கேள்வி – பதில் : ஒரு குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற கூற்று  சரியா? ஏனென்றால் எந்த அன்னையும் தன் குழந்தை திருடனாகவோ, கொலைகாரனாகவோ வளர வேண்டும் என்று நினைக்க மாட்டார்களே?

Share Button

கேள்வி: ஒரு குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற கூற்று  சரியா? ஏனென்றால் எந்த அன்னையும் தன் குழந்தை திருடனாகவோ, கொலைகாரனாகவோ வளர வேண்டும் என்று நினைக்க மாட்டார்களே?

  • ரா. ப்ரியா, பெற்றோர்

பதில்:  உண்மைதான். ஆனால் இங்கு நீங்கள் உங்கள் குழந்தை எப்படி வளர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பது விஷயமில்லை. எவ்வளவுதூரம் உங்கள் நினைப்பை நீங்கள் நடைமுறைப் படுத்தியிருக்கிறீர்கள் என்பதே பார்க்கப்படவேண்டிய விஷயம்.  உங்கள் குழந்தை மேல் அக்கறை எனும் பேரில் செயல்படுத்தப்படும் அனைத்துமே அக்குழந்தைக்கு நல்லது எனும் தவறானக் கண்ணோட்டம் முதலில் கைவிடப்பட வேண்டும்.

  • ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் புரிந்துகொண்ட விஷயங்கள் உங்கள் குழந்தைக்கு சரியானதாகவும், மிகச் சரியானதாகவும், தவறாகவும் அல்லது பொருத்தமில்லாததாகவும் இருக்கும் பல வாய்ப்புகள் உள்ளது. பல வாய்ப்புகள் உள்ள வாழ்க்கைத் தன்மையில் நீங்கள் புரிந்துகொண்ட தன்மையை மட்டுமே உண்மை எனக் கொண்டு உங்கள் குழந்தையின் மேல் திணிப்பது உங்களை அறியாமலேயே நீங்கள் அக்குழந்தைக்கு செய்யும் மிகப்பெரிய பாதகம் ஆகும்.

சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது போன்ற பொதுவான விஷயங்களை உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள். வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்காதீர்கள். மாறாக கற்றுக்கொள்ள அனுமதியுங்கள். உங்கள் குழந்தையை வளர்க்காதீர்கள். மாறாக வளர அனுமதியுங்கள்.  குறிப்பிட்ட வயதுவரை ஒரு குழந்தை அதன் அன்னையின் அருகாமையில் மிகவும் அதிகமாக இருப்பதனால் குழந்தையின் வளர்ச்சியில் அன்னையின் பங்கு பெரிதாகக் கொள்ளப்படுகிறது.

உங்கள் குழந்தையை உங்கள் வாரிசாகவோ அல்லது உங்களின் நிழலாகவோ பார்க்கும்வரை இதுபோன்ற அறியாமையில் செய்யும் பாதகங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அக்குழந்தை ஒரு தனி உயிர், தனிப் பிறவி, தனித் தன்மை என்பதனைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது அக்குழந்தையின் வாழ்க்கை வளர்வதற்கு அனுமதிப்பீர்கள். புரிதலுடன் கூடிய அன்பு செலுத்தும் அதேநேரத்தில் தன் தன்மையுடன் வளர அனுமதிக்கப்படும் குழந்தைகளின் வாழ்வு மிக அற்புதமாக இருக்கும்.

கேள்வி – பதில் தொடரும்… 

………………………………………………..

(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)

இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com

 

 

திருமிகு.ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *