”வயது வாழ்த்தட்டும்” : ஒரு கதை சொல்லட்டுமா? : Episode-7

Share Button

காலங்கள் கடந்துபோனாலும் என்னுடைய பள்ளிப்பருவத்தில் கிடைத்த நண்பர்களுடன் நீண்ட தொடர்பும், நேரில் சந்திப்பதுவும் இன்றும் நடைபெறுகிறது. அப்படி சமீபத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்த ஒரு நாளில் பழைய நாட்களை அசைபோட்டோம்.

அவ்வாறு பழைய விஷயங்களை, எங்களின் செய்கைகளை, உரையாடல்களை, நடத்தைகளை அனநிவரும் பகிர்ந்துகொண்டிருக்கும் வேளையில் என் மனதில் தோன்றிய ஒரு நடைமுறை புரிதலை இன்று பார்க்கலாம். நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்தந்த வயதில் நாம் வாழ்வை ரசித்து அனுபவித்து இருக்கிறோமா என்று யோசித்துப் பார்த்தால், நிறையபேரிடம் கேட்டுப்பார்த்தால் ‘இல்லை’ என்ற பதிலே வருகிறது.

பள்ளிப்பருவத்தில் ‘இது எப்போது முடியும்’ என்றும், பருவ வயதில் ‘எப்போது எனக்கு மீசை முளைக்கும்?’ அல்லது ‘எப்போது நான் பெரியவர்களைப் போல் நாகரிக உடை உடுத்துவது?’ என்றும், இளம் வயதில் தனக்குப் பிடித்த ஆணுடனோ (அ) பெண்ணுடனோ மற்றொரு பெண் (அ) ஆண் பேசும்போது ஏற்பாடு பகையை பெரிதுபடுத்துவது, வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஆர்வக்கோளாறினால் நடந்துகொள்ளும்விதம் ஆகியவற்றை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது ‘நாம் இன்னும் கொஞ்சம் நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்கலாமோ’ என்றுதான் தோன்றுகிறது.

இதனை இரண்டுவிதமாக புரிந்து கொள்ளலாம். முதலாவதாக நம்மிடம் இருக்கும் இந்த நிமிடத்தில் வாழ நமக்கு யாருமே கற்றுக்கொடுக்கவில்லை என்பதே உண்மை. இரண்டாவதாக அந்தந்த குறிப்பிட்ட வயதில் நாம் கொடுக்கும் முக்கியத்துவம், செய்த செய்கைகள், நடந்துகொண்ட விதம், மனிதர்களை அணுகும்முறை, தன் தேவைகள் என்று அனைத்தையுமே சிறிது காலத்திற்குப் பிறகு, வயது அதிகமாகும் போது யோசித்துப்பார்த்தால் உங்களை நினைத்தது நீங்களே சிரித்துக் கொள்வீர்கள் அல்லது வருத்தப்பட்டுக் கொள்வீர்கள் அல்லது ‘இப்படி நடந்திருக்கலாமோ’ என்று ஆதங்கப்படுவீர்கள் அல்லது ‘தேவையில்லாத வேலை பண்ணிட்டேன்’ என்று புரிந்துகொள்வீர்கள் அல்லது வேறுவகையிலும் உணர்வீர்கள்.

ஆனால் ஒரே நிலையாக குறிப்பிட்ட உங்களின் முந்தைய வயதில் உங்களின் மனநிலையை இன்னும் சிறிது வேறு வகையில் வைத்திருக்கலாமோ என்று தோன்றும். என் நண்பர் ஒருவரின் அனுபவப் பகிர்தலை இங்கு குறிப்பிடுகிறேன். பள்ளிப் பருவத்தில் சுமாராகப் படித்து மேல்படிப்பும் முடித்து ஒரு வேலையில் அமரும்போது அவருக்கு 26 வயது.

தொழிலைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில், வயது துணை இருந்த தைரியத்தில் அவரின் திறமைகள் அனைத்தையும் அவர் வேலைசெய்யும் நிறுவனத்திற்காக வெளிப்படுத்தினார். 30 வயதில் திருமணம் செய்துகொண்டு 32 வயதில் குழந்தை பெற்றுக்கொண்டு, கூடவே நிறுவனத்தில் நல்ல பதவியில் அமர்ந்துகொண்டு வாழ்வை நகர்த்தினார்.

நாற்பத்திரண்டு வயதில் அவருக்கு வயிற்றில் ஏதோவொரு பிரச்சினை என்று மருத்துவ பரிசோதனை செய்துபார்த்தார். சரியாக நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்த காரணத்தினால் அவருக்கு வயிற்றில் அல்சர் வந்துள்ளதாக அறிந்துகொண்டார். இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர் உணர்ந்து சொன்ன வார்த்தைகள் என்னவென்றால், ‘தொழிலை கவனித்த நான் சிறிது என் உடம்பையும் கவனித்து இருக்கலாம், தொழிலைத் தவிர உள்ள என் வாழ்வையும் கொஞ்சம் அனுபவித்து இருக்கலாம்’ என்பதுதான்.

இதுபோன்ற கருத்து உங்களில் பலபேருக்கு இருக்கலாம். முடிந்துபோன பருவத்தை ஒன்றும் செய்ய இயலாது. மேலும் அந்தப் பருவத்தில் ‘இழந்துவிட்டோமே’ என்ற சிந்தனையும் வருவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும் மிச்சமிருக்கும் நமது வாழ்வினை அனுபவிக்க ஒரு புரிதல் இருக்கவேண்டும். உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே எதை நோக்கி செல்கிறது என்ற புரிதல் வேண்டும்.

சிறிய வயதில் விளையாட்டுகளில் விளையாடுவதை விட்டுவிட்டு பொறாமையை பெரிதாக்கி கொண்டோம். தற்போது தொழிலில் பொருளாதாரம் மேம்படுவதை விட்டுவிட்டு மனிதர்களை எடைபோடுவதை பெரிதாக்கி கொண்டுள்ளோம். நீங்கள் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கும்வரை
உங்களின் வாழ்வை நீங்கள் வாழ இயலாது.

நீங்கள் தற்போது எந்த வயதில் எதைச் செய்து கொண்டிருந்தாலும் சரி… இப்போது செய்து கொண்டிருப்பதை, நடந்துகொண்டிருப்பதை, கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை நினைத்தது பின்பு ஒருநாளில் நிச்சயம் மாற்று கருத்து கொள்வீர்கள். ஆகையால் தற்போது உங்கள் வாழ்க்கையை திருப்பிப் பாருங்கள்.

நீங்கள் ஓய்வை நோக்கி மட்டுமே செல்கிறீர்கள். நீங்கள் ஓய்வை மட்டுமே விரும்புகிறீர்கள். ஓய்வை நோக்கிச் செல்லும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் எதற்கு இந்த கடுமையான மனநிலை? தன்னைக் காயப்படுத்திக்கொண்டு எதனை அடையும் முயற்சி இது? யோசித்துப்பார்த்தால், முடிந்தவரை அனைத்தையும், அனைவரையும் லேசாக, சுலபமாக எடுத்துக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளும் தன்மை நிலைப்பெறும்.

சிறியவயதில் நாம் தவறவிட்டு தற்போது புரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ள ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிச்சமிருக்கும் காலத்தையாவது எதையோ இழந்துவிட்ட ஆதங்கம் இல்லாது வாழ தனிப்பட்ட முயற்சி எடுப்போம்.வாழ்த்துக்கள்.

கதை தொடரும்… 

……………………………………………………………………………………………………………………………………………………

 

 

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *