“நம்பிக்கை ஒரு வஞ்சகன்” : ஒரு கதை சொல்லட்டுமா? : Episode-6
நண்பர் ஒருவர் அவரின் மனச் சங்கடத்திற்கு தீர்வு வேண்டி ஒருமுறை என்னிடம் வந்தார். அவரின் அலுவலகத்தில் அவருடன் வேலை செய்யும் ஒருவரிடம் இவர் நெருக்கமாகப் பழகி இருக்கிறார். இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருவரும் அலுவலகம் தொடர்பாக, அங்குள்ள அதிகாரிகள் தொடர்பாக, பணியின் சிக்கல்கள் தொடர்பாக ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துகளைப் பேசிவந்துள்ளனர்.
ஒருநாள் நண்பரின் மேல் அதிகாரி இவரை அழைத்து “என்னைப்பற்றி அவதூறாக பேசி இருக்கிறாய். உன்னை எப்படி பழி வாங்குகிறேன் பார்” என்று திட்டி, மிரட்டி இருக்கிறார். அந்த நிகழ்ச்சி இவரின் மனதில் பல சங்கடங்களை உருவாக்கி இருக்கிறது.
தான் யதார்த்தமாக பேசியது மேலதிகாரியிடம் போய் விட்டதே என்றும், தன்னை இவர் எப்படியெல்லாம் பழி வாங்கப் போகிறாரோ என்றும் இறுதியாக நண்பரின் மனதில் ஆழமாக பதிந்த விஷயம் என்னவென்றால் “என் நண்பன் என்றுதானே அவனிடம் இயல்பாகப் பேசினேன், அவனோ நாங்கள் தனிப்பட்ட முறையில் பேசினதையெல்லாம் அதிகாரியிடம் நான் மட்டுமே பேசினதுபோல சொல்லி எனக்கு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டானே” என்று மிகவும் மன சஞ்சலத்திற்கு ஆளாகி இருந்தார்.
இந்த நம்பிக்கை பற்றி ஆராய்வோம். உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை இவன்/இவள் கஞ்சன், நல்லவர், ஒழுக்கமானவர், நடத்தை சரியில்லாதவர், கோழை, புத்திசாலி, தரம்கெட்டவர், பிழைக்கத் தெரிந்தவர், வாயில்லாதவர் என்று பலவிதமானக் கருத்துகளையும், பட்டங்களையும் சம்பந்தப்பட்ட மனிதர்கள் மேல் வைத்துக்கொள்கிறீர்கள். இந்தக் கருத்துகளே நாளடைவில் உங்களின் நம்பிக்கைகளாக மாறி விடுகின்றன. நீங்கள் ஒருவர்மேல் வைத்துக் கொள்ளும் நம்பிக்கைக்கும் சம்பந்தப்பட்ட மனிதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதனை நீங்கள் புரிந்துகொண்டே ஆகவேண்டும்.
நீங்களாகவே “அவர் இப்படியெல்லாம் நடந்துகொள்வார் அல்லது நடந்து கொள்ளமாட்டார்” என்று ஒரு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மாறாக சம்பந்தப்பட்ட மனிதர் நடந்துகொள்ளும்போது உங்களின் நம்பிக்கை சிதைகிறது. இதனையே
நீங்கள் நம்பிக்கைத் துரோகம் என்கிறீர்கள். ஒருவர் தற்செயலான கோபத்திலோ, பழிவாங்கும் உணர்சியிலோ, ஆணவத்திலோ ஒரு கொலையைச் செய்துவிடுகிறார்.
அதற்கானத் தண்டனையையும் பெறுகிறார். தண்டனைக் காலம் முடிந்து மீண்டும் சமூக வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும்போது அவர்மேல் உங்களின் பார்வை எப்படி இருக்கும்? ஒரு கொலைகாரனைப் பார்ப்பதுபோலத்தானே. இங்குதான் நம் புரிதல் வேலை செய்யவேண்டும். அம்மனிதர் திருந்துவதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது அப்படியே அந்த ஆணவத்திலேயே மேலும் பல கொலைகள் செய்யும் வாய்ப்பு உள்ளது அல்லது தன் வாழ்வு இப்படி ஆகிவிட்டதே என்று தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது அல்லது வேறு ஏதேனும் பல வாய்ப்புகள் உள்ளதா இல்லையா? பல வாய்ப்புகள் உள்ள ஒருவரின் மனநிலையில் அந்த மனிதர் நீங்கள் உருவாக்கியுள்ள கருத்து நம்பிக்கைக்கு ஏற்றவாறுதான் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்? “சக மனிதர் மேல் நம்பிக்கையே இல்லாமல் எப்படி வாழ்வது? நம்பிக்கைதானே எல்லாம்” என்று உங்கள் மனம் கேள்வி கேட்கும்.
“என் முதலாளி என்னைத் திட்டமாட்டார்” என்று நம்புகிறீர்கள். அவர் திட்டும் சூழ்நிலை வரும்போது நீங்கள் உடைந்துபோகிறீர்கள். “என் நண்பன் நான் எது கேட்டாலும் செய்வான்” என்று நம்புகிறீர்கள். உங்களின் பணத்தேவைக்கு உங்கள் நண்பனால் உதவ முடியாதபோது நீங்கள் வெறுப்படைகிறீர்கள். “தன் காதலி/காதலன் தனக்குத் தெரியாமல் எதுவும் செய்ய மாட்டாள்/ன் என்று நம்புகிறீர்கள். அவ்வாறு ஏதேனும் சிறிய விஷயம் நடக்கிறபோது கொந்தளித்துப் போகிறீர்கள். தன்னுடன் வேலை செய்பவர்கள் தன்னைப்பற்றி புறம் பேச மாட்டார்கள் என்று நம்புகிறீர்கள்.
வேறு ஒரு மனிதர் மூலமாக ஏதேனும் கேள்விப்படும்போது மன உளைச்சலின் உச்சத்திற்குச் செல்கிறீர்கள். நம்பிக்கை என்று ஒரு கருத்து விஷயம் வரும்போது அதன் கூடவே நம்பிக்கையின்மை / துரோகம் எனும் கருத்து விஷயமும் கூடவே வரும். அதனைத் தவிர்க்கவே இயலாது. இங்கு சக மனிதர் மேல் நம்பிக்கை வைக்காதீர்கள் என்று சொல்வதன் அர்த்தம் இதுதான். உடன் இருக்கும் மனிதரைப் புரிந்துகொள்கிறேன் என்று சொல்லும்போது மட்டுமே நம்பிக்கை எனும் விஷயம் வருகிறது.
குறிப்பிட்ட மனிதரைப் புரிந்துகொள்ளும் முயற்சியை விட்டுவிட்டு மனித இயல்பையே (சூழ்நிலைக்கு ஏற்றவாறே மனிதன் நடந்துகொள்கிறான். அதுவே இயல்பு) புரிந்துகொள்ளும் முயற்சி வரும்போது உங்களுக்கு யார்மேலும் நம்பிக்கையும் இருக்காது, சந்தேகப்படும் தன்மையும் இருக்காது. நடுநிலையில்
இருப்பீர்கள். அப்பொழுது சம்பந்தப்பட்டவர் உங்களிடம் எப்படி நடந்துகொண்டாலும் உங்களை பாதிக்காது.
இந்த நம்பிக்கை மனிதர்கள்மேல் மட்டுமல்ல… கடவுள், சூழ்நிலை போன்ற அனைத்திற்கும் பொருந்தும்.
ஏனெனில் நீங்கள் வைத்துக்கொள்ளும் நம்பிக்கை என்பது குறிப்பிட்ட மனிதரை, கடவுளை, சூழ்நிலையை உங்களின் வரைமுறைக்குள் வைத்துக்கொள்ளும் நடைமுறைக்கு ஒவ்வாத முயற்சியாகும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது போன்று தோன்றும்…ஆனால் இதுவே உண்மை. உண்மை உணர வாழ்த்துக்கள்.
கதை தொடரும்…
………………………………………………………………………………………………………………………………………………….
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Excellent sir
Deep, truthful and practicable.