ஆசிரியர்களே! இனியாவது உருப்படியாக பாடம் நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள்
“சிலரை தோல்வியுறச் செய்வது மிக எளிது. ஆனால், சிலரை வெற்றி கொள்வது மிகவும் கடினம்” என்கின்றார் அப்துல் கலாம்.
நாம் பல விசயங்களில் மிக எளிதாக வெற்றிக் கண்டுவிடலாம் என நினைத்துக் கொண்டுதான் ஆரம்பிக்கின்றோம்., அதனால் ஏற்படும் தோல்வி மிகவும் மோசமாக அமைந்துவிடும் என்பதை எப்போதும் உணர்வதில்லை. இன்று அப்படியான தோல்வி குறித்து பேசுவது அவசியம்; அதனை உணரவேண்டும்.
‘அரசாங்கம் கடனில் இருக்கின்றது என்பதை உணராமல், பழைய ஓய்வு ஊதியத் திட்டத்திற்காக போராடுவது எந்த விதத்தில் நியாயம்?’ ’ஆசிரியர்கள் கை நிறைய காசு வாங்குகின்றார்கள். சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள். கார், பைக்குன்னு விதவிதமான வாகனங்களில் வருகின்றார்கள்.
இவர்களுக்கு இன்னும் ஊதியம் வேண்டுமாம்?’ ’எப்ப பாரு ஊதியத்திற்காக போராடுவதே இவனுங்களுக்கு பொழப்பா போச்சு?’ ‘பல தொழில் பண்றானுங்க.. முந்தி எல்லாம் வட்டிக்கு கொடுத்தானுங்க. இப்ப காலத்திற்கு ஏற்ப அடகு கடை நடத்துறானுங்க! அது பாத்தாதுன்னு சம்பளம் கூடுதலா வேண்டுமாம்!’ இப்படி
பல ஏச்சுக்கள்; பேச்சுகள்.
அந்த ஏச்சுகளுக்கு பதில் பேச்சுகள், ஆசிரியர்களைக் கேவலமாக எண்ண வழி வகை செய்தன. அவைகள் போராட்டத்திற்கான எதிர் ஆதரவை வலுவடையச் செய்தன. அந்த பொறுப்பை நெட்டிசன்கள் சரியாகவே செய்தார்கள்; பயன்படுத்தினார்கள்.
போராட்டத்திற்கான வடிவம்; போராட்டத்திற்கான காலம். மாணவர்களையும், பெற்றோரையும் நம் ஆசிரியர்கள் என்ற உறவு நிலையில் இருந்து தள்ளி வைத்தது. ஆசிரியர்களைத் தங்களில் இருந்து அப்புறப்படுத்தி, அவர்களுக்கு வேறு வடிவத்தை கொடுக்கச் செய்தது. மக்களிடம் இருந்து அவர்களை
அந்நியப்படுத்தியது.
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஆசிரியர்கள் தான் பெரிதும் பேசு பொருளாக இருந்தனர். இன்னும் ஆசிரியர்களை சமூகம் நம்புகின்றது என்ற பெரிய உண்மை இதன்பின் உள்ளதையும் உணர வேண்டும். ஆசிரியர்கள் தான் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டுள்ளனர். எந்த அரசை பலவீனம் என்று நினைத்து போராடத் தொடங்கினார்களோ, அந்த அரசு மக்கள் ஆதரவற்ற போராட்டத்தின் பலவீனத்தை பயன்படுத்திக்
கொண்டு, எந்த (எஸ்மா, டெஸ்மா) சட்டத்தையும் பயன்படுத்தாமல், காலிபணியிடம் என்ற அறிவிப்பை வெளியிட்டு, நினைத்த இடத்திற்கு மாறுதல் என்ற ஆசையை தூண்டிலாகப் பயன்படுத்தி எளிதில் வெற்றி
பெற்றது. போராட்டம் மக்கள் ஆதரவு அற்றதாக திசை திருப்பப்பட்டது.
அது உண்மையும் கூட. மதிப்பெண் கல்வி முறையில், தேர்வு என்ற ஒன்றை ஆயுதமாக்கி அரசு தன் மதிப்பை கூட்டிக் கொண்டது.
மக்கள் ஆதரவுடன் எந்த போராட்டம் நடந்துள்ளது? என்று ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பினார். இன்று போராட்டக்காரர்களுக்கு, போராட்டம் குறித்த அடிப்படை விசய ஞானம் இல்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொண்டேன்.
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஜே.கே எனப்படும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களை எப்போது சந்தித்தாலும் காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளத்தூர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற போராட்டம் குறித்து பேசுவார். அது குறித்து அறிந்து கொண்ட விசயத்தை இங்கு பகிர்தல் அவசியம்.
அது, பள்ளத்தூர் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பெண்கள் கல்லூரியில் முதல்வர் நியமனம் சார்பாக எழும்பிய போராட்டம் ஆகும். அப்போராட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்தல் அவசியம். நிர்வாகத்தின் சார்பாக ஜீனியர் பேராசியர் ஒருவரை கல்லூரி முதல்வராக நியமிக்கின்றார்கள். சீனியரையே நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் இருந்து குரல் எழும்புகின்றது.
அதேவேளையில் அதற்கு நிர்வாகத்தில் ஒரு தரப்பினரின் ஆதரவு கிடைக்கின்றது. இதற்கு மாணவிகளும் ஆதரவாக குரல் தரச் செய்கின்றனர்.
அதனை அறிந்த நிர்வாகம் அதற்கு காரணமான இரண்டு ஆசிரியர்களை இடைக்காலமாக பணிநீக்கம் செய்கின்றது. அதனால், நிர்வாகத்திற்கு எதிராக, ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவிகள் பலர் வகுப்பறையை புறக்கணித்து குரல் எழுப்புகின்றனர்.
அக்கல்லூரியில் பெரும்பாலான மாணவிகள், வெளியூரில் இருந்து வருவதால், கல்லூரி விடுதியில் தங்கி படித்தனர். மாணவர்களைத் தடுத்து நிறுத்தினால் போராட்டம் தீவிரமாகும் என்பதை உணர்ந்த நிர்வாகம்
தந்திரமாக விடுதியை இழுத்து மூடுகின்றது. மேலும், ஆசிரியர்களுக்கு உடந்தையாக இருந்த இரண்டு நிர்வாக பணியாளர்களைப் பணி நீக்கம் செய்து ஆணையிடுகின்றது.
விடுதி மூடியதால், மாணவிகள் பலரும் வீட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் எழுகின்றது. அந்த நேரத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆதரவாக மூட்டா இப்போராட்டத்தில் தன்னை இணைந்து கொள்கின்றது.
மாணவர்கள் கல்லூரிக்கு வரவேண்டும், ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி அருகில் அக்கல்லூரியின் பேராசிரியர் ஒருவரின் வீட்டை வாடகைக்கு பிடித்து விடுதி நடத்த ஏற்பாடு
செய்கின்றனர். மூட்டாவின் பேராசிரியர் குமரப்பன் வழி காட்டுதலில்
இப்போராட்டம் தொடர்ந்தது.
வெளிவிடுதியில் தங்கி இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மாணவிகளைக் கல்லூரிக்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுக்கின்றது அதேவேளையில் நிர்வாகத்திற்கு பயந்து ஆசிரியர்கள் பலரும் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் கல்லூரிக்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.
போராட்டக் குழுவினரால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரின் உதவியுடன், மாணவிகள் படிப்பு கெட்டு போகாமல் இருப்பதற்காக ’ரோட் சைட் கல்லூரி’ ஆரம்பிக்கப்படுகின்றது. கல்லூரியின் வெளியே மக்கள் ஆதரவுடன் டெண்ட் போட்டு மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.
ரோட் சைட்டில் அமர்ந்து பாடம் கற்றுக் கொடுத்து கொண்டிருக்கும் அதேநேரத்தில், போராட்டக்குழுவினர் கல்லூரியின் மற்றோரு பக்கத்தில் நிர்வாகத்திற்கு எதிராக அரசியல் பிரமுகர்கள் பலரையும் அழைத்து, அப்பகுதி மக்களின் பேராதரவுடன் போராட்டம் நடத்தினர். தங்கள் பக்கம் உள்ள நியாயத்தையும், கல்லூரியின் முறைக்கேடுகளையும் மைக்கில் உரக்க பேசினார்கள்.
பாதி ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தாலும், மாணவிகளில் ஒரு சிலரே கல்லூரிக்குள் சென்றனர். ஆகவே, தனித்தனியாக பாட வாரியாக கற்பிக்க ஆசிரியர் தேவை ஏற்பட்டது. ஒவ்வொரு
பாடத்திற்கும் வெவ்வேறு கல்லூரியில் இருந்து பேராசிரியர்கள் தங்கள் கல்லூரிக்கு தற்காலிக விடுப்பு கொடுத்து, இந்த ’ரோட் சைட் கல்லூரி’ மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்கள். அதற்காக தனியாக வருகை பதிவேடு பராமரிக்கப்பட்டது.
நிர்வாகம் பல வழிகளில் போராட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சித்தது. விடுதிக்கு உணவு அளித்தவர்களைத் தடுத்து நிறுத்தியது. சனிட்டரி பிரச்சனைகளை உருவாக்கியது. போலீசாரின் உதவியை நாடி,
போராட்டக்காரர்களுக்கு சங்கடத்தை உருவாக்கியது. விடுதி இடம் அளித்தவரை மிரட்டியது. ஆகவே, மீண்டும் விடுதி மாற்றப்பட்டது. உணவு சமைத்து விடுதியில் அளிக்கப்பட்டது. உணவளிப்பவர்களுக்கு முன்பணம் கொடுக்க வேண்டி இருந்தது. அனைத்தையும் போராட்டக்குழு சமாளித்தது.
பொதுமக்கள் இரவு ’ரோட் சைட் கல்லூரி’யை நிர்வாகம் எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காக டெண்டு கொட்டகையில் தங்கி காவல் காத்து வந்தனர். வெளியூரில் இருந்து பாடம் நடத்தவந்த பேராசிரியர்களுக்கு
பேருந்து நிலையம் வரை துணைக்கு வந்து வழி அனுப்பி வைத்தார்கள். மாணவர்களுக்கு ’ரோட் சைட் கல்லூரி’ குழுவினரால் பேருந்து அட்டை வாங்கிக் கொடுக்கப்பட்டது. இப்படியாக போராட்டம் ஆறு மாதம் நீடித்தது.
தேர்வும் நெருங்கியது. மாணவியர் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. மாணவர்கள் தேர்வு கட்டணத்தை நேரடியாக பல்கலைகழகத்தில் செலுத்த முடியாது என்று பல்கலைக்கழகத்தின் விதியாக இருந்தது. அந்த சூழலில் கல்லூரி வழியாகத்தான் தேர்வு கட்டணம் செலுத்தி, தேர்வு எழுத வேண்டும் என்ற நிர்பந்தம் உருவானது.
தொடர்ந்து போராட்டக் குழுவினர் நிர்வாகத்தினர் நியமித்த வக்கீலுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால், எந்த முடிவும் வரவில்லை. தற்சமயம், மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்ற அவசியம் உருவானதால், நேரடியாக நிர்வாகியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
கோர்ட்டில் நிர்வாகம் வாய்தா மேல் வாய்தா வாங்கி இழுத்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் நேரடியாக நிர்வாத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒருவழியாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்வது என்றும், காலப்போக்கில் மூத்தவரை முதல்வராக நியமிப்பது
என்றும் முடிவெடுக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வு எழுத கட்டணம் பெற்றுக் கொண்டனர். நான்கு பேரும் கல்லூரியில் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டனர். கல்லூரி விடுதி திறக்கப்பட்டது.
இதில் முக்கியமானது. ரோட் சைட் கல்லூரியின் வருகைப்பதிவு தேர்வு எழுத கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தன் பணி நேரம் போகவே போராடினார்கள் என இவ்வருகைப்பதிவேட்டால் நிர்வாகத்தாலும், பல்கலைக்கழக மானிய குழுவாலும் ஏற்று கொள்ளப்பட்டு,
ஆசிரியர்களுக்கும் ஆறுமாதக்காலத்திற்கு சம்பளமும் வாங்கித் தரப்பட்டது.
மக்கள் ஆதரவும், முறையான வழி நடத்தலும், கொள்கை பிடிப்பும் தான் இப்போராட்டம் பல இன்னல்கள் நடுவிலும் வெற்றி பெற்றுள்ளது. பேராசிரியர் ச. மாடசாமி அவர்களும் இப்போராட்டக்குழுவில் இருந்துள்ளார்.
ஆசிரியர்கள் தொடர்ந்து நேரடியாக ஒவ்வொரு நாளும் மக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். நாள்தோறும் பெற்றோர்களைச் சந்திப்பவர்கள். என்றாவது ஆசிரியர்கள் பெற்றோரிடம் பணிசார்ந்த குறைகளைப் பேசி
உள்ளோமா? இல்லை,, என்றாவது பெற்றோர்களின் குறைகளைக் கேட்டு உள்ளோமா? பிடிஏ எல்லாம் சடங்குகளாகவே நடக்கின்றன.
நடைபெறுகின்றன. இன்றைய கல்வி அமைச்சர் பிடிஏ வை வலுப்படுத்த வேண்டும் என்ற போது அதன் அரசியல் புரியாமல் சொல்கின்றார் என நினைத்தேன். உண்மையில் அவர் தெளிவான அரசியல் நிலைப்பாடுடனே அதனைக் கொண்டு வர நினைத்துள்ளது புரிகின்றது. வசந்தி தேவி போன்ற கல்வியாளர்கள் தொடர்ந்து கிராமக் கல்வி சபையை பள்ளிகளில் முறைப்படுத்த வலியுறுத்துவதும் , சிறந்த அரசியல் பார்வையே!
பெற்றோருடன் பேசுவதை விடுவோம். எத்தனையோ கல்வி கொள்கைகள் வருகின்றன, வந்துள்ளன. மாணவர்கள் நலனை பாதிக்கும் எந்த ஒரு விசயத்திற்காகவாவது சங்கங்கள் , ஆசிரியர்கள் குரல் கொடுத்துள்ளனவா? அட! இப்போராட்டம் நடந்த சமயத்தில் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு, கட்டாய பாஸ் என்பதை மாற்றி, குறைந்த கற்றல் அடைவு கொண்ட மாணவனை பெயில் ஆக்க வேண்டும் என்று மத்திய அரசு நடவடிக்கை
எடுத்த போது மறுப்பு தெரிவித்தோமா? இலவச கட்டாயக் கல்வி கொள்கைக்கு எதிரான விசயம் என்று சுட்டிக்காட்டினோமா? அதற்கு கல்வியாளர்கள் பலரும் இருக்கின்றனர் என நினைப்பது எவ்வளவு பெரிய
அபத்தம்!
“எனக்கு நான்கு வருடங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வாய்ப்பளியுங்கள் அதன்பின் நான் விதைத்த விதைகளை வேருடன் பெயர்த்தெடுத்தல் கடினம்.” என்றார் லெனின். ஆசிரியர்களின் அனுபவங்கள்
தான் எத்தனை வருடம்? குறைந்த பட்சம் இருபது. 2003ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு ? நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
லெனின் பார்வையில் இருந்து யோசியுங்கள். எளிதில் ஆணிவேரை அல்லவா பிடிங்கி விட்டிருக்கின்றார்கள். ஏனெனில், ஆசிரியர்களுக்கு அரசியல் இல்லை. அவர்கள் கற்றுக் கொடுக்கும் கல்வித்திட்டத்தின் அரசியலும்
ஆசிரியர்களுக்கு புரிவதில்லை. மாணவர்களிடத்திலும் அதனால் அரசியல் இல்லை. ஆகவே, பொது மக்களிடத்தில் ஆசிரியர்களுக்கான அரசியல் பூஜ்ஜியம் ஆகிவிட்டது.
ஆசிரியர்கள் அரசியலை அபத்தம் என்று நினைக்கின்றனர். கொள்கைகளும் இல்லை. கோட்பாடுகளும் இல்லை. இதனை பொதுமக்கள் பார்வையில் சொன்னால், போலீஸ்காரான் முன்னால் நின்று செல்பி எடுத்து பேஸ் புக்கில் போடுவதையே போராட்டத்தில் பங்கு கொண்டது என்று ஆசிரியர்கள் நினைக்கின்றார்கள் இது வருத்தம் அளிக்கிறது.
உண்மையில் ஆசிரியர்களுக்கானக் குரலை பதிவு செய்ய நல்ல ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்களுக்கானப் போராட்டத்தை வழி நடத்த நல்ல குழு இல்லை. ஆசிரியர்களுக்காக டிவியில் பேட்டி அளிக்க தகுந்த அரசியல்
ஞானம் பெற்ற ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர்களுக்காக எவரும் இல்லை. ஏனெனில், ஆசிரியர்கள் உண்மையான போராட்டக்காரர்களாக இல்லை. உண்மையான போராளியாக இல்லை. ( அரசு ஊழியர்கள் இதில் அடக்கம்)
ஆசிரியர்களுக்கு வளைந்து கொடுப்பது என்பது எளிதாகி விட்டது. ஏனெனில், ஆசிரியர்கள் இன்று பொதுமக்கள் கருதுவது போன்று சொகுசு வாழ்க்கைக்கு பழகி விட்டனர். அன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கு வாழ்வாதாரமே பெறும் சவாலாக இருந்தது. பலர் விதைத்த விதையின் விருட்சத்தின்
நிழலில் சொகுசாகப் படுத்துக் கொண்டு இன்று கனவு காண்கின்றோம் என்பதை ஆசிரியர்கள் உணரவில்லை. ஆசிரியர்கள், போராட்ட வியர்வையின் உப்புசுவை அறியாமல் வார்த்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஏனெனில் , ஆசிரியர்கள் தங்களுக்கான அரசியலை, கொள்கையை மறந்து, இணைந்துள்ளனர். உண்மையான பிணைப்பாய் இல்லை. சந்தாக்களால் இணைக்கப்பட்டுள்ளனர்.
யார் நம் எதிரி? யார் நம் நண்பர்கள்? இதுதான் போராட்டத்திற்கான முதல் கேள்வியாக இருக்க வேண்டும் என்கின்றார் மாவோ. அதனை ஜாக்டோ- ஜியோ போராட்ட குழுவினர் மறந்துவிட்டனர். இன்று பள்ளிக்கல்வித்துறையை தவிர , பிற அரசு துறை சார்ந்த அனைத்து பணியாளர்களும் வேலைக்கு திரும்பி விட்டனர். ஆனால், பள்ளிக்கல்வி துறையினர் மட்டும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, பணி மாறுதல்
ஆணைக்காக காத்திருக்கின்றனர்.
போராட்டம் முடிந்து ஒருவாரமாகியும் தெருவில் நிற்கின்றனர். அவர்களுக்காக யார் போராடுகின்றார்கள்? யார் போராடப் போகின்றார்கள்? உண்மையான நண்பர்களுடன் இணைந்து இருத்தலே உண்மையான
வெற்றிக்கு வழி சேர்க்கும் என்பது சில போராட்டங்களின் முடிவுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்கின்றார் மாவோ. உண்மை நண்பர்களே! உண்மையில், உங்களுக்காகப் போராடி இன்னும் பள்ளியில் சேராமல் இருக்கும் நண்பர்களுக்காக என்ன செய்துள்ளீர்கள்! இப்போதாவது எழுச்சி
கொண்டிருக்க வேண்டாமா?
“ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன்” என்றானே சே. குவேரா. இப்போதாவது ஆத்திரம் கொண்டிருக்க வேண்டாமா? ஏன் என யோசியுங்கள். உண்மையான
தோழனைக் கண்டுபிடியுங்கள் ஆசிரிய நண்பர்களே! அதற்கு அரசியல் பழக வேண்டும். அதனை கொள்கைகள் , கோட்பாடுகள் வழியாகத்தான் பெற முடியும். சிந்தியுங்கள். உங்கள் கோட்பாடுகளைக் கண்டடையுங்கள்.
கறந்த பால் மடி சேராது. அதுபோலத்தான், பங்களிப்பு ஓய்வு ஊதியம் என்பது மத்திய அரசின் மாநிலம் முழுவதிற்குமானச் சட்டம். அதனை மாநில அரசு மாற்றிவிட முடியாது. ஆகவே, ஓய்வூதியம் என்பது மீண்டும் சாத்தியமில்லாத போது, பங்களிப்பு ஓய்வு ஊதியத்திட்டமும் இல்லாமல்,
பழைய ஓய்வூதியத்திட்டமும் இல்லாத ,குறைந்த பட்ச ஓய்வு ஊதியத்திற்கான ஒரு மாதிரி வரையறையுடன் அரசை அணுகுவது நல்லது.
அரசின் கடன் சுமைகளையும் கருத்தில் கொண்டு, அதனை ஒரு நிபுணர் குழுவினர் கொண்டு கண்டு அடைய வேண்டும். பிற கோரிக்கைகள் மீதான சரியான புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். முதலில் அதற்கான புரிதல் ஆசிரியர்கள் அனைவருக்கும் வேண்டும்.
“முதலில் தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்.” என்கின்றார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆசிரிய நண்பர்களே! நாம் நம்மை மாற்றிக் கொள்வோம். நம்
புரிதலை இன்னும் அதிகரித்துக் கொள்வோம். உண்மையான அரசியல் கற்றுக் கொள்வோம்.
சங்கத்தின் மீதான பிடிப்பு என்பது சங்கத்தின் சந்தா தொகை செலுத்திய ரசீதில் இருந்து வந்து விடுவதில்லை. அதன் உண்மையான கொள்கை கோட்பாடுகளை அறிந்து கொண்டு செயல்படுவதில்தான் உள்ளது.
“Without revolutionary theory there can be no revolutionary movement.” என்கின்றான் லெனின். ஆம்! பலரும் தியரி கற்றுக் கொள்ள வேண்டும். சரி! அது கிடக்கட்டும். இப்போது, உங்களுடன் இணைந்து போராடி சிறைக்கு
சென்று, பணி நீக்கம் செய்யப்பட்டு, பணி மாறுதலுக்கு காத்திருக்கும் ஆசிரிய நண்பர்களுக்கு என்ன தரப் போகின்றீர்கள்?
“முட்டி போட்டு வாழ்வதை விட நின்று சாகலாம்.” என்கின்றார் சே குவேரா. உங்களுக்காக போராடியவர்கள் கல்வி அலுவலகங்களின் வாயிலில் நாள்முழுவதும் நின்று கொண்டிருப்பது தெரியுமா? அரசாங்கத்துடன் எனக்கு எந்த முரணும் இல்லை. நான் அதன் அதிகாரத்தை மதிக்கின்றேன். ஆனால், உங்களுக்கான செய்தி ஒன்றை வைத்திருக்கின்றேன். சொல்லட்டுமா?
“இனியாவது உங்கள் வகுப்பறையில் உருப்படியாக பாடம் நடத்துங்கள். வேருடன் பெயர்த்தெடுக்காதப்படி!”
க.சரவணன். எழுத்தாளர்.
அருமையான பதிவு ஆசிரியர்கள் தங்களது வாழ்க்கை வசதிகள் ஒன்றையே வைதது வாழ்ந்து வருகின்றனர் சமுகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இவர்கள் அனைவரும் தங்களை சுற்றி உள்ள அனைத்து வகையான பிரச்சினை குறித்து எந்தவித கவலை கொள்ளுவது இல்லை
இவர்கள் அனைவரும் மீதும் சொல்லப்பட்ட குறைகள் எனன வென்று எடுத்து கொள்ள வேண்டும் என்றால்
தங்களது குழந்தைகள் மட்டும் உயர் கல்வி பெறவேண்டும் எனற எண்ணம் தான் சமுகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றால் ஆசிரியர்கள் வீட்டில் உள்ள அனைத்து குழந்தை களும் தாங்கள் பணியில் உள்ள பள்ளியில் அல்லது தங்களது அருகேயுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் படி செய்ய வேண்டும்
மிகச்சரியான பார்வை