வருடத்தின் 365 நாளும் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள்!

Share Button

திருவண்ணாமலை :-

திருவண்ணாமலை மலையே சிவமாகத் திகழும் உன்னத திருத்தலம் திருவண்ணாமலை. இங்கே கிரிவலம் வருவது பிரசித்தி பெற்ற வழிபாடு.

கிரிவலம் வருவது அக்னிமலையாக விளங்கும் சிவனாரையே வலம் வந்து வழிபடுவதாகும். பௌர்ணமி நாள் அன்று மட்டும்தான் திருவண்ணாமலையில் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம்.

எந்த நாளில் கிரிவலம் வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 5.08 மணிக்கு தொடங்கி 7ஆம் தேதி காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமி கிரிவலம் செல்ல திங்கட்கிழமை உகந்தது என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலையார் சன்னதி துவக்கத்திலிருந்து மலையை சுற்றி வரும் கிரிவலப்பாதை முழுவதும் பல கோயில்கள் அமைந்திருந்தாலும், எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே சிவபெருமான் எட்டு லிங்கத் திருமேனிகளாக திருக்காட்சி தருகிறார்.

சிறப்பு வாய்ந்த அஷ்ட லிங்க கோயில்களின் தரிசனம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
அஷ்டலிங்க தரிசனத்தில் முதலில் அருள்தருவது இந்திர லிங்கம்.

இந்திரன் வழிபட்ட லிங்கம். இங்கு ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதையெல்லாம் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார் இந்திர தேவன். கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள்தருகிறார்.

கிரிவல பாதையில் உள்ள அக்னி குளத்தையொட்டி அமைந்துள்ளது அக்னிலிங்கம். தென்கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். ருத்ரமூர்த்திகள் மூவர் பல யுகங்களாக அங்க பிரதட்சணமாக கிரிவலம் வந்தனர்.

அவர்கள் திருமேனிகள் இந்த இடத்தில் வந்தபோது குளிர்ச்சிபெற்றது. அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சுயம்பு லிங்கம் காட்சியளித்தது. அந்த இடம்தான் இன்றளவும் அக்னி லிங்கமாக காட்சி தருகிறது.

இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியன விலகும். எதிரிகள் தொல்லை, மனபயம் நீங்கும்.

கிரிவல பாதையில் 3வது லிங்கம் எமலிங்கம். எமராஜன் அங்கபிரதட்சணமாக கிரிவலம் சென்று சிவனை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது.

அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம் என்று வரலாறு தெரிவிக்கிறது. இங்கு மனமுருகி பிரார்த்தனை செய்தால், பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.

சோண தீர்த்தத்துக்கு அருகே நிருதி லிங்கம் அமைந்துள்ளது. அரியை நிருதீஸ்வரர் வலம்வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்போது கிரிவல மலையின் தென்மேற்கு திசையில் ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அந்த இடத்தைநோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூப லிங்கம் தோன்றியது. அதுதான் நிருதிலிங்கம்.

இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு கிடைக்கும். நீருக்கு அதிபதியான வருணபகவான், அக்னி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும், ஒற்றைக்கால் பிரதட்சணமாகவும் கிரிவலம் வந்து வழிபட்டார்.

அப்போது கிரிவல பாதையின் ஒரு இடத்தில் வானம்தொடும் அளவுக்கு நீரூற்று வளர்ந்தது. அந்த புனிதநீரை உடல் முழுவதும் பூசி அண்ணாமலையை மெய்மறந்து வணங்கினார்.

வழி திறந்தபோது எதிரில் ஒளிமயமான வடிவில் லிங்கம் காட்சியளித்தது. அந்த லிங்கமே வருணலிங்கம். இங்குவழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.

மூச்சுக்காற்றை நிலை நிறுத்தியபடியே வாயுபகவான் கிரிவலம் சென்றார். அப்போது அடிஅண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அதுவரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயுபகவான் நிலைதடுமாறினார்.

அங்கு பஞ்சக்ருத்திகா மலர்களின் நடுவே சுயம்பாக லிங்க வடிவில் சிவன் காட்சி அளித்தார். அதுவே வாயுலிங்கம். இக்கோயிலை அடையும்போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும்.

காற்று தென்றலாக வீசும். இங்கு வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.

எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன். ஆனால் ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையுடன் குபேரன் கிரிவலம் சென்று வழிபட்டார்.

அப்போது விஷ்ணுவும், லட்சுமியும் சேர்ந்து அண்ணாமலையாரை சக்ரபாணி செய்யும் காட்சியை குபேரன் தரிசித்தார். அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேரலிங்கம். இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மன அமைதி கிடைக்கும்.

நிலையற்ற வாழ்வை உணர்த்தும் லிங்கமே ஈசான்யலிங்கம். கண்களை மூடியபடி ருத்திர முனிவர் கிரிவலம் சென்றார். அப்போது ஈசான்ய மூலையில் ஒருவரின் அழுகுரல் கேட்டது.

அங்கு சென்றபோது சுயம்பு லிங்கமாக காட்சியளித்தது. கிரிவல பாதையின் கடைசி லிங்கம் இது. இங்கு வழிபாடு செய்தால் மனம்ஒருநிலை அடையும்.

திருவண்ணாமலையில் பௌர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். ஞாயிற்று கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும்.

திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.

வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். அஷ்டமி நாளில் கிரிவலம் வந்தால் தீவினைகள் போகும்.

கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னதானம் கொடுப்பது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம்.

அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், முன்ஜென்ம பாவங்கள் அகலும் கிரிவலம் வருவதன் முழு பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

PUTHUVARAVU Spiritual Team

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *