”மனப்பொங்கல்”

Share Button

விவசாயி உலகின் முதல் கண்டுபிடிப்பாளன், முதலில் உற்றுநோக்கியவன், முதன்மையாக மதிக்கத் தெரிந்தவன், இயற்கையை ஆராய்ந்த முன்னோடி மேலும் அனைத்திற்கும் மேலாக மனிதத்தை தனக்குள்ளும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் விதைத்த மாமேதை. தனக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கு யதார்த்த வாழ்க்கையை கல்வெட்டில் செதுக்கிய வாழ்க்கைச் சிற்பி.

மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை தத்துவமாக மட்டும் எடுத்துரைக்காமல் வாழ்க்கையாகவே உரைக்கும் விஷயமே இந்தத் தைத் திருநாள், உழவர் திருநாள், பொங்கல், தமிழர் திருநாள் என்று பலவகைகளில் அழைக்கப்படும் இந்தப் பண்டிகை.

எதனைச் செய்யவேண்டும் என்று பல தலைமுறைகளாக பயணித்து நம் தலைமுறைக்கும் வந்துள்ளதே தவிர எதற்காக என்றும், அதன் உள்ளர்த்தம் என்ன என்றும் பரிமாறப்படவில்லை அல்லது அதில் அக்கறை செலுத்தப்படவில்லை.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எனும் கருத்தின் சாராம்சம் நமது வாழ்க்கையின் வெளிப்பாடு. வாழ்வின் ஆதாரமான உணவை கதிரறுக்கும் தருவாயில் மனதில் ஏற்பட்ட வடுக்கள், உணர்சிகள், வேதனைகள் அனைத்தையும் அறுத்தெறிந்து புதிய வாய்புகள் உருவாவதே வாழ்வின் அடிப்படை என்பதனைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அடிப்படை முயற்சியே இந்த ‘போகிப்பண்டிகை’.

வாழ்வின் மிகப்பெரிய அனுபவத்தை ஒரு விழாவாக கொண்டாடி வாழ்வில் அனைவரும் செய்யவேண்டிய முதல் செயலை பறைசாற்றும் இந்நிகழ்வை நிகழ்த்திய விவசாய வம்சத்தினருக்கு நாம் அனைவரும் தலை வணங்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அதனை எடுத்துக் காட்டும் நிகழ்வே பழையப் பொருட்களை எரிக்கும் அனுபவத்தை நம்மிடம் கொடுத்தார்கள்.

அதனை நிலைநிறுத்தும்பொருட்டே அதனை ஒட்டிய சடங்குகள். அதற்காக தன் மனதை, தன்னைச் சார்ந்தவர்களின் மனதை ஓர் அலைக்குள் கொண்டுவரும் யுக்தியே தன் இருப்பிடத்தைச் சுற்றி நல்ல உணர்வலைகளைத் தரும் ஆவாரம், வேம்பு, துளசி, பிரண்டை மற்றும் தும்பை ஆகிய செடிகளின் தொகுப்பாக ‘காப்பு’ கட்டுவர்.

நம்மிடம் உள்ள பழைய எண்ணங்களுடன் சங்கடங்கள், கவலைகள் உட்பட அனைத்தையும் வெளியில்
வீசியெறிந்தபிறகு நம்மில் பொங்கும்/உண்டாகும் உற்சாகம், புத்துணர்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளும் தருணமே ‘பொங்கல்’. மேலும் தன் வாழ்க்கைக்கு ஆதாரமான இந்த இயற்கை மற்றும் அதன் ஆதாரமான சூரியனை வணங்கும் தன்மையினை நமக்குள் ஏற்படுத்திய அனுபவமே இந்த இரண்டாம் நாள்.

இயற்கையே நம் வாழ்வின் அடிப்படை மேலும் அதனை கொண்டாடுவதே நம் வாழ்வை மேலும் சிறப்பாக்க உதவும் எனும் அடித்தளத்தை புரிந்து கொண்டாடுவதுதான் இந்தப் பண்டிகை. பிறகு, தன் வாழ்விற்கு ஆதாரமான உணவைப் பெறுவதற்கு, உழவிற்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி சொல்லியும், அவர்களோடு தழுவி விளையாடும் ஜல்லிக்கட்டை நடைமுறைப்படுத்தியும், தான் சார்ந்து இருக்கும் அனைவரையும் உணரவேண்டும் எனும் வாழ்வியல் தத்துவத்தை முன்னிறுத்தியதே ‘கன்றுப்பொங்கல்/மாட்டுப்பொங்கல்’ என்பது.

தானும் தன் குடும்பத்தாரும் நல்வகையில் வாழ்ந்திட அடிநாதமாக விளங்கும் பெண்களை முன்னிறுத்தி அப்பெண்களால் ஏற்பட்ட சொந்தங்களிடமும், தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் உற்சாகமூட்டப்பட்ட மனதிலிருந்து ஆசிர்வாதம் பெறுவதன் அடிப்படை விளக்கத்தை உணர்த்துவதன் விதைதான் ‘காணும் பொங்கல்’ எனப்படுவது.

இவ்வாறு, வாழ்வின் அடிப்படை எது, அதனை எவ்வாறு அடைவது, அதற்கு உறுதுணையாக வருவது எது, அதனை எப்படிக் கையாளவேண்டும் என வாழ்வையே வரும் தலைமுறைகளுக்கு எடுத்துரைத்தவர்கள் உழவர்கள். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், விலங்குகள் மற்றும் அதன் உச்சமாக இயற்கையை மதிக்கத் தெரிந்தவர்கள். அனைத்தையும், அனைவரையும் நன்றியுணர்வோடு அணுகத் தெரிந்தவர்கள்.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, தாவரங்கள், மரங்கள், சிறிய பூச்சிகள், பறவைகள், விலங்குகள் உட்பட அனைத்திற்கும் இந்த பிரபஞ்சம் உரியது என்பதனை முதலில் உணர்ந்தவர்கள். இயற்கையோடு ஒத்துவாழும் யதார்த்தம் அறிந்தவர்கள்.

உழவர்கள் மரியாதை உட்பட எதையும் யாரிடமும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களிடம் இருப்பதை
சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்கும் மனநிலையைப் பெற்றவர்கள். அவர்களுக்கு நாமும் எதுவும் செய்யவேண்டாம். அவர்கள் அவர்களாகவே இருக்கும் சூழ்நிலையை நம்மை அறிந்தோ அறியாமலோ கெடுக்காமல் இருக்கும் முயற்சியை மேற்கொள்வோம்.

உண்மையைச் சொல்லப்போனால், இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறை உழவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களைக் கொண்டாடும் மனிதர்களுக்கு இயற்கையிடமிருந்து கிடைக்கும் அனைத்தும் தாமாகவே கிடைக்கும். நாம் நலம்பெற, நம்மைச் சார்ந்தவர்கள் நலம்பெற, இயற்கை வளம்பெற, மனிதநலம் பேண விவசாயிகளையும், விவசாயத்தையும் மேலும் மேலும் வாழச் செய்வோம். விவசாயிகளுக்கு வணக்கங்கள்.

 

 

ஓஷோனிக்ராஜ்

மனநல ஆர்வலர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *