செய்யும் தொழிலே தெய்வம் என்பதனை விளக்க முடியுமா?
கேள்வி : செய்யும் தொழிலே தெய்வம் என்பதனை விளக்க முடியுமா?
- எம். செந்தில்குமார், திருவள்ளூர்.
பதில் : எந்திரன் படத்தில் “கடவுள் என்றால் யார்?” நம்மைப் படைத்தவர் கடவுள்” என்று ரோபோ சொல்லும். அதைப்போல கடவுளால்/இயற்கையால் படைக்கப்பட்ட நமக்கு வாழ்வின் ஆதாரமாக இருப்பது எது? நாம் செய்யும் தொழில். பொதுவாக செய்யும் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே வாழ்வின் போக்கு அமைவதனால் அத்தொழிலை கடவுளாக/ தெய்வமாகப் பார்க்கவேண்டும் என்னும் நோக்கில் அவ்வாறு சொல்லி இருக்கலாம்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
மேலும் அத்தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் பொதுமக்கள், முதலாளி, பணியாளர்கள் என அனைவரையும் நன்றியுடன் வணங்க வேண்டும் எனும் நோக்கத்தில் அவ்வாறு சொல்லி இருக்கக் கூடும். நிறையப்பேர் சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு.
“நான் யாரை நம்பியும் தொழில் செய்யவில்லை” என்று. இது நடைமுறை தெரியாது ஆணவத்தில் உளறுவது. ஒரு தொழில் என்பது நிச்சயமாக மற்றொருவரைச் சார்ந்து செய்வது. அந்த மற்றொருவர்
என்பது மேலே சொன்னதுபோல உங்களுடன் பணிபுரிபவராக, உதவி செய்பவராக, தொழிலுக்கு ஆதாரமாக
இருப்பவராக, நீங்கள் உற்பத்திசெய்யும் பொருளை பயன்படுத்துபவராக இன்னும் இதுபோன்ற பலதரப்பட்ட
மனிதர்களை குறிப்பதாகும். அவர்களை மதித்து, நன்றாக தொழில் செய்து, அத்தொழில் மூலம் கிடைக்கும்
வருமானத்தை அல்லது இலாபத்தை நன்றியுடன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் தன்மை வளரவேண்டும் எனும் நோக்கில் அவ்வாறு சொல்லி இருக்கக் கூடும்.
இதனைத் தற்போதையச் சூழலில், மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். நீங்கள் செய்யும் தொழிலுக்கு
அடித்தளமாக, அச்சாணியாக விளங்குவது எது? உங்கள் திறமை. எது திறமை? அத்தொழிலுக்குத் தொடர்புடைய மனிதர்களுடன் கொள்ளும் உறவுமுறை, யாரை நம்ப வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி அணுகவேண்டும், மனிதர்களை எப்படி தனக்கருகில் வைத்துக் கொள்ளவேண்டும், எப்படி இலாபம் சம்பாதிக்கவேண்டும், தொழில் நுணுக்கங்களை எப்படி கிரகித்துக் கொள்ளவேண்டும், தன்னை சோர்வடையாது எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதுபோன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். பொதுவாக நாம் படிக்கும் படிப்பை மட்டுமே தொழில் திறமையாகப் பார்க்கிறோம்.
அது மட்டுமல்ல… வேறு வகையான நடைமுறைத் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள
வேண்டும். எது நடைமுறைத் திறமைகள்? நீங்கள் செய்யும் தொழிலில்/ பணியில் ஏற்படும் சிக்கல்களை எப்படி அணுகுவது, எப்படி யோசிப்பது, யாரிடம் ஆலோசனை பெறுவது, தற்பெருமை இல்லாது தன்னை எப்படி வெளிப்படுத்துவது, இடையில் ஏற்படும் இடர்களை/ துரோகங்களை/ தோல்விகளை எப்படி உணர்வது போன்ற நடைமுறைத் திறமைகளை கைகொள்ளவேண்டும்.
எப்போது இந்த எண்ணம் வரும்? தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்வின் மரியாதை, அந்தஸ்து, கௌரவம், வசதிகள் மற்றும் ஆணவம் அனைத்திற்கும் இந்தத் தொழில் மட்டுமே ஆதாரம் எனும் பக்தியில் இதனைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் எனும் பயம் வரும். இந்த பயபக்தியே நீங்கள் செய்யும் தொழிலை தெய்வமாகப் பார்க்கும் தன்மையை உருவாக்கும். அனைத்தும் ஒன்றுதான். உங்கள் தொழிலையும் அதனைச் சார்ந்தவற்றையும் நன்றியுடன் பாருங்கள்.
முடிந்தவரை நியாயமாகத் தொழிலைச் செய்யுங்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தொழிலுக்கானத் திறமை எவை என்று நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு. வாழ்த்துக்கள்.
தொடரும்…
……………………………………………………………………………………………………………………………………………………….
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply