சொல்லுங்கள்.
- வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுக்கச் சொல்லுங்கள்.
- தினமும் இரவு படுக்கும் வேளையில் ஆசனவாயில் விளக்கெண்ணெய் தடவி படுக்கச் சொல்லுங்கள். உடம்பின் சூட்டைத் தவிர்த்தாலே உடம்பின் பெரும்பாலான நோய்கள், மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் மறையும் என்ற உண்மையினையும் நீங்கள் உணரவேண்டும்.
- நன்றாக விளையாடச் சொல்லுங்கள். நிறைய விளையாடும் குழந்தைகளுக்கு ஈகோவை
கையாளும் திறமை வளரும் என்பது கண்ணுக்குத் தெரியாத யதார்த்த உண்மை.
இவை போன்று உங்கள் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இவைகள் எல்லாம் புதிதல்ல. நம் முன்னோர்கள் நம்மை இப்படித்தான் வளர்த்தார்கள். குணநலன்கள் எல்லாம் நாம் பெரியவர்களாகும்போது நாமே சரி செய்துகொண்டதுதானே?
உங்கள் பிள்ளைகளின் மீதுள்ள உங்களின் அக்கறை தற்போது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் இருக்கட்டும். அதுவே அவர்களின் அடித்தளமாக, தனது குணங்களை சீர்செய்து கொள்ளும் தன்மையை எதிர்காலத்தில் தரும். தனது உடலைச் சீராக வைத்துக்கொள்பவர்களுக்கு தனது மனதை சீராக வைத்துக் கொள்ளும் திறமை தானே வரும். உங்களின் இரண்டு பிள்ளைகளும் சிறப்பாக வாழ வளர வாழ்த்துக்கள்.
கேள்வி – பதில் தொடரும்…
…………………………………………………………………………………………………………………………………………………
(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply