கல்வி உயர : (பாகம்-4) கல்வியில் நாடகம்-பங்கும், பயனும்!
கல்வி உயர : (பாகம்-4) கல்வியில் நாடகம்-பங்கும், பயனும்!
வீடியோ கேம் விளையாடுவது, டிவியில் கார்டூன் சேனல் பார்ப்பதெனக் கோடை விடுமுறையை கழிக்கும் மகனிடம் பயனுள்ள வகையில் புத்தகம் படிக்கலாம் எனக் கூறினாள் மனைவி.
“சும்மா படி படின்னு சொல்லாதம்மா…அதிகாலையில் சிலம்பம் கத்துக்கிறேன். மாலையில் ஹிந்தி கிளாஸ் போறேன். மதியம் லைப்ரேரி போறேன். எப்பாரு மிஸ் மாதிரி படி,படின்னு சொல்றே…”
கோடையில் எல்லா விடுகளிலும் குழந்தைகளின் நிலைமை இதுதான். இப்படி வாரத்தில் இரண்டு தடவை பிரச்சனை வந்துவிடும்.
அதான் பரீட்சை எழுதி பாஸ் ஆகிட்டேன் என்று சத்யாவிடம் இந்தமுறை ஒரு கேள்வியை ஜாலியாக கேட்டேன்.
” சத்யா சின்ன டவுட். “
” உங்களுக்கு என்னப்பா பிரச்சனை?”
” இல்லை. நீ ஆறாம் வகுப்பு படிச்சு முடிச்சாச்சு தேர்ச்சியும் பெற்றுவிட்டாய். ரொம்ப சந்தோசமா இருக்கு. அதே கேள்வித்தாளைத் தர்றேன். திரும்பவும் எழுதுறீய்யா? அதில் பாஸ் ஆகிட்டா இனி நீ விடுமுறையில் எதையும் படிக்க வேண்டாம். உன் இஷ்டபடி நடக்கலாம்.”
” அட போங்கப்பா. பேப்பர் திருத்திக் கொடுத்து, பாஸ்ன்னு ரிசல்ட் கொடுத்துட்டாங்க. இப்ப ஏழாம் வகுப்பு போயிட்டேன். இப்ப போய்… “
” அதுசரிதான், சத்யா. திரும்ப எழுதினா குறைந்தா போயிடுவே.”
“அப்பா, படிச்சது எல்லாம் மறந்து போச்சு. உங்க பசங்களுக்கு பரீட்சை முடிந்து ஒரு வாரம்தானே ஆகுது. திரும்ப எழுதச் சொல்லுங்க. அவங்களும் மறந்துடுச்சுன்னுதான் சொல்லுவாங்க.” என்றான்.
இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்தும்.
கற்றபின் நிலைத்து நிற்க வேண்டாமா? கற்றபின்பு மறையாமல் நிலைத்து மனதில் நிற்பதுதானே உண்மையான கல்வி.
எங்கு பிரச்சனை உள்ளது?
குழந்தைகளை கசக்கி பிழியும், இயந்திரத்தனமான இடமாக பள்ளிகள் உள்ளன. வகுப்பறையில் திரும்பித் திரும்பிச் சொல்லப்படும் கற்றல் முறை செயல்படுத்தப்படுகின்றது. இவை குழந்தைகளைச் சோர்வடையச் செய்கின்றன. வகுப்பறை குழந்தைகளுக்கு இன்பமானதாக இருக்க வேண்டாமா?
தேர்வுக்குப்பின் மறந்துபோகதக்க வகையில். நினைவாற்றலை வலியுறுத்தும் கற்றலைவிட கற்போர் கற்ற கோட்பாடுகளைக் கடைபிடிக்கும் வகையில், ஆழ்ந்த புரிதலுடன் கல்வியை வழங்குவதே சிறந்தது. அதற்கு கற்றல் ஆர்வமூட்டகூடியதாக இருக்க வேண்டும். இனபமான இடமாக வகுப்பறை திகழ வேண்டும்.
குழந்தைகள் எப்படி கற்றுக் கொள்கிறார்கள்?
குழந்தைகள் வேறுபட்ட வழிகளில் கற்றுக் கொள்கிறார்கள். தங்கள் அனுபவங்களின் மூலம் கற்றுக் கொள்கிறார்கள். செய்து பார்த்துக் கற்றுக் கொள்ளுதல், , சோதனை செய்து கற்றுக் கொள்ளுதல் , வாசித்தல், மற்றவர்களுடன் விவாதித்தல், விசாரித்தல், கவனித்தல், சிந்தித்தல் ஆகியவற்றின் மூலம் கற்றுக் கொள்கிறார்கள்.
சரி ! ஏன் கற்றவற்றை மறந்து போகிறார்கள்?
மாணவனுக்கு வெறும் தகவலைச் சொல்லுபவர்களாக பல ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், வகுப்பறைகளில் நிலவி வரும் கலாச்சார, சமூக, வகுப்பு வேறுபாடுகள் அதற்கேஉரிய பாரபட்சமான நெறியற்ற தன்மைகளை ஏற்படுத்துகிறது.
ஆனால், ஆசிரியர்கள் பலரும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் ஒரேமாதிரியான நிலைபாட்டுடன் இப்படித்தான் பாடம் நடத்தவேண்டும் என்ற முடிவுடன் கற்றுக் கொடுப்பதால் தேர்வு எழுத மட்டுமே கற்றுக் கொண்டது உதவுகிறது. அதன்பின் மறந்துபோகிறது.
நிச்சயமாக தேர்வுத்தாளை திரும்பும் எழுதத் தந்தாலும் எனது மாணவர்கள் எழுதுவார்கள். பாஸ் ஆவார்கள் என சத்யாவிடம் கூறினேன்.
அதெப்படி?
முடிந்தவரை (எல்லா) பாடங்களை விமர்சனபூர்வமான படைப்புத் திறனை ஏற்படுத்தும் முறைகளில் கற்றுக் கொடுக்கிறேன். முயற்சிக்கிறேன்.
“அப்பா, எல்லா பாடத்தையும் திரும்ப எழுதி பாஸ் ஆகவே முடியாது. தமிழ் பாடத்தேர்வை வேணுமானால் எழுதலாம்.’
ஏன்?
“நாடகம் மூலம் கற்றுக் கொடுத்து இருப்பீங்க? பாட்டு பாடி நடிச்சு சொல்லி கொடுத்து இருப்பீங்க. கதை மூலம் சொல்லிக் கொடுத்து இருப்பீங்க. அதனால் ,தமிழ் தேர்வு எழுதினா பாஸ் ஆகலாம்.”
தமிழ் பாடம் மட்டுமல்ல. முடிந்தவரை எல்லா பாடங்களையும் நாடகம் வழியாக கற்றுத்தர முயன்றுள்ளேன். நாடகம் மட்டுமல்ல, பொம்மலாட்டம், விளையாட்டுமுறை , கதை சொல்லல், ஆடல், பாடல் , கார்டு மூலம் விளையாட்டு எனக் கூறிக் கொண்டே போகலாம்.
வகுப்பறைகள் கற்றலுடன், அனைத்து மாணவர்களும் கலந்து பழகுகின்ற வகையிலும், மாணவர்களின் உள்ளார்ந்த திறமை வெளிப்படுத்திடவும் , ஏற்படுத்திடவும் உதவுகின்ற வகையிலும் கற்றல் முறையை அமைக்க முயற்சிக்கிறேன்.
நாடக வடிவம் கற்றலுக்கான மிக சக்தி வாய்ந்த சாதனம். ஆனால், ஆசிரியர்கள் மிக குறைவாகவே பயன்படுத்துகிறோம்.
பாடங்களை நாடக வடிவமாக்குவது ஒரு கலை. அதற்கு ஒரு சிறு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது அதுசார்ந்த புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதனைப் பதிவு செய்வது வருத்தமளித்தாலும் ,வாசிக்கும் பழக்கம் அரிதானவர்களாகவே ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
அமைய உள்ள தமிழகக் கல்விக் கொள்கை ஆசிரியர்களை வாசிக்கும் பழக்கமுடையவர்களாக மாற்றுவதற்கானத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
எந்த பாடமானாலும் நாடகம் ஆக மாற்றிட முடியுமா?
முடியும். அறிவியல் கருத்துக்களைக்கூட நாடகமாக்கிட முடியும். திட,, திரவ , வாயு பொருள்களின் பண்புகளை நாடகம் மூலம் விளக்கி உள்ளேன். பாடத்தை நாடகமாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சியுடன் முயற்சியும் இருக்க வேண்டும்.
நடிப்பு பயிற்சி , உடல் மொழி பயிற்சி, வசன ஒலி மேம்பாட்டிற்கான பயிற்சி அங்க அசைவுகளுக்கான பயிற்சி போன்ற நாடக கலைக்கு அவசியமான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆகவே, ஆசிரியர்கள் தங்களை வளர்ந்துக் கொள்ளவும், பின் அதை மாணவர்களுக்குப் போதிக்கவும் நாடக கலையை பயில வேண்டும்.
CCERT மூலம் ஆசிரியர்களுக்கு பொம்மலாட்ட கலை சார்ந்த பயிற்சி 30 நாட்களில் வழங்குவதுபோல், NSD ( National School Of Drama) மூலம் ஆசிரியர்களுக்கு நாடக கலை குறித்த பயிற்சி வழங்க தமிழக கல்விக் கொள்கை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
நீங்கள் நாடகம் சார்ந்த பயிற்சி பெற்றவரா? ஆம். கல்லூரி காலத்தில் பேராசியர் மு.ரா, , பேரசிரியர் பிரபாகரன் மற்றும் பேராசிரியர் சுந்தர்காளி ஆகியோரிடமும், ஆசிரியரான பின் நடிகர் சண்முகராஜா அவர்களிடமும், பின் செசிக்கு வருகை தரும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த நாடக குழுவினரிடமும் என பலரிடம் தொடர்ந்து நாடகப்பயிற்சி பெற்று வருகின்றேன்.
அறிவியல் கருத்தை நாடகமாக்குவது எப்படி?
நாடகமாக்குதல் என்பது ஒவ்வொரு ஆசிரியரின் அனுபவம், கற்பனை , பாடக் கருத்தினை வயதுகேற்ப வெளிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
உதாரணம் தரமுடியுமா?
அனைத்து மாணவர்களையும் வட்டமாக அமரச் செய்யவும். நாடகத்தில் பங்குப் பெறறுள்ள மாணவர்களில் நான்கு நபர்கள் கூட்டத்தில் இருந்து திசைக்கு ஒருவராக “கட கட மட மட ” எனக் கூறிக்கொண்டு வட்டத்தின் நடுவில் வட்டவடிவில் கைகளை இணைத்து தலையை குனிந்தபடி அமர்வார்கள் பின் கூட்டத்தில் இருந்து ஒருவர் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்து நடுவில் உள்ளர்கள் மீது இடித்துக் கொண்டு தடுமாறி விழுவார்.
அதன்பின், அவர் சத்தமாக ” இது என்னவாக இருக்கும்? நேற்று இந்த இடத்தில் இதை பார்க்கவில்லை”. எனக் கூட்டத்தில் உள்ளவர்களை பார்த்து கூறுவர். ஒருமுறை சுற்றி வந்து , “வட்ட வடிவமாக இருக்கு.
ஆனா என்னன்னு தெரியலை.” என்பார். பின்பு கொஞ்சம் நகர்வார். திரும்பி வந்து நான்கு நபர்களையும் அழுத்துவதுபோல் நடிப்பார். ” அமுத்தினால் ஒண்ணுமாகலை. நம்ம கைதான் வலிக்குது. நகராம, இடத்தை அடைச்சுகிட்டு அப்படியே இருக்கே! ” என கூறிக் கொண்டு மறுபடியும் சுற்றிவருவார்.
அதன்பின் கூட்டத்தை பார்த்து உங்களுக்கு தெரியுமா? என கேட்பார். பின் யோசித்தபடி எதிர்திசையில் அமர்ந்துவிடுவார். அவர் அமர்ந்தபின் வட்டத்தின் நடுவில் உள்ள நான்கு நபர்களும் ஒன்றாக எழுந்து , ” நாங்கதான் திடப்பொருள்.எங்களுக்கு குறிப்பிட்ட உருவம் உண்டு.
எங்களுக்கு பாயும் தன்மை இல்லை. அழுத்தத்தினால் எந்த மாற்றமும் அடைய மாட்டம். இடத்தை அடைத்துக் கொள்வோம்.’ எனக் கூறுவர்.
இதேப்போல் திரவ, வாயு பண்புகளுக்கும் காட்சிகள் உண்டு.
நாடகம் வழிக் கல்வி குழுவாக மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்கிறது. பாகுபாடற்ற அனைவரும் இணைந்து ஜனநாயகமுறையில் செயல்பட நம்பிக்கை அளிக்கிறது. பாடங்களை எளிதாக போதிக்க உதவுகிறது.
குழந்தைகளின் குரல் வகுப்பறையில் வெளிப்படுத்த உதவுகிறது. குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்த்தெடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு கற்றல் மகிழ்ச்சியானதாக அமைகிறது.
கல்வி உயர… தொடர்ந்து பேசுவோம்…
Leave a Reply