கல்வி உயர : (பாகம்-9) தற்போதைய தேர்வுமுறை சரியா?

Share Button

தேர்வு முறையில் மாற்றம் தேவை!

வீட்டிற்கு அருகில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. சென்ற மாதம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்றது.

பள்ளிக்குத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் முகங்கள் இறுக்கமாக இருப்பதைத் தினமும் காண்பேன். அப்போது, சில பெற்றோர்கள் ‘தேர்ச்சி ஆகிடுவே தானே “எனப் பயத்துடன் குழந்தைகளிடம் கேட்பதைக் காணும்போது மனம் பதறுகிறது.

தேர்வு எழுதச் செல்பவனும் பயத்துடன், அவனுக்காக் காத்திருக்கும் பெற்றோரும் பயத்துடன்… தேர்வு முறையில் / மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை என்பதையே இவை எடுத்துக்காட்டுகின்றன.

ஏன் தேர்வைக் கண்டு குழந்தைகள் பயப்படுகிறார்கள்?

புத்தக உள்ளடக்கத்தை அடிப்படையாக வைத்துச் சோதிப்பதால், மனப்பாடம் சார்ந்து கற்பித்தல் முறை அமைவதுடன், மாணவர்களது கற்கும் போக்கானது அதுசார்ந்தே அமைந்துவிடுகிறது. அதனால், தேர்வு எனும்போது மன இறுக்கத்துடன் மாணவர்கள் இருப்பது இயல்பாகிறது.

தேர்வு முறை எப்படி இருத்தல் வேண்டும்?

பிரச்சனைகளைத் தீர்க்கும் முறை அடிப்படையில் சோதிப்பதாகவும் மற்றும் திறமை அடிப்படையில் சோதித்துப் பார்ப்பதாகவும் தேர்வு முறை முழுமையாக மாற்றப்பட வேண்டும்.

தேர்வு முறையில் மாற்றம் தேவை. ஏன்?

பல்வேறு வகைப்பட்ட கற்பவர்கள் பல்வேறு விதமாக கற்கிறார்கள். அப்படியெனில் பல்வேறுவிதமான மதிப்பீடு செய்யும் முறைகளும் இருக்க வேண்டும் தானே!

அப்படி இருக்குமானால், ஞாபக சக்தியைச் சோதிக்கும் தற்போதையத் தேர்வு முறைக்கு மாற்றாக அது அமைந்து, ஆராய்தல், பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன், கற்றுக்கொண்ட அறிவை பொருத்திப் பார்த்தல் போன்ற மாணவனின் சிறப்புத் தகுதிகளைச் சோதிப்பதாக இருக்கும்.

அதேநேரத்தில் எல்லா மாணவர்களும் ஒரே தரமுடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறானது.

இது, சமூக ரீதியாக மாணவர்களைப் பின்நோக்கி இட்டுச் செல்லும். கிராமபுற, நகர்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் காணப்படும் வேறுபாட்டில் இருந்து இதனை அறிய முடியும்.

நல்லவேளை உடனடியாக மறுதேர்வு எழுதும் வாய்ப்பு இருப்பதால் இடைநிற்றல் அளவு குறைந்துள்ளது. மேல்படிப்பு செல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கவும், இடை விலகளை முற்றிலும் குறைக்கவும் அடுத்தடுத்து தேர்வு எழுதும் வாய்ப்பை மூன்று அல்லது நான்காக மாற்றி அமைக்கலாம். இதனை அமையவிருக்கும் தமிழக கல்விக் கொள்கை பரிசீலிக்க வேண்டும்.

உலகின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவகையில் புதிய பாடங்களை அறிமுகப்படுத்துவதுடன், தேர்வு முறை வெளிப்படையானதாகவும், வளைந்து கொடுப்பதாகவும், படைப்புத் திறன் உடையதாகவும் அமைப்பது அவசியம். இதனையும் தமிழக கல்விக் கொள்கை கருத்தில் கொள்ள வேண்டும்.

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை இன்னும் செழுமைப்படுத்தபட்டு பன்னிரெண்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் எனில் தேர்வின் மன இறுக்கத்தைக் குறைத்து வெற்றி பெறுவதை அதிகரிக்க முடியும். மதிப்பீடு செய்வதற்கு கூடுதல் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

பள்ளி அளவில் உள்மதிப்பீடு செய்வதை அதிகரிக்க அப்பயிற்சி உதவுவதாக அமைய வேண்டும். அதன்வழி , கற்றலின் தன்மையை மாற்றி அமைக்க முடியும் . அதன்வழி கற்பித்தல்முறையில் மாற்றங்களை உருவாக்கி, கற்றலைச் சீர்படுத்த இயலும்.

மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும்?

பாரதிதாசன் எழுதிய தமிழின் இனிமை பாடலை நடத்த வேண்டும். இனிப்பு ஒரு சுவை என்பதை மாணவன் உணர்ந்திருந்தால் மட்டுமே தமிழ் இனிமையானது என்பதை விளக்க முடியும்.

மற்ற சுவைகளை விட இனிப்பு சுவை முதன்மையானது / அனைவரும் விரும்பும் சுவை என்பதையும் புரிய வைக்க வேண்டும். அதற்கு குழந்தைகள் சுவைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும்.

அதற்காக அவனிடம் நேரடியாக கேள்வியைக் கேட்டு மதிப்பிட கூடாது., ஆசிரியர் மதிப்பிடுவது மாணவர் அறிய வேண்டியதில்லை. இயல்பில் அவனதுத் திறன் வெளிப்பட ஆசிரியர் உதவ வேண்டும். அவன் மதிப்பிடப்படுவதை உணராமலே மதிப்பீடுச் செய்ய வேண்டும்.

மாணவர்களை வட்டமாக நிற்கச் செய்தேன். கண்களை மூடச் செய்தேன். அவரவர் விரும்பும் உணவினை நினைக்கக் கூறினேன். அந்த உணவினை ரசித்து உண்ணக் கூறினேன். ஒவ்வொரு மாணவரின் முகப்பாவனையில் இருந்து அவர்கள் சுவை அறிந்து இருப்பதைக் கண்டுபிடித்தேன்.

பின்பு, ஒவ்வொருவரிடமும் அவர்கள் நினைத்தது என்ன உணவு? என்ன சுவை என்பதைக் கேட்டறிந்து உறுதி செய்தேன்.

அதன்பின் சில படங்களைக் கொடுத்து அந்தப் படத்தில் உள்ள உணவு/ பழம் / சாறு ஆகியவற்றின் பெயரை எழுதி , அதன் கீழ் சுவையை எழுதச் செய்து மேலும் சுவையின் பெயர்களைச் சரியாக எழுதுகிறார்களா என்பதை அறிந்து கொண்டேன்.

மீண்டும் வட்டமாக நிற்கச் செய்தேன். ஒருவர் வட்டத்தின் வெளியே ஓடி வந்து ,ஒருவரின் முதுகைத் தொட்டு ஒர் உணவின் / பழம் பெயரைக் கூற வேண்டும். அதற்கு அந்த நபர் அவர் கூறிய உணவின் சுவையைக் கூற வேண்டும்.

அவர் தவறாக கூறிவிட்ட்டால் , வட்டத்தின் நடுவில் அமர்ந்துக் கொள்ள வேண்டும். சரியாகக் கூறினால், அவர் வட்டத்தைச் சுற்றி வந்து ஒருவரைத் தொட்டு ஒரு உணவின் சுவையைக் கேட்க வேண்டும்.

ஆட்டம் இப்படி தொடரும். ஆட்ட முடிவில் பலரும் இனிப்பு சுவையே கேட்டிருப்பார்கள். ஆக, அனைவரும் விரும்பும் சுவை இனிப்பு எனக் கூற வேண்டும்.

பாடத்தில் இடம் பெற்ற பசு, மலர், பலா, பாகு, தென்னை ஆகிய படங்களைக் காட்டி, அவை எதனைத் தருகின்றன் அதன் சுவை என்ன என்பதைக் கேட்டறிய வேண்டும். அதன்பின், தமிழ் சுவைக்கு பல எளிய பாடல்களை ராகத்துடன் பாடிக் காட்டி ஆடி பாடச் செய்ய வேண்டும். இப்படி கற்பித்தல் தொடரும்… விசயத்துக்கு வருவோம்.

மதிப்பீடு என்பது மாணவர்களுக்குத் தெரியாமலே செய்ய வேண்டும். அம்மதிப்பீட்டின் உதவியுடன் அவனுக்கு எத்திறன் மதிப்பிடப்படுகிறதோ, அத்திறனை வளர்தெடுக்கச் சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்.

பிற நாடுகளில் இருப்பது போன்று தொகுத்தறிவு தேர்வு திறந்தப் புத்தகத் தேர்வாக ஏன் இருக்கக் கூடாது? ஆசிரியர்களுக்கு முறையானப் பயிற்சி அளிப்பதன் மூலம் திறந்தப் புத்தகத் தேர்வினைச் சாத்தியபடுத்த முடியும்.

திறந்த புத்தகத் தேர்வில் குழந்தைகளிடம் எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டும் என்ற திறனை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். நேரடியாக புத்தகத்தகப் பார்த்து எழுதுதல் என்பது பார்த்து எழுதும் திறனையே ஊக்குவிக்கும்.

உயர்சிந்தனையை சோதிப்பது போன்ற கேள்விகளை கேட்டு புத்தக உதவியுடன் எழிதச் செய்தல் மாணவனின் புரிதலை சோதிக்க உதவும்.

உ.ம். சாலை விதிகள. பாடத்திற்கு , உன் வீட்டுப் பகுதியில் எந்த இடத்தில் விபத்து அடிக்கடி நிகழ்கிறது. அதற்கு காரணம் என்ன என நினைக்கிறேன்? விபத்தைத் தடுக்க உனது ஆலோசனை என்ன? அது குறித்து போக்குவரத்து காவல்துறைக்கு கடிதம் அனுப்பு.

மதிப்பீடு வாழ்வியல் திறனுடன் அவனது நுண்அறிவைச் சோதிப்பதாக இருந்தால் நல்லது. சமூக மாற்றத்திற்கு, சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக குழந்தைகளை உருவாக்க இயலும். இதனைப் புதிதாக அமைக்கப்பட்ட தமிழக கல்விக் குழு பரீசிலிக்க வேண்டும்.

தொடர்ந்து கல்வி சார்ந்து பேசுவோம். தமிழக கல்விக் கொள்கைக்கு உதவுவோம்.

க.சரவணன்,
மதுரை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *