கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று தடயங்கள் அதிகம் அறியப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அதிகமான நடுகற்களை கொண்ட மாவட்டமாகவும் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது.
இந்த நடுகற்கள் மூலம் அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு முறைகளை அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கிருஷ்ணகிரி அவதானப்பட்டியை அடுத்த நாட்டாண்மை கொட்டாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஐயம் பெருமாள் கொட்டாய் வேடியப்பன் என்பவரின் வீட்டுக்கு வடக்கு புறத்தில் பூமி மட்டத்திற்கு கீழே சுமார் 4.5 அடி உயரம் கொண்ட நடுகல் மூன்று புறம் சுவர்போல் கற்ளை அமைத்து அதன் மேற்பகுதியில் 5 அடிக்கு 8 அடி அளவுகொண்ட பெரிய பலகைக்கல்லால் மூடப்பட்டுள்ளது.
அக்கல்லானது ஏறக்குறைய ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்கும். அதன் கிழக்கு புறம் வாசல் உள்ளது போல் அமைக்கப்பட்டுள்ள நடுகல்லுடன் கூடிய கல்லறையை ஆய்வு செய்தனர். இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் திரு கோவிந்தராஜ் அவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் இந்த நடுகல்லானது இறந்துபட்ட வீரனுடன் அவனது மனைவியர் நால்வரும் உடன்கட்டை ஏறியதற்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீரன் படைத்தளபதியாகவோ, வீரர் கூட்டத்தின் தலைவனாகவோ இருக்கலாம். வீரனுக்கு இருபுறமும் இரண்டிரண்டு மனைவியர் காட்டப்பட்டுள்ளனர். இருவரது கைகளில் மதுக்குடம் உள்ளது.
நடுகல்லின் மேல் நாமம் மற்றும் சங்கு சக்கரம் காட்டப்பட்டுள்ளன. இறந்த வீரன் ஒரு வைணவ பக்தன் என்பதை இது குறிக்கிறது. கல்லரை மூடு கல்லின் மேல் சுற்றிலும் சிறு சிறு குழிகள் உள்ளன. இவை விளக்கெரிக்க பயன்பட்டிருக்கலாம் என காப்பாட்சியர் .திரு.கோவிந்தராஜ் அவர்கள் தெரிவித்தார்கள்
இந்த இடத்தின் உரிமையாளர் வேடியப்பன் கூறுகையில் பரம்பரை பரம்பரையாக இந்த நடுகல்லை வழிவட்டு வருவதாகவும் 2007 ஆம் ஆண்டு முழுவதுமாக மண் மூடப்பட்ட நிலையில் சென்று விட்டபோது சாமி கனவில் வந்ததாகவும் அதன் பின் இதை செப்பனிட்டு வழிபட்டு வருகிறார்கள் . இந்த நடுகல் வீட்டின் அடிப்பகுதியில் இப்பொழுதும் நீர் தேங்கிய நிலையில் உள்ளது.
இவ்வாய்வில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் எம்.என் ரவி. நாராயனமுர்த்தி, மதிவாணன், விஜயகுமார், பிரகாஷ் விமலநாதன் ஆகியோர் இடம்பெற்றனர். நாட்டாண்மைக் கொட்டாய் லட்சுமணன் இவர்களுக்கு உதவியாக இருந்தார்.
Leave a Reply