கல்வி உயர : (பாகம்-5) பள்ளியில் பெற்றோரின் பங்கு அவசியமா?

Share Button

எண்ணும் எழுத்தும் நான்காம் கட்டகம் பயிற்சி மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். அறிவு கட்டமைப்பில் பெற்றோர்களின் பங்கும் இன்றியமையாத ஒன்று.

கற்றலுக்கான இடமாக வகுப்பறை உள்ளது. இருப்பினும், அறிவு கட்டமைக்கப்படுவது தொடர்ச்சியான செயலாக உள்ளது. அது வகுப்பறை மட்டுமல்லாது… வீடு, சுற்றுபுறம் சார்ந்தும் உள்ளது.

வகுப்பறையில் எண்களை ஆசிரியர்கள் போதித்தாலும், அதன் புரிதல் அல்லது தொடர்ச்சி வீடு, சுற்றுபுறத்தை சார்ந்து அமைகிறது. பெற்றோர், உறவினர், வயதில் மூத்தோர் உதவியுடன் கற்றல் முழுமை பெறும்.

குடும்பத்துடன் வெளியில் செல்லும் போது அம்மா, ” டேய்! பெரியவனே, இடது பக்கம் எத்தனை பெயர்பலகை உள்ளன என எண்ணி கொண்டு வா . சின்னவனே வலது பக்கம் நீ எண்ணு” என்பார்.

ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணுவதைத் தொடங்குவோம். தெரு முடிவில் இருவரிடமும் எத்தனை எனக் கேட்பார். நான் 32 என்பேன். தம்பி 35 என்பான். தம்பிதான் வெற்றி பெற்றான். இன்று அவனுக்கு பிடித்ததை வாங்கித் தருவேன் என உற்சாகப்படுத்துவார்.

திணமனி தியேட்டர் எதிர்புறம் உள்ள புளியமரத்தடியில் விற்கும் போலியும், சுண்டலும் தம்பி கேட்பான், அம்மா மகிழ்ச்சியோடு வாங்கித் தருவார். வீட்டிற்குத் திரும்பும்போது அவனே இருபுறமும் உள்ள விளக்குகளை எண்ணிக் கொண்டு வருவான்.

இப்படிதான் வகுப்பறையில் பெற்ற எண்கள் குறித்த அறிவுத்திறன் அம்மாவின் உதவியுடன் எங்களை அறியாமலே வலுவூட்டப்பட்டன.

கற்றல் ஆசிரியர் உதவியுடன் மட்டுமல்லாது, பெற்றோர்கள் , குடும்ப உறுப்பினர்கள் , வயதில் மூத்தோர் உதவியுடன் தொடர்செயலாக அமையுமானால் சிறப்பானதாக இருக்கும். இதைத்தான் 4ஆம் கட்டகம் விளக்குகிறது.

இந்த தொடர் செயல்பாடு குழந்தைகளின் மீது அக்கறை உள்ள அல்லது பள்ளியுடன் தொடர்புடைய பெற்றோர்களின் குழந்தைகளுக்கே சாத்தியமாக உள்ளது.

கற்றல் பள்ளிக்கு வெளியேயும் தொடர்ச்சியாக அமைய வேண்டும். அதனை அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமாக்க வேண்டும். எப்படி?

வீட்டுப்பாடம் அதற்கு உதவும்.

ஒன்றாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க கூடாதே? உண்மைதான். ஏன் கொடுக்க கூடாது.

வீட்டுப்பாடம் என்ற பெயரில் பள்ளிகளில் கற்பிப்பதை பெற்றோர் மறுபடியும் உறுதிபடுத்துவதாகவே தருகின்றோம். கேள்விக்கான பதிலை இரண்டு முறை எழுதிவர கூறுகிறோம். இதில் பெற்றோரின் பங்கிற்கு இடமில்லை. மாணவர்களுக்கும் சுமையாக அமைகிறது.

வீட்டுப்பாடம் எப்படி கொடுப்பது?

பெற்றோருடனே குழந்தைகள் தாமாக சில செயல்களை செய்துபார்க்குபடி வீட்டுப்பாடம் அமைக்க வேண்டும்.

ஏன்?

இதனால் குழந்தை பள்ளியில் என்ன படிக்கிறது என்பதை பெற்றோர் அறிய வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம். குழந்தைகள் என்ன கற்றுள்ளனர் என்பதை அறிவதால், அவனுக்கு ஏற்படும் சிக்கல்களை பெற்றோர்கள் அறிய / உணர முடிகிறது. மேலும், பெற்றோர்கள் தாமாகவே குழந்தைகளுக்கு உதவி செய்வதும் நிகழும்.

ஆகவே, குழந்தைகளின் கற்றல் மற்றும் கற்பித்தலில் பெற்றோர் , உறவினர், மூத்தோர் உதவி அவசியம் ஆகும். இதனையே வேறுவிதமாக சமூக பங்கேற்பு அவசியம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

இந்த அரசு , கல்வி மேலாண்மை குழுவை அனைத்து அரசு பள்ளிகளிலும் அமைத்து உறுதி செய்துள்ளது. இச்செயல் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கதைகள் கூற பள்ளிக்கு அருகிலுள்ள வயதான மூதாட்டியை அழைத்தேன். அற்புதமான நாட்டுபுற கதையை கூறினார். அதேபோல் குழந்தைகள் பள்ளி ஆயாவுடன் புதிர்கள் போட்டு விளையாடுவார்கள். வயமான அவரிடமிருந்து அற்புதமான விடுகதைகள் கிடைக்கும்.

பெற்றோரின் பங்களிப்பும், ஊக்கமும் எவ்வாறு தொடர்ந்து நீட்டிக்கச் செய்வது என எல்லா பள்ளிகளிலும் வழிமுறைகளை கண்டு அடைய அமையவிருக்கும் தமிழக கல்விக் கொள்கை உறுதியான திட்டத்தை வகுத்து கொடுக்க வேண்டும்.

SMC போன்று பழைய மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம் , முன்னாள் ஆசிரியர் சங்கம் என சமூக பங்கேற்பை வலுபடுத்தி பள்ளியின் வசதிகளை பெருக்கவும், பராமரிக்கவும் நாடும்படியான திட்டத்தை வகுத்துக் கொள்ள கல்விக் கொள்கை உறுதி அளிக்க வேண்டும்.

பள்ளியின் இடத்தை பகுதிவாழ் மக்கள் தமது சமூக நிகழ்வுகளுக்கு அனுமதியும், அதன்வழி பராமரிப்புக்கு பகுதி வாழ் மக்களின் உதவியும் என இருவரும் பயனடையும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்ள தமிழக கல்விக் கொள்கை தெளிவான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

சமூகப் பங்கேற்பு என்பது பெற்றோர்களிடம் இருந்து நிதியை பெறுவதில் நிர்பந்தம் ஏற்படுத்திவிடாமல் இருக்கவும், பாடத்திட்டத்தில் இணைப்பதையும், கற்றலில் பெற்றோர் மற்றும் உள்ளூர் சமூகத்தின் பங்கினை பள்ளிகள் உறுதி படுத்தும் விதமாகவும் அமைக்க நல்ல வழிகாட்டுதலை அமைய இருக்கும் தமிழக கல்விக் கொள்கை உறுதி செய்ய வேண்டும்.

கல்வி குறித்து தொடர்ந்து உரையாடுவோம்.

க.சரவணன்,
மதுரை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *