இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு “நீ சொல்வதை நான் எதற்கு கேட்கவேண்டும்” எனும் எண்ணம் அதிகமாக இருக்கிறதே! இதன் காரணம் என்ன? தீர்வு என்ன?
கேள்வி : இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு “நீ சொல்வதை நான் எதற்கு கேட்கவேண்டும்” எனும் எண்ணம்
அதிகமாக இருக்கிறதே! இதன் காரணம் என்ன? தீர்வு என்ன?
- எம். சந்தானம், பெற்றோர் – மணவாளநகர்.
பதில் : நம் அனைவரின் மனப்போக்கு, சூழ்நிலை உட்பட அனைத்தும் மாறிப்போனதே இதன் அடிப்படை காரணமாகக் கருதுகிறேன். முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் பிள்ளைகளாக குறைந்தது நான்கைந்து பேர் இருந்தனர். மேலும் தன் அப்பா அம்மாவின் உறவுகளுடன் ஒன்றாக வளரும் சூழலில் தன் பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் தன் கண்முன்னே அனைவரிடமும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளப்படுவதை அக்குடும்பத்தின் அனைத்து குழந்தைகளும் அனுபவித்தனர்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
தனக்கு உண்டானதை அனைத்தையும் உடன் இருப்பவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் தன்மை இயல்பாகவே வளர்ந்தது. மற்றவர்களுக்கு என்னவோ அதுதான் தனக்கும் எனும் மனப்பக்குவம் இயல்பாகவே அமைந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் இயல்பு தானாகவே கைவந்தது. பெற்றோர் பிள்ளைகளுள் ஒருவரைக் கண்டிக்கும்போது மற்ற பிள்ளைகளுக்கும் தனக்கும் இதேகதிதான் எனும் புரிதல் இயல்பாகவே எழுந்தது. கூடி விளையாடும் தன்மை இருந்தது.
பெற்றோர்களுக்கும் தன்னுடைய உணர்வை தன் பல பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளிக்கும் தன்மை இயல்பாகவே கைவரப்பெற்றனர். அவ்வாறு அமைந்த சூழ்நிலை அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளையின் மனதிலும் ‘தான் மட்டுமே இந்தக் குடும்பம் அல்ல, தன்னுடன் பலபேர் உள்ளனர்’ எனும் உணர்வுத் தன்மை இயற்கையாகவே அமைந்தது. அதனால் பெற்றோரின் பேச்சுக்கு உடன்பட்டனர்.
பெரியவர்களாகி சமூகத்தில் பழகும்போது சிறுவயது முதலே ஏற்பட்ட கூடிவாழும் இயல்பின் காரணமாக சக
மனிதர்களுடன் ஒத்துப்போகும் மனநிலைமையை சுலபமாக கைவரப் பெற்றனர். தற்போது பொருளாதாரம் மற்றும் பல சமூக சூழ்நிலையின் காரணமாக ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே இருகின்றனர்.
பெற்றோர்களின் ஒட்டுமொத்த அக்கறையும் அரவணைப்பும் ஒரு குழந்தையின் மேல் மட்டுமே படரும்போது அக்குழந்தைக்கு இயல்பாகவே ‘தான் மட்டுமே இக்குடும்பம், தனக்கு மட்டுமே அனைத்தும்’ எனும் மனப்பான்மை இயல்பாகவே அமைகிறது. மேலே சொன்ன பல குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் ஏற்படும் இயல்பான மனநிலைமைக்கு எதிர்மறையான நிகழ்வு இதுபோல் ஒரு குழந்தை இருக்கும் குடும்பத்தில் இயல்பாகவே நிகழ்கிறது.
பகிர்ந்துகொள்ளும் தன்மை, கூடி விளையாடும் தன்மை, மற்றவர்களும் நம்மில் ஒரு அங்கம் என்ற பார்வை அனைத்தும் எதிர்மறையாகவே அக்குழந்தையின்(களின்) மனதில் பதிந்துவிடுகிறது. சமூக அமைப்பின் மாற்றம் காரணமாக குடும்பச் சூழ்நிலை, பெற்றோரின் மனநிலை மாற்றம் கண்டதன் விளைவுதான்
நீங்கள் கேட்கும் கேள்விக்கானக் காரணமாகக் கருதுகிறேன்.
இதற்குத் தீர்வு என்னவாக இருக்கும்? சமூக அமைப்பை மாற்றுவது எனும் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயத்தை கையில் எடுக்காமல் தனிப்பட்ட குடும்பத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளிடம் காட்டும் அணுகுமுறையை சிறிது கவனம் செலுத்தி மாற்றினால் போதும். எவ்வகையான அணுகுமுறை? பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ‘தான் மட்டுமே எல்லாம் எனும் எண்ணம் ஏற்படாமல், சுற்றியுள்ள மனிதர்களைத் தவிர்த்து தன்னால் எதுவும் செய்யமுடியாது’ எனும் எண்ணத்தை ஏற்படுத்தும்படி அவர்களின் நடவடிக்கைகள், அறிவுரைகள், அக்கறை அனைத்தும் அமையவேண்டும்.
அதற்கு ஒரு பெற்றோராக சிறிது சிரமம் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதன் இயலாமைக்கு வேலை/தொழில், பணிச்சுமை, நேரமின்மை போன்ற பல காரணங்களை பெற்றோர்கள் சுட்டிக்காட்டும் நிலையில் குழந்தை(களு)க்குள் இதுபோன்ற மன அமைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. மேலும் குழந்தைகளிடம் அவர்கள் வயதுக்குமீறிய விஷயங்களை பெற்றோர்கள் எதிர்பார்ப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.
அவர்கள் பெரியவர்களாகும்போது தானாகக் கற்றுகொள்ளும் விஷயங்களை குழந்தைப் பருவத்திலி அவர்களிடம் திணிக்கும்போது அவ்விஷயங்கள் அவர்களுக்குத் தேவையில்லாததாகத் தெரிகிறது. அதனாலும் ‘நான் ஏன் செய்யவேண்டும்/கேட்கவேண்டும்?’ எனும் எண்ணம் தலைதூக்குகிறது. மாற்றம் நம்மிலிருந்து (பெரியவர்களிடமிருந்து) தொடங்கட்டும். நல்லது நடக்கட்டும். வாழ்த்துக்கள்.
கேள்வி – பதில் தொடரும்…
…………………………………………………………………………………………………………………………………………………
(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply