பாதுகாப்பான கல்வி : பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் மிகவும் கவனமாக கையாள வேண்டும்

Share Button

கல்விச் சாலைகள் அனைத்தும் கள்ளங்கபடமற்ற பிள்ளைகளின் காலடித்தடம் படாமல் பாலைவனமாக காட்சியளித்த நிலை மாறி வறண்ட பூமியில் வானம் பொய்த்தது போல கொரோனா அரக்கனின் பிடியில் சிக்கி, கொரோனாவுடன் வாழப் பழகி, இப்பொழுது கொரோனாவை விரட்டும் நிலைக்கு இறைவன் அருளாலும், விஞ்ஞானத்தின் துணையாலும் முன்னேறியுள்ளோம்.

இந்திய அரசாங்கமும், தமிழக அரசும் இந்த சோதனையான காலகட்டத்தை சந்தித்து, அதன் பின் அதனை சமாளித்து, இப்பொழுது சாதிக்கும் நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

நாடெங்கிலும் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. முன் களப்பணியாளர்கள் தொடங்கி ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசிகள் பாதுகாப்பை வழங்கப் போகிறது. இந்தச் சூழ்நிலையில் ஏறத்தாழ 10 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப் போகிறது. பிள்ளைகளின் பாதங்கள் பள்ளியில் பட்டவுடன் பூக்கள் மலர தொடங்கப் போகிறது, ஆசிரியர்கள் அனைவரது நெஞ்சங்களிலும் பட்டாம்பூச்சிகள் பறக்க போகிறது, ஆன்லைன் கல்வியில் கற்ற பாடங்களை தெளிவாக வகுப்பறையில் நேரடியாக மாணவர்கள் கற்றுக் கொள்ளப் போகிறார்கள். பள்ளி என்கின்ற தாய் தனது குழந்தைகளை உச்சிமுகர்ந்து தழுவக் காத்திருக்கிறாள்.

இத்தனை மகிழ்ச்சியான விஷயங்களுக்கு நடுவிலும் நாம் உற்றுநோக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்ட பின்பு பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு பள்ளிகளின் பாதுகாப்பு அம்சத்தை வலியுறுத்தி பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையை பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் மிகவும் கவனமாக கையாள வேண்டும். எந்த நிலையிலும் அலட்சியமான மனநிலையையோ, பாதுகாப்பற்ற போக்கினையோ கடைபிடிக்கக் கூடாது.

பெற்றோர்கள் :

பிள்ளைகளின் கல்விக்கு ஏற்பட்ட இடையூறால் கலங்கி நின்ற பெற்றோர்களுக்கு பள்ளிகள் திறப்பு என்பது ஆறுதலான விஷயம் தான். ஆனால் நமது பிள்ளைகள் பாதுகாப்பாக கல்வி பயில்வதற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்கவேண்டும்.

குழந்தைகளுக்கு சுத்தமான முகக்கவசம் வாங்கிக் கொடுத்து அதை பள்ளிக்குச் செல்லும் பொழுது அணியச் சொல்லி, வீட்டிற்கு வந்த பின்பு கழட்ட சொல்லவும்.அவர்களுக்கு சிறிய சாம்பிள் சோப் மற்றும் சிறிய சானிடைசர் வாங்கிக்கொடுத்து அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் அறிவுறுத்துங்கள்.

அவர்கள் பயன்பாட்டிற்காக கைக்குட்டையும் கொடுத்துவிடுங்கள். பள்ளிக்குச் செல்லும் பொழுது வீட்டில் இருந்து சுத்தமான குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வலியுறுத்துங்கள். வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்லுங்கள்.இடம் விட்டு இடம் மாறி அமரக் கூடாது என்றும் தொட்டுப் பேசுவது, கை குலுக்குவது போன்றவற்றை தவிர்க்குமாறு எடுத்துச் சொல்லுங்கள்.

கழிப்பறைக்குச் சென்று வந்த பின்பு கைகளை சோப்பு கொண்டு கழுவவும், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்குமாறும் அறிவுருத்துங்கள்.உடல்நலக்குறைவு ஏதேனும் ஏற்பட்டால் வகுப்பு ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து அனுமதி பெறச் சொல்லுங்கள்.
பள்ளிக்கு நேரில் சென்று மற்றவர்களுக்கும் நோய்களை பரப்ப வேண்டாம்.ஒருவேளை பள்ளியில் இருக்கும் பொழுது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்து விட்டு வீட்டிற்கு வந்து சிகிச்சை மேற்கொள்ள சொல்லவும்.

இணை நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் அதற்கான சிகிச்சைகளை முறையோடு மேற்கொள்ளவும். குறிப்பிட்ட காலம் வரை குழந்தைகளை பள்ளிக்கு நடந்தோ, சைக்கிளிலோ செல்ல சொல்லுங்கள். தூரமாக இருந்தால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வாருங்கள். பேருந்துகளில் அனுப்பி பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்காதீர்கள்.
உங்கள் ஒத்துழைப்பால் தான் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

ஆசிரியர்கள் :

குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் ஆசிரியர்களே. குழந்தைகளின் வாழ்வும், வளர்ச்சியும் ஆசிரியர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கிக் கிடந்த சோதனையான காலகட்டத்திலும், தன்னுடைய உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சமூக பணியாற்றிய எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அதை தவிர தன்னுடைய மாணவன் கல்வி கற்க வேண்டும் என்ற அன்பினாலும், அக்கறையாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்திய ஆசிரியர்களும் உண்டு. மாணவர்களின் வீடு தேடி பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களும் உண்டு. ஆசிரியப்பணி அறப்பணி என்பதை அர்ப்பணிப்போடு வெளிக்காட்டிய ஆசிரியர்கள் நமது ஆசிரியர்களே…

பள்ளிகள் திறப்பதை பெரிதும் வரவேற்பது ஆசிரியர்களே. ஆனால் வழக்கமான வருடங்களிலிருந்து இந்த வருடத்தை சற்று மாறுபட்ட வருடமாக ஆசிரியர்கள் கையாளவேண்டும். மாணவனின் மனநிலைக்கும், உடல் நிலைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து கல்வி கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிகள் தொடங்கிய ஒரு சில நாட்களுக்கு மாணவர்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டும்.

பள்ளி திறந்த நாளில் இருந்து அதிகப்படியான பாடச்சுமைகளை மாணவர்கள் மீது சுமத்தக் கூடாது. இந்தப் 10 மாத இடைவெளிக்குப் பின்பு அவர்களிடமிருந்து கற்றல் வெளிப்பாடுகளை பெறுவது கடினம். எனவே படிப்படியாக பாடங்களை நடத்தி படிக்க வைக்க வேண்டும். குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டதால் , முன்னுரிமை அளிக்கக் கூடிய பகுதிகளை முதலில் நடத்திவிட்டு பிற பகுதிகளை பின்பு நடத்த வேண்டும். மாணவர்களுக்கு சமூக இடைவெளியின் அவசியம், முகக்கவசத்தின் முக்கியத்துவம், கை கழுவுவதின் நன்மைகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.
இயல்பு நிலை திரும்பும் வரையில் மாணவர்கள் மீது முழு கண்காணிப்புடன் இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக அரசாங்கம் வழங்குகின்ற வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகளை தங்களது மேற்பார்வையிலேயே மாணவர்களை சாப்பிடச் சொல்ல வேண்டும்.

மருத்துவ அலுவலர்களின் தொலைபேசி எண்களை தங்கள் வசம் எப்பொழுதுமே வைத்திருக்கவேண்டும். உடல்நிலை சரியில்லாத மாணவர்களை உடனடியாக பெற்றோர்களை வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெறச் செய்யவும். வகுப்பில் உள்ள மாணவர்களை குழுக்களாக பிரிப்பதால் ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் நினைத்ததில்லை.
ஆசிரியர்களும் முழுமையான சமூக இடைவெளியை கடைபிடித்து உடல் நலனை பேணி காக்க வேண்டும்.

மாணவர்கள் :

இறுதியாக மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அரசாங்கம் ,பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இவர்கள் அனைவரும் தங்களது கடமையை சரிவரச் செய்தாலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது மாணவர்களே…

எவ்வளவோ இன்னல்களுக்கு இடையில் மாணவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்திற்காக பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவர்கள் மிகவும் கவனமாக நடந்து கொண்டு ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்கின்ற வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் கல்வி பயில வேண்டும்.
மேலும் கல்வி பயில்கின்ற மாணவர்களது வீட்டிலுள்ள பெற்றோர்களும் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களும் 40 வயதை கடந்த நிலையில் தான் இருப்பார்கள். அதிலும் பல நபர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் இருப்பார்கள்.

மாணவர்களின் கவனக்குறைவால் நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு அறிகுறிகளற்ற பாதிப்புகள் ஏற்படும் பொழுது அவர்களை சார்ந்த பெற்றோர்களுக்கும், வீட்டில் உள்ள முதியோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நோய் தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளது.

அதிலும் அவர்கள் இணை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். எனவே மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், தங்களது பொறுப்புகளை உணர்ந்து தாங்களும் பாதுகாப்பாக கல்விகற்று ,தங்களது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பாதுகாப்பது ஒவ்வொரு மாணவனின் கடமையாகும். அதுமட்டுமல்ல இந்த ஆண்டில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு சாதனை புரிய வாய்ப்புகள் அதிகம்.

போட்டித் தேர்வுகளில் வெல்வதற்கும், உயர் கல்வி கனவுகளை நனவாக்குவதற்கும் இதுவே சரியான தருணம். எனவே பாதுகாப்பாக கல்விகற்று, சாதனைகளை சாத்தியமாக்குவோம்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.