பிறப்போம் : “இறந்தவர்களை இறந்தவர்களிடம் விடுங்கள், நீ உயிருள்ளவனாய் இருந்தால் என்னுடன் வா” – ஊக்கமது கைவிடேல் : Episode-6
“இறந்தவர்களை இறந்தவர்களிடம் விடுங்கள், நீ உயிருள்ளவனாய் இருந்தால் என்னுடன் வா” என்கிற வாக்கியத்தைக் கேட்டதுண்டா? இதைப் புரிந்துகொள்ள இங்கு இறந்தவர்கள் யார், உயிருடன் இருப்பவர்கள் யார் என்கிற வினாவுக்கு விடை தேவை. சற்று விரிவாக்கப் பார்ப்போம்.
இவ்வுலக அதிசியங்களில் மிகச் சிறந்தது எது? எதுவாக இருக்கமுடியும்? அறிவுலகத்தில், சிந்திக்கத் தயாராக இருப்பவர்களே உயிருடன் இருப்பவர்களாக அறியப்படுவர், சிந்திக்காத சிந்தை இறந்ததுக்குச் சமம். சிந்திப்பு என்பது தன்னுணர்தலே அன்றி வேறில்லை, தன்னை உணர்தலைத் தவிர இவ்வுலகத்தில் மிகப்பெரிய அதிசயம் வேறொன்றும் இருக்கமுடியாது.
இந்தத் தன்னுணர்தல் எதற்குத் தேவை? எது இதை எடுத்துக்கொள்ளும்? என் உடம்பா? நிச்சயம் இல்லை, அப்படியெனில் வேறேது? எங்கு இந்தச் சிந்தனை கொள்ளப்படவேண்டும்? ஊக்கம் என்பது கடைச்சரக்கல்ல வாங்குவதற்கு, தன்உணர்தல் உள்ளிருந்தேதான் வெளிப்படவேண்டும்.
உள்ளிருந்து சிந்திக்கும் மனதால் இது அறியப்பட வேண்டும். அப்பப்பா… .எவ்வளவு கேள்விகள்…. தேவையா?… அவசியம் யாது?… ஏனெனில்… விடைகள் தெரியத் தெரிய, வாழ்கை விசாலமாகிறது. இதைத் தொலைத்தால் ஊக்கம் எப்படிப் பெறுவது? ஊக்கம் பெறுவதில் உள்ள முதல்நிலை, தகுதியைப்பெறுதல். எவ்வாறு பெற்றுக்கொள்வது?….
ஒரு ஊரில், ஒரு கல்விமான் இருந்தான். அனைவரும் அவனிடத்தில் கருத்து கேட்பதால், சற்று கர்வம் கொண்டான். தனக்கே எல்லாம் தெரியும் என்றும், தன்னால் மட்டுமே அனைத்திற்கும் தீர்வு கொடுக்க முடியும் என்ற நினைவில் தன் அறியாமையை அறியாமல் இருந்தான். அந்த ஊருக்கு ஒருமுறை ஒரு முனிவர் வருகிறார்.
அவரின் முகப்பொலிவும், தெளிவானப் பார்வையும், சிந்தனையும் அனைவரையும் திகைக்க வைக்கிறது. அவரின் இருப்பு அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவரைப் புகழ்கிறார்கள். இந்தப் புகழ்ச்சி கல்விமானுக்கு சற்று வெறுப்பைத் தந்தது. தன்னைவிட அவர் எந்தவிதத்தில் சிறந்தவர், ஒரு முனிவருக்கு என்ன உலக அறிவு இருக்கும், ஏன் இந்த மக்கள் இவரைப் பற்றி இப்படிப் புகழ்கிறார்கள், என்னைவிடக் கற்றுச்சிறந்தவரா, சென்று பார்க்கலாம் என அம்முனிவரைத் தேடிச் செல்கிறான்.
அந்த முனிவர் ஒரு தேநீர்க்கடையில் அமர்திருப்பதைக் கண்ட அவன், அவரிடம் சென்று பேச்சுக் கொடுக்கிறான். தன் கல்வியறிவைப் படம்பிடித்துக் காட்டுகிறான். தான் அறிவில் சிறந்தவன் என்றும், அவரிடம் இருந்து கற்பதற்கு ஒன்றும் இல்லை என்கிறமுறையிலும் அம்முனிவரைவிட தாமே கொண்டாடத்தக்கவன் என பேசிக்கொண்டு, அம்முனிவர் தனக்கு ஏதேனும் கற்றுக் கொடுக்கமுடியுமா எனக்கேட்கிறான்.
அம்முனிவரோ, இந்த கல்விமானை ஆசுவாசப்படுத்தி, ஒரு தேனீர் வரவழைத்து, ஒரு கண்ணாடிக்குவளையை தலைகீழாகக் கவிழ்த்து அதன்மேல் அந்தத் தேநீரை ஊற்றுகிறார், தேனீர் முழுவதும் வெளிப்புறம் சிந்தி வீணாகுகிறது. மீண்டும் ஒரு தேநீரை வரவழைத்து அதையே செய்கிறார்.
இந்த கல்விமான் அவரிடம், குவளையைத் திருப்பாமல், இப்படி வீணாக்குறீர்களே எனக் கேட்க, அம்முனிவரோ, “அதையேதான் நானும் சொல்கிறேன், நீ குவைளைப் போலல்லவா இருக்கிறாய், நான் என்ன கொடுத்தாலும் அது இந்தத் தேநீரைப் போல் வீணாகுமே தவிர, உனக்கு என்ன பயன் செய்யும், நீயும் உன்னை நேராக்கிக்கொள்” என்றார். தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற சிந்தனையே நம்மை உயிர்ப்புடன் வைக்கும். ஞானியர்களின் வார்த்தைகளை நாம் கேட்க்கும்பொழுதெல்லாம் புதிதாய்ப் பிறக்கிறோம்.
இன்னும்பிறப்போம்…
இன்னும் தொடரும்…
நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M
தன்முனைப்புப் பேச்சாளர் / மதச் சொற்பொழிவாளர் / தத்துவப் பேச்சாளர்
Excellent one, keep watching this space, looks awesome.