மன உளைச்சல் என்பது என்ன? அதன் அடிப்படை காரணம் என்ன? ஒரு குடும்பத் தலைவனாக என் மன உளைச்சல் என் குடும்பத்தினரைப் பாதிக்கிறது
கேள்வி: மன உளைச்சல் என்பது என்ன? அதன் அடிப்படை காரணம் என்ன? ஒரு குடும்பத் தலைவனாக என் மன உளைச்சல் என் குடும்பத்தினரைப் பாதிக்கிறது.
- ஈ. ஹரிபாபு, பெற்றோர்
பதில்: உங்கள் மனம் என்பது நீங்கள் இதுவரை அனுபவித்த, பெற்ற எண்ணங்களின் மொத்தக் குவியல் ஆகும். அந்த குவியலில் ஏதேனும் ஒரு விஷயம் தொடர்பான எண்ணங்கள், காட்சிகள், உணர்வுகள் தொடர்ச்சியாக மனதினில் போக்குவரத்து செய்வதுதான் மன உளைச்சல், மன அழுத்தம் எனப்படுவதாகும்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
இந்தத் தொடர்ச்சியான எண்ணப் போக்குவரத்து உங்கள் அனுமதியுடனோ அல்லது உங்கள் அனுமதி இல்லாமலோ நடக்கும். இது அடிப்படையில் வேண்டும் என்ற எண்ணத்திற்கும் வேண்டாம் என்ற எண்ணத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான். எதை விரும்ப வேண்டும் எதை விரும்பத் தேவையில்லை என்பது தெரியாதது மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகும்.
மன உளைச்சல் அடிப்படையில் பயத்தின் காரணமாகவும் ஏற்படும். தன்னுடைய மரியாதை போய்விடுமோ என்ற பயம், தன்னை ஒருவர் காயப்படுத்திவிடுவாரோ என்ற பயம், தான் தொலைத்த பணத்தை எவ்வாறு திரும்ப சம்பாதிப்பது என்ற பயம், தன பிள்ளைகளின் வாழ்வு இப்படி ஆகிவிட்டதே, இதனை எவ்வாறு சரிசெய்வது என்ற பயம், தன வேலையை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்ற பயம் என்று இதனைப் போல் ஏற்படுவது இயல்புதான்.
மன உளைச்சல் எவ்வகையில் இருப்பினும் அதனைத் தவிர்ப்பது என்பது இயலாத காரியம். ஆனால் அதனை கூர்ந்து கவனிப்பதன் மூலம் அதன் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். எப்படி கூர்ந்து கவனிப்பது? பயமோ அல்லது வேறு விதத்தில் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும்போது அந்தக் குறிப்பிட்ட எண்ணம் பற்றி தீர அலசுங்கள். “இந்த பயத்தின் மூலமாக நான் எதையும் அணுகமுடியாது, இந்த பயம் அதிகரிக்க அதிகரிக்க அந்த குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி யோசிப்பதைவிட்டு நான் மிக அதிக தூரம் விலகிச் செல்கிறேன்.
இது எனக்கு பலன் தராது” என்பது போன்ற தொடர் அலசும்தன்மை உங்களை அந்தக் குறிப்பிட்ட உளைச்சலில் இருந்து மீண்டு வர உதவிபுரியும். ஆனால் இதற்கு நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டும். பலமுறை முயற்சிசெய்து உங்களுக்குள் அலசும் இந்த தன்மை வளர்ந்துவிட்டால் உங்களின் மனோபலம் அதிகரிப்பதை நீங்களே கண்கூடாகப் பார்க்கமுடியும். உங்களின் சொந்த மன உளைச்சலில் இருந்து நீங்கள் விடுபடும் நிலையில் உங்கள் மூலமான பாதிப்பு உங்கள் குடும்பத்தினருக்கு இருக்காது.
அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் மனதைப் பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும். மற்றபடி நீங்கள் எது செய்தாலும் பயன் தராது. புரிந்துகொள்ள முயற்சியுங்கள்…அதிலிருந்து விடுபடுவீர்கள். வாழ்த்துகள்.
கேள்வி – பதில் தொடரும்…
…………………………………………………………………………………………………………………………………………………
(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply