எண்ணங்கள் அழகானால், வாழ்க்கையும் அழகாகும்!
அதிகாலை அற்புதமானது. சூரியன் தன் கதிர் கரங்களைத் தூரிகையாக மாற்றி, இளமஞ்சள் நிறம் தொட்டு, நீல வானில் வரையும் ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சூரியன், வானில் வரையும் ஓவியத்தில், நொடிகளில் ஏற்படும் மாற்றம் இன்னும் வியப்புக்குரியது. ஆனால், அறிவியல் உண்மை அடங்கியது. சூரியன், சில நொடிகளில் வண்ணங்களை மாற்றி, மாற்றி, வரையும் வான் ஓவியம், கண்களுக்கு விருந்து.
அதேவேளையில், நிறங்கள் ஒன்றாகி, அவை வெளிர்ந்து, வானம் வெண்மையாகிப் போகும் அறிவியல் அற்புதம் விநோதமானதே! வாழ்விலும் இதுமாதிரியான அற்புதத் தருணங்கள் தொடர்ந்து நடந்த
வண்ணமே இருக்கின்றன. நாம் தான், அதிகாலை அற்புதத்தைக் கண்டும் காணமலும் விடுவது போன்று, வாழ்வின் அற்புதங்களையும் கண்டு கொள்ளாமலே இருந்துள்ளோம். கன்னியாகுமரியில் அதிகாலை சூரியனைக் காணச் செல்லுவோம். தினமும் காலை வீட்டின் மாடியில் அமர்ந்து, அல்லது வீட்டின் முன் அமர்ந்து சூரிய தரிசனத்தை காண்பதற்கு மறந்து போகின்றோம். இல்லை. நமக்கு நேரம் இல்லை.
பரபரப்பான உலகம். நாமும் பரபரப்பாகத்தானே இருக்கின்றோம்! வாழ்க்கையில் அத்தனையும் அழகானவையே. நாம், அதன் அழகை ரசிப்பதற்கு நேரம் ஓதுக்குவதில்லை. நம் எண்ணங்கள் ஓட்டம் எடுத்து, அன்றாடப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது, ரசனை என்பது ஓரம் கட்டப்படுகின்றது. மகன் கொடுக்கும் பள்ளி டைரியை கூட படிக்காமலே கையெழுத்து இடுகின்றோம். அவனின் நேர்த்தியான கையெழுத்தை ரசிப்பதற்கோ, பாராட்டுவதற்கோ நேரமில்லாமல் போய்விட்டது.
வேகம், வேகம் என வாழ்க்கை, கனரக வாகனம் போன்று வேகமெடுத்து ஓடும் போது, வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் வேகமாகவே கரைந்துவிடுகின்றது. வாழ்வு நிற்பதற்கு இடமில்லாமல், நிதானமில்லாமல்
கடந்து விடுகிறது. இருசக்கர வண்டியை முடுக்கி வேகமெடுக்கும் போது, வாசலில் நிற்கும் குழந்தை , “அப்பா ஸ்டாண்டு எடுக்காம போறீங்க” என்று கத்துவாள்; எச்சரிப்பாள். “தாங்க்ஸ் டா செல்லம்” என்று நன்றி சொல்லக்கூட நேரமில்லை.
புன்னகைக்க கூட இடமில்லாமல், அக்குழந்தையை புறக்கணித்தே கடந்து விடுகின்றோம். வாழ்க்கை எப்படி ருசிக்கும். நம் எண்ணங்கள் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கின்றன. வேலை, வேலை என ஓடும் இவ்வாழ்க்கையில், எண்ணமும் நிதானம் இழந்தே போகின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை. நிதானம் அதற்கு துணை நிற்கும். எண்ணங்களை வண்ணமாக்க நிதானம் தேவை என்பதை என்று உணர்வோம்? நிதானமாகச் செல்லும் போது, எண்ணங்கள் மிக இயல்பாக இயற்கையை உற்று நோக்கத் தொடங்குகின்றன.
இது நாளடவில் பழக்கமாகிவிடும். ஆம்! எண்ணங்கள் நிதனமாகும் போது, எல்லாம் அழகாகும். சாலை ஓரத்தில் வளர்ந்த புல்லின் மீது முளைத்திருக்கும் பனித்துளியின் அழகை ரசிக்கத் தொடங்குவோம். கண்பது எல்லாம் அழகாகத் தெரியும். அத்தனையும் அழகாகத் தோன்றும். எண்ணங்களும் அழகாகும்.
மரப்பட்டையில் படிந்திருக்கும் தூசி கூட அழகாத் தெரியும். முறிந்த கிளை ஓவியமாகத் தெரியும்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, கண்ணாடியில் தெரியும்படி பறக்கும் வண்ணத்துப்பூச்சியின் அழகை ரசிக்கும்.
சைரன் சவுண்டு கேட்கும் போது, வண்டியை ஓரம் கட்டும் ஆட்டோ அழகாத் தெரியும். சிக்னலில் சிவப்பு
விளக்கு விழுந்த போது நிறுத்தும் வாகன ஓட்டி அழகாகத் தெரிவார். சிறுவர்கள் சாலையை கடக்க உதவும் போலீஸ்காரர் ஹீரோவாகத் தெரிவார். இப்படி உலகமே அழகாகத் தெரியும். ரசிப்பதற்கு நிதானம் தேவை..
எண்ணங்களிலும் நிதானம் தேவை.. நிதானமாகும் போது, உலகே அழகாகும். இவ்வுலகின் அழகு நிறைந்த அற்புதங்களைக் கண்டு ரசிக்கலாம். .
அப்படி நிதானமாகச் சென்ற காலை வேளையில் பல அற்புதங்களைக் கண்டேன். அதில் இரண்டு விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றேன். அன்று, சரியாக காலை எட்டு பத்து மணிக்கு, பால்பண்ணை சிக்னலில் நின்றிருந்தேன். கேகே நகரில் இருந்து வந்ததால், இடது புறம் வாகனங்கள் செல்வதற்கு இடம் விட்டு நின்றிருந்தேன். இருப்பினும், பின்னால் வரும் வாகனங்கள் காதைப் பிளக்கும் சத்தத்துடன் ஹார்ன் செய்தபடி திரும்பின. எதிர்புறம் இருந்து நடந்து வந்த இரு கல்லூரி
மாணவிகளைக் கண்ட பைக் காரன், அவர்களை நோக்கி ஹார்ன் எழுப்பி, இடப்புறம் திரும்பினான். எனக்கு காது வலித்தது. ஆனால், வெகு இயல்பாக அம்மாணவிகள், அதே மாதிரி சத்தம் எழுப்பி மகிழ்ந்தபடி, கடந்தனர். நமக்கு எரிச்சல் படும் ஒன்றை ரசிக்கத் தொடங்கிய மாணவிகள் இயல்பு, என்னை
நிதானமாக்கியது.
அவர்களை வியந்து பார்த்தபடி, பச்சை ஒளிர்வதற்காகக்காத்திருந்தேன். எதிர்புறம் இன்னும் பலர் சாலையைக் கடக்க காத்திருந்தனர். அந்த சமயம், சைரன் ஒலிக்க , ஆம்புலன்ஸ் வேகமாக மேலமடையில்
இருந்து ஜி.எச் நோக்கி பறந்தது. வாகன ஓட்டிகள் பலர் வழி விட்டு ஒதுங்கினர். பச்சை விழுந்த போதும்கூட, எவரும் வாகனத்தை முடுக்கவில்லை. எதிர் திசையில் இருபத்து ஐந்து வயது மதிப்பிடத் தக்க சுடிதார் அணிந்த பெண் , வெகு இயல்பாக, ஆம்புலன்ஸ் வாகனத்தை நோக்கிய படி, வானத்தைப் பார்த்தப்படி இரு கைகளைக் குவித்து,, வணங்கினார். அவரது வாய் முணுமுணுத்தப்படி இருந்தது. “அவர் பிழைத்துக்
கொள்ள வேண்டும். இறைவா! அவரைக் காப்பாற்று” என்று இறைஞ்சுவதாக அவரது வாய் அசைவு இருந்தது. ஒருபுறம், பள்ளிக்கூடங்கள் அறத்தை போதிக்கவில்லை. பள்ளிக்கூடங்களில் நீதி போதனை வகுப்புகள் எடுக்கப்படுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் நிகழும் இக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் சிந்திக்கத் தூண்டின. வண்டியை நிதானமாக ஓட்டி பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தேன்.
மதியம் உணவு வேளை, அனைத்து மாணவர்களும் சத்துணவு வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தனர். வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்தவர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள்.
அருகில் இருந்த ஒன்றாம் வகுப்பில், ஒரு குழந்தையின் அண்ணன், வெகு இயல்பாக தன் தங்கைக்கு சாப்பாட்டை அன்னையைப் போன்று ஊட்டிக் கொண்டிருந்தான். அதனை ரசித்த , அவனது வகுப்பு ஆசிரியர் அதனைப் புகைப்படம் எடுத்ததையும் பார்த்தேன். ரசித்தேன். இதுமாதிரியான அற்புதத்
தருணங்கள் நம் பால்யத்தை மீட்டுத்தருவனவாக உள்ளன. இப்படியாக பார்த்துக் கொண்டிருந்த போது, எனக்கு அருகில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த பெண் குழந்தை, “அச்சச்சோ…” எனக் கத்திக் கொண்டு ஓடினாள்.
நானும் பயந்து எட்டிப் பார்த்தேன். அவள் ஓடிச் சென்று , சாப்பிட்டத் தட்டை கழுவி முடித்து, வகுப்பறை
நோக்கி ஓடி வந்த போது விழுந்த ஒன்றாம் வகுப்பு குழந்தையைத் தூக்கி விட்டு, அவளது கால் முட்டியில் ஒட்டியிருந்த மண்ணை நீக்கி, வாயில் ஊதியப்படி, “ஒண்ணுமில்லை. அழாதே! காலை உதறு. நட! சரியா போகும்” என்றாள். எனக்கு வியப்பாக இருந்தது. ஆம்! நிதானமாக இருக்கும் போது எண்ணங்கள் அழகாகின்றன. வாழ்க்கையின் அழகான நிகழ்வுகளும் தென்படத் தொடங்குகின்றன. இல்லை. எண்ணங்கள் அழகனால் வாழ்க்கையும் அழகாகத் தொடங்கிவிடும் என்பதை உணர்ந்தேன். ஆம்!
எண்ணங்களை அழகாக்க முயற்சிப்போம். குழந்தைகளிடம் இருந்து நற்பழக்கங்களைக் கற்றுக் கொள்வோம். வாழ்க்கை அழகாகத் தொடங்கிவிடும்.
நீதிகளைச் சொல்வதை விட, நிதானமாக வாழ்வில் நடக்கும் இம்மாதிரியான அரிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வோம். எல்லாம் சரியாகிவிடும். அறத்தைக் கற்றுக் கொடுப்பதை விட, பகிர்வதன் மூலமாக
உணர்த்தலாம். எண்ணங்களை அழகாக்குவோம். வாழ்க்கை அழகாகும்.
க. சரவணன்,
கல்வியாளர், எழுத்தாளர்.
Leave a Reply