ஆசையின் அளவு : (ஊக்கமது கைவிடேல் : Episode-9)

Share Button

இலைகள் எல்லாம் கீழே விழுந்து மரம் மொட்டையாக இருக்கும்போது என்ன நடக்கும்? பொன்னான காற்று கிடைக்கும் என்பது ஜென் துறவியின் பதில். அதெப்படி? உன் எண்ணங்கள் எல்லாம் மனதிலிருந்து விழுந்து உள்ளுணர்வு மொட்டையாக நிற்கும் நிலைதான் அது.

அப்படியெனில் எண்ணங்கள் ஆசையாய் வருகின்றதே, என்ன செய்ய? ஆசையின் அளவு என்ன? எவ்வளவு தூரம் ஆசைப்படலாம்? நம் ஆசை, எது அசாத்யமாய் இருக்கிறதோ அதன்மேல் இருக்கட்டும். ஏனெனில் நேற்று அசாத்யமாய் இருந்தது இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் என்கிறார் காந்தி.

இன்று ஒரு சிந்தனையைக் கொள்வோம். ஒரு வழிபோக்கன் நாடு மற்றும் காடு கடந்து பாலைவனம் போன்ற வறண்ட பகுதியில் சென்றுகொண்டிருந்தான். மிகவும் தனித்து அதிக தூரம் நடந்ததால் களைப்புற்று இருந்தான். அவ்வாறு நடந்து செல்கையில், அன்று இன்னொரு வழிப்போக்கன்போல் ஒருவன் ஒரு குதிரையில் வருவதைப் பார்த்தான்.

குதிரையில் வந்தவனோ, இவனிடத்தில் ஒருஊரின் பெயரைச் சொல்லி வழி கேட்டான். வழி கிடைத்த சந்தோசத்தில், இவனுக்கு நன்றி சொல்லி புறப்படத் தயாராகும்பொழுது இந்த, நடந்து வந்த வழிப்போக்கன் குதிரையில் வந்தவனிடத்தில், “ஐயா, நான் நடந்து செல்கிறேன், நீங்கள் அணிந்திருக்கும் செருப்பைத் தருகிறீர்களா, நீங்கள் குதிரையில் தானே செல்கிறீர்கள், எனக்குத் தந்துதவலாமே” எனக் கேட்டான்.

குதிரையில் வந்தவனோ, அதில் இருந்த ஞாயத்தை உணர்ந்து செருப்பைக் கொடுத்தான். பின்பு புறப்பட எத்தனிக்கையில், மீண்டும் இவன் கேட்டான், ஐயா , நீங்கள் குதிரையில் மிகவும் வேகமாகச்
சென்றுவிடுவீர்கள், ஆதலால் குடையையும் தருகிறீர்களா? எனக் கேட்க, அதையும் கொடுத்தான். இரண்டும் கிடைத்த மகிழ்ச்சியில், இருவரும் அவரவர்களின் வழியே புறப்பட்டார்கள்.

இவன் மீண்டும் ‘ஐயா, தங்கள் இந்தக் குதிரையை எனக்குத் தரமுடியுமா?’ என்றான். குதிரையில்
வந்தவனோ, சற்று இறங்கி ஒரு சவுக்கை எடுத்து இவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டான். சற்றுநேரம் அடி வாங்கியவுடன், இவன் சொன்னான், “ஐயா, மிக்க நன்றி”. அடித்தவன் திகைத்தான். அப்போது அடி வாங்கியவன் சொன்னான், ஐயா, உங்களிடம் இதைக் கேட்டிருக்கலாமே எனப் பின்னால் நினைத்து வருந்துவதை விட இப்போது கேட்டு கிடைக்காமலிருப்பதே மேல், ஆதலால்தான் கேட்டேன், இப்போது எனக்கு ஒரு உண்மை புரிந்தது.

என் ஆசையின் அளவும், எதுவரை நான் ஆசைப்படலாம் அல்லது கேட்கலாம் என்பதும், மிகவும் நன்றி ஐயா’, என்றான். எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை. ஆகையால் நம்தேவையை அறிந்து…

ஒரே குறிக்கோள்… எல்லையற்ற ஊக்கம்… அஞ்சாத நெஞ்சுறுதி… சளைக்காத உழைப்பு… நேர்மையான பாதை என வகுத்து,

வேண்டாமை அன்னவிழுச் செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல் – குறள்– 363

என வாழ்வோம்.

இன்னும் தொடரும்…

 

நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M

தன்முனைப்புப் பேச்சாளர் / மதச் சொற்பொழிவாளர் / தத்துவப் பேச்சாளர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *