முதியவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பலருக்கும் கடந்த 18 ஆண்டுகளாக ஒருவர் விடாப்பிடியாக ஆதரவளிக்க போராடுவது சற்றே நம் கவனத்தை ஈர்க்கத்தான் செய்கிறது!

Share Button
– திருப்பூர் தெய்வராஜ் நேர்காணல்!
“தன்னலமற்ற ” என்ற வார்த்தையின் அர்த்தம்  அறியாத நிலை  இருக்கும் இன்றைய சூழலில், ஆதரவற்ற சுயமாக செயல்பட இயலாத முதியவருக்கும் மனநலம்  பாதிக்கப்பட்ட பலருக்கும்  கடந்த 18 ஆண்டுகளாக ஒருவர் விடாப்பிடியாக அவர்களுக்கு  ஆதரவளிக்க போராடுவது சற்றே நம் கவனத்தை ஈர்க்கத்தான் செய்கிறது . கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி கிராமத்தில் பிறந்து கடந்த 20 வருடங்களாக திருப்பூர் மாவட்டத்தில் குடி பெயர்ந்த தெய்வராஜ்  அவர்களின்  இந்த முயற்சியை பற்றி அவரிடம் கேட்ட பொழுது :
மனநலம் பாதிக்கப்பட்ட பலருக்கும், ஆதரவற்ற முதியவருக்கும்  ஊன்றுகோலாக இருக்கீங்க. இந்தப் பயணம் எங்கே எப்படி  தொடங்கியது?
பள்ளி  பருவம் முதலே , மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் தவித்துக்கொண்டிருந்த பலரின் அவல நிலையை கண்டு நான் வருந்தி இருக்கிறேன். பின்னாளில் படித்து முடித்தவுடன் ஒரு சலூன் கடைல வேலை வேலை பார்த்தேன்.  உதவின்னு கேட்டா யாரும் உதவிக்கு வர மாட்டாங்க. அதனால நம்ம கைல கொஞ்சம் காசு இருந்த யாரையும் நம்ப வேண்டிய நிலை இருக்காதுன்னு வேலைக்கு சேர்ந்தேன்.
கிடைத்த பணத்தில் 75% இது போன்ற பணிகளுக்கும் 25%  குடும்பத்திற்கும்னு பங்கு போட்டேன். 2000 ஆம் ஆண்டு , சொந்தமாக ஒரு சலூன் கடையை நானே தொடங்கினேன். தெய்வா அறக்கட்டளை பிறந்ததும் அதே வருஷம் தான். இந்த 18 வருஷத்துல 35000 ஆதரவற்றோரை,  திருத்தம் செய்து, குளிக்க வைத்து, உண்ண உணவு உடுக்க உடை,  இடம் அளித்து மறுவாழ்வு அளித்திருக்கிறோம். இது அனைத்தும் 30 பேர் கொண்ட எங்களின் குழு தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் செய்து வருகிறார்கள் .
அறக்கட்டலைனு சொல்லும் போதே பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளும் இருக்க நிறைய வாய்ப்புகள்  இருக்கிறதா? இது போன்ற முதலீடுகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நாங்கள் இதை நடத்தி வருகிறோம். சுய வருமானத்தில் எங்களால் முடிந்த உதவிகளை செய்ய மேற்கொள்கிறோம். இந்த மாதிரியான சூழல்ல, அரசு அல்லது வெளிநாட்டு முதலீடுகள் கண்டிப்பா இந்தப் பணியை மேம்படுத்தும்.
உங்களுடைய இந்த முயற்சி எந்த அளவுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க ?
 நிறைய அமைப்புகள்  நோயும் இல்லாத, தன் வேலைகளை தானே பார்த்து கொள்ளும் முதியவர்களை, ஆதரவற்றவர்களை  மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நோயின்  கொடுமையால் தவிக்கும், மனநலம் குன்றி தெருக்களில் திரியும் அவலத்தை சந்திக்கும் மனிதர்களுக்கு உதவி செய்ய அவ்வமைப்புகள் முன் வருவதில்லை. அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நிரந்தரமாக தங்கி உண்ண உணவும், மருத்துவ வசதிகளும் உடைய ஒரு இடம் அமைத்து தருவதே எங்களுடைய நோக்கம்.
இது போன்ற அமைப்புகளை உருவாக்கி, இம்மாதிரியான மனிதர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது அரசின் வேலை என்றாலும், தனி மனிதராக போராடுறீங்க. இதற்கு அரசு உங்களுக்கு உதவி செய்கிறதா?
2006 ஆம் ஆண்டு தான் முதலில் பலருக்கும் இம்மாதிரியான மனிதர்களால்  சாலைகளில் இடைஞ்சல் வருதுன்னு,  ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அரசு காப்பகம் வீதம், அவர்களை பராமரிக்க திட்டம் ஒன்று வகுத்தது. ஆனால் அதை கடைப்பிடித்து தொடர்ச்சியா செய்ய முடியலைன்னு அரசாங்கமே சொல்லுது. அது போக 2000 ஆண்டு அரசாங்கத்தோட விதிமுறைகள்ல இம்மாதிரியான ஆட்களுக்காக எந்த ஒரு  இயற்றப்படவில்லை.
மேலும் அவர்களின் பாதுகாப்புக்கும், அவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் அரங்கம் பொறுப்பில்லை என்று கையை விரிக்கத்தான் செய்தது. ஆனால் எங்கள் அமைப்பு அவர்களை பிறந்த குழந்தையாகத் தான் பார்க்கிறது. சட்டப்படி அனைத்து ஆவணங்களையும் பெற்று அவர்களை சேர்க்க வேண்டிய இடத்தில சேர்க்க நாங்க போது, எதிர்பார்ப்பதில் இருந்து, எதுக்காக நீங்க இதெல்லாம் பண்றீங்க, உங்களுக்கு யார் இந்த உரிமையை குடுதான்னு கேக்கற அரசாங்கம், எங்களுக்கு தக்க ஆவணங்களை தந்து அங்கீகரிக்க முனைப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க இடம் கேட்டு  மூன்று முறை மனு கொடுக்கப்பட்டும், இதை அரசு பார்த்து கொள்ளும், உங்களால் முடியாத  பட்சத்தில் இதை ஏன்  செய்ரீங்கனு எங்களோட முயற்சியையும் உதாசீனப்படுத்தியது.
அரசாங்கத்தின்  எந்த துறைக்கு கீழ  பொறுப்பு  ஒப்படைக்க பட்டு இருக்கு ?
மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் அதிகாரிகளின் பரிந்துரை படி நடக்க வேண்டியவையே அனைத்தும்.
இந்த சேவையில் உங்களுடன் துணை நிற்பவர்கள் யார்? இவர்களுக்கு மருத்துவ செலவுகளை,  எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் ?
இது  போன்ற மனிதர்கள் எதிர்பார்ப்பது அன்பும் அரவணைப்பும் தவிர மருந்தோ மாத்திரையோ இல்லை. மன உளைச்சலால்  தான் இந்நிலைக்கு ஆளாகிறார்கள் . அவர்களை  அரவணைத்து, அன்பு காட்டி  புது வாழ்வு அளிக்கணும். அதை தான் பலரும் செய்ய முன் வருவதே இல்லை.
உங்கள் குடும்ப நபர்களை  பற்றி …???
என்னையும் சேர்த்து எங்க வீட்ல நாங்க அண்ணன் தம்பி நாலு பேரு. எனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண்கள், ஒரு பையன். என் குடும்பத்தில் இருக்கும் அனைவரும்  இத்தொண்டில் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். அணைத்து பணிகளும் சகோதரர்களாகிய நாங்கள் இணைந்து புரிகிறோம்.
இதற்காக உதவும் நண்பர்கள் எவரேனும்?
என் குடும்ப உறுப்பினர்கள் போக இவ்வமைப்பு 30 பேர் கொண்ட குழு.
காவல் துறை உதவி அளிக்கிறதா ?
சொல்லி கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை. பல முறை நாங்கள் செய்யும் இந்த சேவையை பல மணி நேரம் நின்று காவல் துறைக்கு விளக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.
ந. தெய்வராஜ், சமூக ஆர்வலர்.
திருப்பூர்.
Cell : 9442372611 / 9489404911
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *