பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்ய, வரும், 8ம் தேதி கோவை வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி, வரும், 8ம் தேதி கோவை வருகிறார். கர்நாடகாவில், 8ம் தேதி பிரசாரம் செய்யும் பிரதமர், மாலை, 6:30 மணியளவில் மைசூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார்.
அங்கிருந்து, கொடிசியா செல்பவர், 6:45 மணிக்கு, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இரவு, 8:45 மணிக்கு, தனி விமானம் மூலம் கோவையில் இருந்து டில்லி செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, டில்லியில் இருந்து நாளை (5ம் தேதி) சிறப்பு பாதுகாப்பு படையினர் கோவை வருகின்றனர். இவர்கள், விமான நிலையம், கொடிசியா மைதானம் உட்பட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 2,000த்துக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஏப்ரல் 13-ல் தேனி வருகை :
தேனி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக, துணை முதல்வர், பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி, 13ம் தேதி மதியம் தேனி வருகிறார்.மதுரை ரோட்டில், ஆண்டிப்பட்டி அருகே, எஸ்.எஸ். புரம் ஊராட்சி பகுதியில், பொதுக்கூட்ட மேடை அமைக்கப்படுகிறது. அதே பகுதியில், ‘ஹெலிபேட்’ அமைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த இடங்களை, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் உதயகுமார், நேற்று ஆய்வு செய்தனர். கூட்டத்தில் முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
Leave a Reply