சீரழிவுக்குள்ளாக்கப்படும் தொடக்கக்கல்வித்துறை

Share Button

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுக் கோலோச்சிக் கிடந்த பள்ளிக்கல்வித்துறையினை நிர்வாகப் பரவலாக்கம் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி அன்றைய அரசால் தனித்துறையாக தனித்துவத்தோடு உருவாக்கப்பட்டதுதான் தொடக்கக்கல்வித் துறை.

எனினும் இத்துறையில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தொடங்கி இயக்குநர் முடிய உள்ள உயர்பதவிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இப்போது வரை இருந்து வருவது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். இதுமாதிரியான ஒரு முரண்பாடுகள் நிறைந்த நோக்கும் போக்கும் உலக அளவில் எந்தவொரு துறைக்கும் நிச்சயமாக வாய்த்திருக்காது.

தொடக்கக்கல்வியில் பணியாற்றும் உயர்தொடக்க நிலை பட்டதாரி தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு மற்றும் ஊதியம் வழங்கும் அதிகாரமற்ற வெறும் அலுவலர்களாகப் பதவி உயர்வு என்பது மறுக்கப்பட்டு
மாற்றுப்பணியில் மாநிலம் முழுவதும் பல மைல்கள் கடந்து பெரும் பணிச்சுமைகளுடன் பணிபுரிய பல்லாண்டுகள் அறிவுறுத்திய மனிதாபிமானமற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது.

உண்மையில் சொல்லவேண்டுமேயானால் பரந்து விரிந்து கிடக்கும் ஒன்றியம் முழுவதும் உள்ள பள்ளிகளைத் தம் சொந்த வாகனத்தின் மூலம் நெடுந்தூரம் பயணித்து ஆய்வு மேற்கொண்டு பணப்பலன் ஏதும் இல்லாமல் வெற்றுப் பதவியாகத்தான் வட்டாரக்கல்வி அலுவலர்கள் (முன்பு உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள்) பணியிடங்கள் இருந்து வருகின்றன என்பது மிகையாகாது.

இத்தகைய சூழலில் ஓரளவு தன்னிச்சையாக செயல்பட்டு வரும் தொடக்கக்கல்வித் துறையின் அண்மைக்காலச் செயல்பாடுகள் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பேரச்ச உணர்வுகளை விளைவித்து வருகின்றன.

சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிக்கப்படும் அவலம் நாடோறும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற, ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்துகள் விளைவிக்கின்ற, வெற்று அறிவிப்புகள் மூலமாக அறிந்து கொள்ள இயலும். தொடர்ச்சியாக ஆசிரியப் பெருமக்களை ஒருவித பதட்டத்தில் எப்போதும் வைத்திருக்க மேற்கொள்ளும் சூழ்ச்சிகளோ இவை என்று கருதுவதற்கு இடமுண்டு.

ஓர் அலுவலர் கூடுதலாக தம் துறைக்குத் தொடர்பில்லாத வேறொரு துறையினைத் தற்காலிகமாக நிர்வகிக்கும் பொறுப்பை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. இடைக்கால பணிமாற்றம் தான் அது.
ஆனாலும் அவ் இடைக்கால ஏற்பாடுகளுக்குச் செவிமடுக்க மறுத்து விடுவதும் புறம்தள்ளுவதும் இயல்பாக இருப்பது கண்கூடு. ஊருக்கு இளைத்தவர்கள் ஆசிரியர்கள் என்கிற புனைவிற்கேற்ப, முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் தகுதி மற்றும் திறமைகள் பற்றி கிஞ்சித்தும் கவலைக்கொள்ளாமல் முற்றிலும் பயிற்சி பெறாத கீழ் வகுப்புகளுக்கு பணியிட இறக்கம் செய்து தகுதியைத் தாழ்த்துவதென்பது சகித்துக் கொள்ள இயலாத காரியமாகும்.

இவர்கள் முறையே 10, 9 வகுப்புகள், 5,4 வகுப்புகள், மழலையர் வகுப்புகள் என பாடம் கற்பிக்க நிர்ப்பந்திக்கப்படுத்துவதென்பது அடிப்படை உரிமை மீறல் செயல்களாவன எனலாம். ஒரே வளாகத்தில் காணப்படும் 3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை அல்லது மேனிலைப் பள்ளிகளுடன் இணைத்தல் என்னும் செயல்முறைகள் காரணமாக இடைநிலை ஆசிரியர்களுள் மூத்தோர் தாம் பணிபுரியும் ஒட்டுமொத்த பணிக்காலத்தில் பெறும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு விடும்.

காட்டாக, அண்மையில் தொடக்கக்கல்வித் துறையில் இருந்து வந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
பணியிடங்களை ஒழித்து, அதற்கு மாற்றாக அப்பணியிடங்கள் அனைத்தையும் மாவட்டக் கல்வி அலுவலர் எனும் பணிமாற்றப் பணியிடங்களாகத் தோற்றுவிக்கும் பொருட்டு புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அங்கு அவர்கள் நிரப்பப்பட்டுப் பணிபுரியும் நல்வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் குறைநிவர்த்தி நடவடிக்கைகள் எள்ளளவும் தொடக்கக்கல்வித் துறையில் பல்லாண்டுகளாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கில்லை. இதுதான் உண்மை. அதேபோல், உயர்தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் ஒழிக்கப்பட்டு விடும்.

அப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்றும் அங்குள்ள தலைமை ஆசிரியர்கள் பணியிறக்கம் பெற்று அதே தரமுயர்த்தப்பட்ட பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிசெய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறுவதாவது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது போலுள்ளது. ஏனெனில், நடப்பில் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவியும் பட்டதாரி ஆசிரியர் பதவியும் அடிப்படையில் ஒன்றல்ல.

இருவருக்குமான தர ஊதியம் வேறுவேறு ஆகும். அப்படியிருக்கும் பட்சத்தில் நீதிக்குப் புறம்பாகப் பணியிறக்கம் என்பது ஏற்கத்தக்கதல்ல. அத்தகையோரின் கல்வி உள்ளிட்ட ஏனைய தகுதிகளைக் கணக்கில்கொண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாற்றம் செய்து நிலை உயர்த்துவதே சாலப் பொருத்தமாகும்.

மேலும், மழலையர் கல்வி பயிற்சி பெறாத 2382 இடைநிலை ஆசிரியைகளை சற்றும் பொருத்தம் அற்ற மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் கட்டாயம் பணிபுரிய ஆணையிடுவதாவது பல்வேறு நிர்வாகக் குளறுபடிகளுக்குக் காரணமாக அமையக்கூடும்.

ஏனெனில், அங்குப் பல்லாண்டுகளாக பல கோடிகளைச் செலவழித்து மழலையர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பொருட்டு பல்வேறு கட்ட பயிற்சிகள் பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையப் பணியாளர்கள் நாடு முழுவதும் சிறப்பாக வேலை செய்து வருகின்றனர். இத்தகு சூழலில் புதிதாக அரிதாரம் பூசிக்கொண்ட இளம் ஆசிரியைகள் மிகுந்த மன உளைச்சல் மற்றும் அலைச்சலுடன் பணிப் பங்கீட்டுப் பிரச்சினைகள் இன்றி
திறம்பட பணிசெய்வது எங்ஙனம்?

மேனிலைக் கல்வி இரண்டாம் ஆண்டு தேர்ச்சியுற்று அதன்பின் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்று, பிறகு அத்திப்பூத்தாற் போல் அறிவிக்கப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்த பின்னர் அனைத்து வகையான தேர்ச்சிகளுக்கும் தரப்புள்ளிகள் வழங்கப்பட்டு மத்திய அரசுக்கு இணையில்லாத ஊதியக் கட்டில் தள்ளப்பட்டு பணிநியமனம் செய்யப்படும் ஓர் இடைநிலை ஆசிரியையை அங்கன்வாடியில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் பணியாளர் மேற்கொண்டு வரும் பணியினைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதென்பது தகாத காரியமாகும்.

தமிழ்நாட்டில் இன்றளவும் மழலையர் பயிற்சி பெற்று பணிக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகம். அத்தகையோரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பறித்து ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கு மட்டும் கற்பித்தல் பயிற்சியை முறையே பெற்ற இடைநிலை ஆசிரியர்களை மேலும் தரம் தாழ்த்துவது எந்த வகையில் நியாயம்? இத்தகைய ஒப்புக்கொள்ள முடியாத அநீதி மிக்க கேலிக்கூத்தான நடைமுறைகள் கடைநிலையிலிருந்து உயர்ந்த பொறுப்பு வகிக்கும் ஏனைய துறை சார்ந்தவர்களுக்கு வழங்க முனைதல் என்பது சாத்தியப்படுமா என்பதையும் அறம் விழைவோரும் அதிகாரத்தில் இருப்போரும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

கிள்ளுக்கீரைகள் அல்லர் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்! இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு இளைய பாரதத்தை உருவாக்கும் நவயுக சிற்பிகள்! தனிமனித கண்ணியம் காக்கப்படுவதை அரசு உறுதிப்படுத்தி கொள்ளுதல் முழுமுதற் கடமையாகும். இது அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அதேவேளையில் தமக்குக் கீழ் செம்மைப் பணிபுரிந்து வருகின்ற தொடக்கக்கல்வி ஆசிரியர் இனத்திற்கு மட்டும் தொடர்ச்சியாகப் பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் கொடுத்து அவமதிப்பது என்பது நல்லறமாகா. பின்லாந்து உள்ளிட்ட அனைத்து வளர்ந்துள்ள பல்வேறு நாடுகளில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மதிப்பும் மரியாதையுடனும் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்த ஒன்று.

அதற்காக அவர்களைத் தொழ வேண்டும் என்று கூறவில்லை. மானத்துடன் நடத்த முயற்சிக்கவும் என்பதே எல்லோரின் வேண்டுகோள் ஆகும். மேலும், உலக அளவில் கல்வியில் பீடுநடை போட்டு வரும் தொடக்கக்கல்வித் துறையின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக முடக்கும் போக்கைக் கைவிட்டு, பள்ளிக்கல்வித் துறையின் ஏகோபித்த ஏகாதிபத்திய நடைமுறைக்கு முட்டுக்கட்டைப் போடுவது
அவசர அவசியமாகும்.

மாறாக, தொடக்கக்கல்வியில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கே என்பதை நல்லெண்ணத்துடன் அரசு கனிவுடன் பரிசீலனை செய்து உறுதிப்படுத்துதல் சாலச்சிறந்தது எனலாம். சீர்திருத்தம் என்கிற பெயரில் சீரழிக்கப்படுகிறதோ தொடக்கக்கல்வி என்ற ஐயப்பாடு எல்லோர் மத்தியிலும் இயல்பாக எழுவதை அரசு விரைவாகத் தடுத்து நிறுத்துவது காலத்தின் கட்டாயம்.

 

முனைவர் மணி. கணேசன்
4/11-2, ராஜீவ் காந்தி நகர்
மன்னார்குடி – 614001
திருவாரூர் மாவட்டம்.
7010303298.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *