நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஆனால் நடுவில் தான் கொஞ்சம் பொங்கலைக் காணோம்
இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் நடுவில் தான் கொஞ்சம் பொங்கலைக் காணோம். நுங்கு வண்டியும், கிட்டி பிள்ளையும் நண்பர்களுமாய் விளையாடிய நேரமிது தெரியாமல் நாங்கள் துன்புறுத்திய வண்ணத்துப்பூச்சிகள், பச்சோந்திகள் இன்னும் பல.
இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் நடுவில் தான் கொஞ்சம் பொங்கலைக் காணோம். அப்பாவிற்கு பயந்த நொடிகள், அம்மாவின் பாசத்துளிகள், நண்பர்களுடன் மகிழ்ச்சித்தத் துளிகள், நடிகர்களின் புதுத் திரைப்படங்கள், இவையத்தனைகளுடனும் இளையராஜாவின் இசைத்துளிகளும் எனக்குள் இறங்கிய முதல் பொங்கல்.
இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் நடுவில் தான் கொஞ்சம் பொங்கலைக் காணோம்.
அப்பாவிடம் காசு வாங்கிக்கொண்டதும். சொந்தங்களைக் கணக்கிட்டுக் கொண்டதும், என் அண்ணணனுடனும் எதிர் வீட்டு அண்ணனுடனும் கடைக்கு சென்றதும், பொங்கல் வாழ்த்து அட்டை வாங்குகையில், இயற்கைப் படங்களை நானும், நடிகர் படங்களை என் அண்ணனும் எடுக்க சண்டை போட்டுக்கொண்டதும், இரு அப்பாவிடம் சொல்கிறேன் என்றதும், இருந்தாலும் என் அண்ணண் உறுதியாய் நின்றதும், இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.
ஆனால் நடுவில் தான் கொஞ்சம் பொங்கலைக் காணோம். நாட்காட்டியின் விலாசப்பக்கங்கள் என் அப்பாவின் கைகளில். நானோ சொந்தங்களுக்கு அழைப்பு அனுப்பப்போகும் சந்தோச நினைவுகளின் நொடிகளில். நானும் அண்ணனும் மீண்டும் சண்டையிட்டுக் கொண்டோம். ஸ்டாம்ப் ஓட்டுகையில், இன்னும் நன்றாக ஞியாபகம் இருக்கிறது.
ஆனால் நடுவில் தான் கொஞ்சம் பொங்கலைக் காணோம். மாற்றம் என்பது நிரந்தரம், ஆனால் இது எல்லாவற்றையும் மாற்றிப்போட்டு விட்டதே. எழுத படிக்க தெரியாதவர்களின் வரிசையில் மாற்றமும் நின்று விட்டதே. நல்ல உழவர்கள் எங்கே.
மகிழ்ச்சியானவர்கள் எங்கே. உண்மையானவர்கள் எங்கே. எதையும் அமைதியுடன் அணுகியவர்கள் எங்கே. ஐயகோ தேடினால் வலி தான் விடையாயின் எனக்கு வலிமையான அந்த நாட்களே வேண்டும். நான் தொலைத்த பொங்கலே வேண்டும். வலிமையான உழவர்களும், அவர்களின் செழுமையான வாழ்க்கையும் வேண்டும். நான் தொலைத்த பொங்கலே வேண்டும்..
வெள்ளை எல்லாம் அடித்து வைத்து,
வீட்டை நன்கு மெழுகி வைத்து,
விடியும் போதே குளித்துவிட்டு,
விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து ,
கோலமிட்ட பானையதில்,
கொத்து மஞ்சள் கட்டி வைத்து,
அந்தப் பானை தன்னைத்தூக்கி,
அடுப்பில் வைத்து பாலூற்றி ,
பொங்கிப் பாலும் வருகையிலே,
பொங்கலோ பொங்கல் என்போம்…
தேங்காயோடு கரும்பும், சோறும்
தெய்வத்துக்கு படைத்தது வைத்து
ஒன்று சேர்ந்து உண்டிடுவோம்…
ஓடி ஆடிப் பாடிடுவோம்..
பொங்கலே வருக…
நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M
தன்முனைப்புப் பேச்சாளர் / மதச் சொற்பொழிவாளர் / தத்துவப் பேச்சாளர்
Exceptionally good, got into my childhood memories….