தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது எப்படி? என் மாணவர்களுக்கு தேர்வில் அதிக கவனம் செலுத்தக் கற்றுக்கொடுக்கும்போது நான் எதிர் நோக்கிய கேள்வி இது!
கேள்வி: தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது எப்படி? என் மாணவர்களுக்கு தேர்வில் அதிக கவனம்
செலுத்தக் கற்றுக்கொடுக்கும்போது நான் எதிர் நோக்கிய கேள்வி இது!
- சதீஷ், ஆசிரியர் – தக்கோலம்.
பதில்: சிந்தனையின் இயல்பே தொடர்பற்று அல்லது தொடர்புற்று அலைவதுதான். இதில் தேவையுள்ளது
தேவையற்றது எவை எவை என்று நீங்கள் மட்டுமே முடிவு செய்யமுடியும். உதாரணத்திற்கு உங்கள் மாணவர் ஒருவரை எடுத்துக்கொள்வோம். தேர்விற்கு படித்துக் கொண்டிருக்கிறார்.
விடையை மனப்பாடம் செய்துகொண்டிருக்கும்போது இடையில் தேர்வு எழுதும் அறை நினைவிற்கு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பக்கத்தில் உட்காரும் நண்பனின் நினைவு, அதன் தொடர்ச்சியாக இருவரும் முதல் நாள் சென்ற திரைப்படம் நினைவிற்கு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திரைப்படத்தின் காட்சிகள், பாட்டு, படத்தைப் பற்றிய விமர்சனம் மனதில் சிந்தனைகளாகத் தொடர்கிறது.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
இந்த ஒட்டுமொத்த சிந்தனைகளும் அம்மாணவரை பல நிமிடங்கள் படிப்பிலிருந்து அகற்றிக் கொண்டுபோயிருக்கும். மீண்டும் படிப்பு சிந்தனை வரும். மீண்டும் அதே தொடர்ச்சியான தொடர்பற்ற பல்வேறு சிந்தனைகள். இதில் எது தேவையற்ற சிந்தனை? உண்மையாக அம்மாணவன் படித்துக் கொண்டுதானே இருந்தார்? படிப்பைப் பற்றிய செயல் செய்து கொண்டிருக்கும்போது சிந்தனை எப்படி திரைப்படத்திற்குச் சென்றது? இதில் தேவையுள்ள மற்றும் தேவையற்ற சிந்தனை என்று பார்ப்பதைவிட எங்கு சிந்தனைகள் திசைமாறுகிறது என்பதனை இனம் காண்பதே உங்களுக்கு பலன் தரும்.
உங்களின் சிந்தனைகள் பல்வேறு தளத்தில், விஷயத்தில் படர்ந்து கொண்டுதான் இருக்கும். அதனை
நடைமுறையில் தவிர்க்கமுடியாது. ஆனால் எந்த இடத்தில் உங்களின் சிந்தனை தடம் மாறுகிறது என்பதனை அடையாளம் காணுவது சுலபம். எப்படி? இது ஒரு சிறிய பயிற்சிதான். நீங்கள் எப்பொழுதெல்லாம் சிந்தனையின் வயப்பட்டு இருக்கிறீர்களோ அப்போது உங்கள் சிந்தனைகளை (என்னென்ன எண்ணங்கள் வருகிறது என்று) கூர்ந்து கவனியுங்கள்.
இந்த எண்ணங்களைக் கூர்ந்து கவனிக்கும் பயிற்சி நாளடைவில் உங்களை சிந்தனை வயப்படுதலில் இருந்து தள்ளி வைக்க உதவும். அப்படி தள்ளி நின்று உங்கள் சிந்தனைகளைக் கவனிக்கும்போது உங்களுக்குத் தேவையற்ற சிந்தனைகள் வரும்போது அவற்றை அடையாளம் கண்டு அவைகளை உதாசீனப்படுத்த முடியும். சிறிது கடினம்தான். ஆனால் உங்கள் மனதை நீங்கள் கையாள வேண்டுமானால் உங்களின் முயற்சியும் அவசியம். வாழ்த்துக்கள்.
கேள்வி – பதில் தொடரும்…
…………………………………………………………………………………………………………………………………………………
(இது பெற்றோர் – ஆசிரியர்களுக்கான வகுப்பறை)
இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ இருந்தால் இதுபோன்று தங்களுக்கு எழும் கேள்விகளை எங்களுக்கு கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் மனநல ஆர்வலர் திருமிகு.ஓஷோனிக்ராஜ் அவர்கள். கேள்விகளை அனுப்ப : Email : puthuvaravunews@gmail.com / britosho@gmail.com
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply