எங்கள் ஆசிரமம் அன்பின் சொர்க்கம் : ஆம் என் பெயர் கவிச்சந்ரா!

Share Button
எனது ஆசிரமம் : அழகான மொழிகள், வண்ண விழிகள், கவிதையாய் பிறந்தவள்,கருணை உள்ளம் கொண்டவள் என்று பொய்யான பாராட்டைக்கேட்டு விவரம் அறியா பருவத்தில் தந்தையின் மறைவின் கூட்டத்தை திருவிழா என்று சந்தோசமாய் கடந்து வந்த துரதிஷ்டவாளி நான் …
ஆம் என் பெயர் கவிச்சந்ரா…
எது எப்போது நிகழும் என்பதை யார் அறியக்கூடும் ,கண்ணிமைக்கும் நேரத்தில் அற்புதங்கள் புரியும் இறைவன் நாடகத்தில் சின்னதாய் ஒரு அரங்கேற்றம் ஆம் நடந்தேறியது எனது திருமணம், எனது குழந்தை, கண் விழிக்கையில் மனிதரை ஆட்டிப்படைக்கும் ஆணவம்,வன்மம்,யார் எப்படி, ஆராய்வதற்கு நேரமில்லாமல் அரங்கேற்றம் முடிந்தது…
ஆம் முடிந்தது என் வாழ்வில்  திருமணம் எனும் அரங்கேற்றம்…
மனிதர்களிடம் பேசி மனிதர்களோடு மகிழ்ச்சியாய் வாழ விரும்பினேன்,ஆனால் சிறு சிறு தவறுக்கெல்லாம் கொதித்து எரிமலையாய் வெடித்த எனது கோபம்  மனிதர்களுக்கும் எனக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது, பிளவு அதிகமாகும்போது ஒரு சிலரைத்தவிர வேறு யாருடனும் பேசுவதை தவிர்த்தேன்…
ஆம் என் வாழ்க்கை ஆதாரங்கள் தேடிய காலம்…
 பகட்டிற்காக பண்பாட்டை இழக்கிறான் மனிதன்  பணத்தாசையால் நல்ல உறவுகளை இழக்கிறான், ஜாதி வெறியில் கொலை செய்யவும் துணிந்து விட்டான், யாருக்காக இந்த ஓட்டம்,எதற்காக இந்த முறையற்ற செயல்பாடு, பிறப்பிற்கும், இறப்பிற்கும் நடுவே மனிதன் மனிதநேயத்தோடு வாழவில்லை மாறாக மனிதன் மனிதனையே துன்புறுத்தும் சீர்கெட்ட பாதைகள் கசந்தது …
ஆம் என் வாழ்வின் கசப்பான உண்மைகள்…
இப்படியான கசப்பான வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு பயணத்தின் போது  கண்களில் கண்ட காட்சி வாழ்வை திசை மாற்றியது…கண்முன்னே முதியவர் இறந்து கொண்டிருக்கிறார் …
 இறப்பிற்கு காரணம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆனதென்று அறியாமல் பசியின் கொடுமையால்,ஆதரிக்க ஆளின்றி அனாதை பட்டத்தோடு சிறுக சிறுக உயிர் பிரிந்தது கண்டு என் உயிர் என்னை விட்டு போய்க்கொண்டிறுந்தது….
ஆம் என் வாழ்வின் அடுத்த அடி வெளிச்சமாய் உதித்தது ஆதரவற்ற காப்பக உருவாக்க சிந்தனையாய்….
இலையுதிர் காலங்களில் உதிரும் இலைகளைப்போல் உதிர்ந்து கொண்டிருந்தது மனித நேயம்,வானம் பார்த்த வறண்ட பூமியாய் மனிதர்கள்  மனம் என்று நினைத்த எனக்கு மனித நேயத்தின் மொத்தஉருவாய் கடவுள் மனித உருவில் என் ஆதரவற்றோர் இல்ல கனவை நனவாக்கியவர் இங்கே மனிதவடிவில்….
ஆம் இறந்த மனித நேயம் சிலரின் வடிவில்  நடமாடியது என் கண் முன்னே….
வயிற்றில் பசி, கண்களில் வலி, ஆனாலும் வாழ்ந்தாக வேண்டிய வெறியில்லை,முதுமையை தள்ளிப்போட வழியில்லை, முடிவை நாளை நினைக்கவும் துணிவில்லை….
ஆம் இப்படிப்பட்ட ஆதரவற்ற ஜீவன்கள் எனது ஆசிரம வாசிகளாக…
எங்கள் ஆசிரமம் அன்பினால் இல்லம் கட்டி, அன்பினால் உள்ளம் தொட்டு
அன்பை தந்து இன்பம் வாங்கும் இருப்பிடம்
பின்னிக்கோர்த்த புது உறவாய், இனி அவர்கள் துன்பம் போக்கும் இதய வாசலாய் கவிச்சந்ரா…
 ஆம் எனது மனது விரும்பிய நிறைவான வாழ்வு..
வாயார சிரித்து ஆழ்ந்துஉறங்கி ,மனமகிழ்ந்து, வயிறு நிறைத்து மதிப்புடன் கிடைக்கப்பெறும் புது உறவும், புது பாசமும் என்னால் கொடுக்க முடிந்தது…
 ரத்த உறவுக்கு அப்பாற்பட்ட புத்தம் புது உறவுகளின் பிணைப்பு,மனித நேயம் நிறைந்த புனிதம் சேர்ந்த புது உறவுகளாய் எங்கள் ஆதரவற்றோர் இதயவாசல் சொர்க்கம்.
“வாழ்த்த வேண்டி வாய்க்கு வந்த வாழ்த்துப்பா அல்ல…
 இது மறுக்கப்பட்ட எங்களின் இரண்டாம் வாழ்வுப்பா”
ஆம் எங்கள் ஆசிரமம் அன்பின் சொர்க்கம்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *