‘ஆறுதல்’ : ஒரு கதை சொல்லட்டுமா? : Episode-3

Share Button

ஒரு பெண்மணியின் அப்பா இறந்துவிட்டார். அப்பாவின் உடல் வீட்டின் வெளியே கிடத்தப்பட்டிருக்க
அப்பெண்மணியின் அம்மா, சகோதர சகோதரிகள் தன் அப்பாவின் இறந்த உடல் அருகே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தனர். சற்று தள்ளி அப்பெண்மணியின் உறவினர்கள் வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். அக்குடும்பத்தின் உறவினர்கள், நண்பர்கள், அருகிலிருப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் வந்து தங்கள் அஞ்சலியைச் செலுத்திக் கொண்டிருந்தனர்.

வந்திருந்த அனைவரும் சொல்லிவைத்ததைப் போன்று அப்பெண்மணிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அருகில் சென்று கிட்டத்தட்ட ஒரேவிதமான வார்த்தைகளைக் கூறினர். வந்திருந்த நூற்றுக்கணக்கான மனிதர்களிடமிருந்து பகிர்ந்துகொள்ளப்பட்ட வார்த்தைகள் அதிகபட்சமாக ஒரே மாதிரியான ஐந்தாறு வார்த்தைகள்தான். அது எவ்வகையில் இருக்கும் என்று உங்களுக்கேத் தெரியும் என்று நம்புகிறேன். அறிவுரை மட்டுமல்ல, ஆறுதல் கூட போகிறபோக்கில் மிகச் சாதரணமாகப் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

ஆறுதல் என்பது தன் கண்முன்னே ஒரு சக மனிதன் உடலளவிலோ, மனதளவிலோ சங்கடமாக இருக்கும்போது தன்னால் முடிந்தவற்றைச் செய்வது ஆகும். ஆனால் பெரும்பாலும் ஆறுதல் வெறும் வார்த்தைகளாக மட்டுமே பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்பதே கசப்பான உண்மை. யதார்த்த வாழ்வில் இந்த ஆறுதல் என்பது அந்த நேரத்தில் ஜோடிக்கப்பட்ட வார்த்தைகளைத் தவிர வேறொன்றாகவும் இருப்பது இல்லை… ஒருவர் தான் வங்கியிலிருந்து எடுத்துவந்த இரண்டு லட்சம் ரூபாயை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு பின் ஞாபகமறதியில் அதனை எடுக்காமல் தொலைத்துவிட்டார்.

அதற்கு ஆறுதல் சொல்லவந்தவர்கள் அனைவரும் பகிர்ந்த ஒரே விஷயம், “சரி விடு…சம்பாதித்துக் கொள்ளலாம்.” என்பதைக் குறிக்கும் வெவ்வேறு வார்த்தைகள். இவ்வாறு சங்கடமான சூழ்நிலையில் மற்றவர்களால் பகிர்ந்துகொள்ளப்படும் ஆறுதல் வார்த்தைகளுக்கு, அந்த சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இருப்பதில்லை. அதனைச் சொன்னவர்கள் அந்தவிதமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது அவர்கள் சொன்ன ஆறுதலை அவர்களாலேயே பின்பற்றவும் முடிவதில்லை. ஆனாலும் இந்த ஆறுதல் எனப்படும் விஷயம் மட்டும் நடந்துகொண்டே இருக்கிறது.

“வேறு என்னதான் செய்வது? எங்களுக்கு வேண்டியவர்கள், பிடித்தமானவர்கள் சங்கடத்தில் இருக்கும்போது நான் ஆறுதல் கூறத்தானே வேண்டியிருக்கிறது!?” என்ற கேள்வி உங்களுக்குள் வரும். நீங்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மனிதருக்கு ஏதேனும் செய்வதாக இருந்தால், நடைமுறையில் என்ன செய்யமுடியுமோ அதனைச் செய்யலாம்.

இறப்பு நடந்த வீட்டில் நீங்கள் உடன் இருந்து ஏதேனும் உதவி செய்வதானால் செய்யலாம். உங்களிடம் பொருளாதாரம் நன்றாக இருந்தால் உணவுச் செலவு, தேநீர் செலவு, பந்தல் செலவு ஆகியவற்றிற்கு உங்களால் முடிந்ததை சம்பந்தப்பட்டவரிடம் கொடுக்கலாம். உங்களின் வாகனத்தைப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தக் கொடுக்கலாம் அல்லது நடைமுறையில் உங்களால் முடிந்த விஷயங்களைச் செய்யலாம்.

தன்னுடைய இரண்டு லட்சம் ரூபாயைத் தொலைத்த மனிதரிடம் உங்களால் முடிந்தால் ரூபாய் ஐந்தாயிரம் கடனாகவோ அல்லது அன்பளிப்பாகவோ கொடுக்கலாம். வட்டியில்லாமல் உங்களால் முடிந்த தொகையை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து வாங்கிக் கொடுக்கலாம். நான்கைந்து நண்பர்கள் இணைந்து சிறு தொகையாகக் கொடுக்கலாம். இதையெல்லாம் செய்வதற்கு நீங்கள் சிறிது சிரமப்பட வேண்டும். சிறிது உழைக்க வேண்டும்.

சிறிது செலவு செய்ய வேண்டும். சிறிது மனதும் வேண்டும். ஆறுதல் எனும் கருத்தை விட்டுவிட்டு அக்கறை எனும் பேரில் அந்தச் சூழலுக்கு ஏதாவது செய்யமுடியுமா என்று பார்ப்பது உங்களுக்கும், சங்கடத்தில் இருக்கும் மனிதருக்கும் பெரும் நிம்மதியாக இருக்கும். “கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் இறப்பு நடந்த வீட்டில் நான் போய் என்ன உதவி செய்வது? எனக்கு பொருளாதார வசதியும் இல்லை, தெரிந்த நட்பு வட்டாரங்களும் இல்லை, உதவி செய்யும் மனதும் இல்லை.. என்னதான் செய்வது?” என்ற கேள்வி அடுத்து வரும்.

உங்களால் எதுவும் செய்ய முடியாத சூழலில் அமைதியாக இருப்பது பாதிக்கப்பட்டவருக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாகும். நடந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி அனைவரும் செய்யும் அதே வேலையை நீங்களும் செய்து தூண்டிவிடாமல், நீங்கள் அமைதியாக இருக்கும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு.

ஆறுதல் அக்கறையாக வெளிப்படட்டும். வாழ்த்துக்கள்.

கதை தொடரும்… 

……………………………………………………………………………………………………………………………………………………….

 

 

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *