நாம் எதை விதைக்கிறோமோ, அதையேதான் அறுவடை செய்வோம் / ”பருவத்தே பயிர்செய்” – ஊக்கமது கைவிடேல் : Episode-7
அண்ணார்ந்து மேல்நோக்கிப் பாருங்கள், பறவைகள் அனைத்தும் நேர்கோட்டில்தான் பறக்கிறது. அதன் நிழலைப் பார்த்துத் தவறாகக் கொள்ளாதீர்கள். ஆறு என்பது ஓடும், எழுந்து நின்று பார்த்ததுண்டா? ஆஹா, அது அருவிதானே? இந்த மாற்று சிந்தனையைக் கொண்டதுண்டா? எவ்வாறு நிகழும்? தன்னை உணர்ந்தாலே இது சாத்தியம் என்கிறார்கள் பெரியோர்கள்.
இதற்கு அடித்தளம் எது? நல்லொழுக்கப் பண்புகளை நாம் கற்று ஏற்றுக்கொள்ளுதலே வழி. ஜப்பானில், பத்து வயதுவரை, குழந்தைகளுக்கு மானிடப் பண்புகள் மற்றும் அறச்சிந்தனையே முழுப்பாடமாகப் போதிக்கப்படுகிறது. இந்த முறையும் இங்கு இருந்ததுதான், சில தலைமுறைக்கு முன்புவரை. அவ்வாறு தொலைக்கப்பட்ட ஒருவார்த்தை சிந்தனைதான் ஒவையின் ”பருவத்தே பயிர்செய்”.
நாம் எதை விதைக்கிறோமோ, அதையேதான் அறுவடை செய்வோம். குழந்தைகள், கேட்டுக் கற்றுக்கொள்வதைவிட, பார்த்துக் கற்றுக்கொள்வதே அதிகம் இன்றைய உலகில். ஆதலால், வருங்காலமதைக் கொள்ளும் குழந்தைகள் முன்னிலையில், உயர்ந்த பண்புகளை, சொற்களை, செயல்களை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தையின் மொழி புரியவேண்டும்.
அதை அணுகும் பக்குவம் பெறவேண்டும். தயவு செய்து உங்கள் மனதைக் கொடுங்கள், இந்தப் பகுதி புரிந்தால் உங்கள் வாழ்கை நிச்சயம் மாறும். திரு. பர்வீன்சுல்தானா அவர்கள், ஒருமுறை இந்தக் கவிதையை வாசித்துக் காண்பிக்கக் கண்டேன், அதிலிருந்து துவங்குவோம்.
இது குழந்தை மொழி….
பெருமழை இரவு…கட்டிலில் நான், அருகில் பேரன்.
பேரன் கேட்டான், ”தாத்தா, காக்கை எங்கே உறங்கும்?”
இதுகுழந்தைமொழி….
வீட்டிற்கு வெள்ளை அடித்தேன், குழந்தை அழுதது…
சுவற்றில் அது கீறிய சித்திரங்கள்….
இதுகுழந்தைமொழி….
இம்முறை கதையல்ல, இரெண்டு நாட்களுக்கு முன்பு எனக்கும், என் மகளுக்கும் நடந்த ஒரு குழந்தை அனுபவம். காலை 6 மணி, என் குழந்தையின் மொழியில்.. ”அப்பா, நீ ஒரு zero year பாப்பா, நீங்களும் உங்களின் பாப்பாவும் (பாப்பாவாகிய எனக்கு ஒரு பாப்பா 🙂 கடற்கரைக்குச் செல்கிறீர்கள், அங்கு ஒரு திமிங்கலம் உங்க பாப்பாவைக் கொன்றுவிடுகிறது, நீங்க என்ன செய்வ பாப்பா” என்பதில்: அந்த திமிங்கிலத்தை அடித்துக் கொல்வேன்.
உடனே, என் மகள் குறுக்கிட்டு … ”அப்பா…, நீங்கதானே சொன்னீங்க…வள்ளுவர் தாத்தா, ‘இன்னா செய்தார்க்கும்னு ஏதோ" அப்படினு… அப்புறம் நீங்க ஏன் தப்பு செய்யுறீங்க? அந்த திமிங்கிலம்தான் ஏதோ தெரியாம உங்க பாப்பாவை கொன்னுடுச்சு, இப்போ நீங்களும் அதைக் கொன்னால், அதன் அம்மா அழும்தானே, அதன் அப்பா தேடுவார்தானே, அதன் குட்டுவும் கரையும்தானே… so மன்னித்து விட்டுரு பாப்பா…..”
உடனே நான் நினைத்தேன் நான் சொன்ன மற்றும் செய்யும் செயல்களின் பலன் வீண் போகவில்லை’ என்று… என் மகளும் அதையேதான் நினைத்தவளாய்…..”என் வயித்தில நீ நல்ல பாப்பாவா வந்து பொறந்திருக்கே பாப்பா” இது குழந்தை மொழி….
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு – குறள் 987
இன்னும் தொடரும்…
நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M
தன்முனைப்புப் பேச்சாளர் / மதச் சொற்பொழிவாளர் / தத்துவப் பேச்சாளர்
Again, the Author well connected the Ovvaiyar wordings for the current gen.