தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வரலாறான இயக்குனர் இமயம் பாரதிராஜா!
என் இனிய தமிழ் மக்களே…!
மதுரை மாவட்டம் தேனியில் உள்ள அல்லிநகரம் எனும் கிராமத்தில் பிறந்தவர் தழிழ் சினிமாவின் “இயக்குனர் இமயம் “ என்று செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா.
“என் இனிய தமிழ் மக்களே நான் பாரதிராஜா பேசுகிறேன்” என்ற கரகரத்த குரலை அறியாதவர்கள் உண்டா? கிராமத்து சினிமாவா கூப்பிடு பாரதிராஜாவை என கண்ணை மூடி கூப்பிட்ட தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் எத்தனையெத்தனை.
புதுவரவு சினிமா
16வயதினிலே என தொடங்கி கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம், காதல் ஓவியம், மண் வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா என அனைத்துமே இவர் இயக்கிய வெற்றி படங்கள்.
இவர் ரஜினி கமல் என்ற இரு ஜாம்பவான்களை வைத்து எடுத்த 16 வயதினிலே திரைப்படம் “ இது எப்படி இருக்கு” என ரஜினி பாணியிலே பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 16 வயதினில் ஸ்ரீதேவி என்னும் தோகை விரிக்காத மயிலை படம் நெடுகிலும் உலவ விட்டவர்.
“கிளி என்னுது” என ஒற்றை விரலை நீட்டி அப்பாவியாக பார்க்கும் “கிழக்கே போகும் ரயில்” ராதிகாவை , பின்னாளில் அவரா இவர் என வியந்து போகும் அளவிற்கு தங்கையாக “கிழக்கு சீமையிலே” என்னை விட்டா நடிக்க ஆளேயில்லை என ராதிகாவே சவால் விட்டு சொல்லுமளவிற்கு பட்டை தீட்டியவர் இயக்குனர் இமயம்.
கிராமத்து சினிமாவில் “மண்வாசனை” கண்டவர். அவர் அறிமுகப்படுத்திய நாயகிகள் அனைவருமே பாரதிராஜாவின் “புதிய வார்ப்புகள்” தானே! இவரும் பாலசந்தரை போலவே பல “புதுமைப் பெண்” களைப் படைத்தவர் தான். “ர” வரிசை ஹீரோயின்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர்.
காதல் மட்டுமா எடுப்பேன் எனக்கு சமூகம் சார்ந்த அக்கறை ஏராளம் என்கிறார் இயக்குனர் இமயம்.
“ஒரு ஆண் பிள்ளையை பெத்திருந்தா என்னைக்கோ என் பிழைப்பு திண்ணைக்கு வந்துருக்கும் நான் பெத்த மகளே” என ஜெயசந்திரனின் மனதை உருக்கும் குரலில் பெரியார்தாசன் பாடும் ஒற்றை வரி ஒன்றே முழு படத்தை மட்டுமல்ல சமூதாயத்தையே உலுக்கி போடும்.
சமூகம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதைத் திரைக்காவியமாக்கி வெற்றியை ருசித்த பாரதிராஜாவின் கருத்தம்மா என்ன செய்தது தெரியுமா? உசிலம்பட்டியில் நடந்து கொண்டிருந்த பெண் சிசுக் கொலைகள் கருத்தம்மாவிற்குப் பிறகு குறைந்து போனது எவ்வளவு பெரிய சமூக மாற்றம். “பசும் பொன்” படத்தில் சத்தமில்லாமல் விதவை மறுமணம் குறித்து அழுத்தமாய் பதிய வைத்திருப்பார்.
“அலைகள் ஓய்வதில்லை” என பூணுலையும், சிலுவையினையும் அறுத்தெறிந்தவர், “வேதம்புதிது “ படத்தில் “நான் கரையேறிட்டேன் நீங்க அங்கேயே நிக்கறீங்க” என மறுபடியும் சமூகம் புரட்சிக்கு வித்திட்டிருப்பார்.
முதல் மரியாதை திரைப்படத்தில் செருப்பு தைக்கும் செங்கோடன் மகளை தனது மருமகனுக்கு கட்டி வைத்து சமூக நீதி குறித்து சொல்லாமல் சொல்வார். அலைகள் ஒய்வதில்லை என பள்ளி காதலையும் பக்காவாக கையாள்வார், காதலுக்கு வயதேது என முதுமை காதலுக்கும் “முதல் மரியாதை“ செய்வார்.
இன்றைய சைக்கோ திரில்லர், சீரியல் கில்லர்களி்ன் முன்னோடியே இயக்குனர் இமயத்தின் “ சிகப்பு ரோஜாக்கள் “ தானே. “டிக் டிக் டிக்” படம் மூலம் பார்ப்பவர்களின் மனதை “திக் திக் திக்”என ஆக்க முடியும் என்னால் என சவால் விடுகிறார் பாரதிராஜா.
என்னால் “காதல் ஒவிய” த்தையும் கவிதையாய் வரைய முடியும் , ரஜினியுடன் “கொடி பறக்குது “என கமர்ஷியலாகவும் கலக்க முடியும் என்கிறார்.
ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவின் ஈடில்லா திரை சகாப்தத்தினை செம்மையாக நிறைவேற்றி ஒய்வெடுப்பார் என நினைத்த நேரத்தில், விஷால், விதார்த், சிம்பு என இளம் நடிகர்களோடு போட்டி போட்டு கொண்டு நான் நடிப்பிலும் இமயம் தான் என தனது கொடியை பறக்க விடுகிறார்.
தனது உணர்ச்சி பிழம்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என பட்டையை கிளப்பி வருகிறார்.
இவருக்கு ஏராளமாக விருதுகளும் கௌரவங்களும் பெருமை சேர்த்துள்ளது. இந்திய அரசிடமிருந்து 2004 ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
இவர் இதுவரை ஆறு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். பல முறை மாநில விருதுகளுடன், பல்வேறு விருதுகள் உட்பட நந்தி அவார்டையும் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலா வரலாறான இயக்குனர் இமயம் பாரதிராஜா.
– தனுஜா ஜெயராமன்
Leave a Reply