புஷ்பா திரைப்படத்தை முன்வைத்து, திரைப்படத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுனின் எழுச்சியும் ஆட்சியும்-5

Share Button

Allu Arjun : Pushpa The Rise

புஷ்பா திரைப்படத்தை முன்வைத்து, திரைப்படத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுனின் எழுச்சியும் ஆட்சியும்-5

அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், நடிக்கும் இணை கதாபாத்திரங்களுக்கென படத்தில் தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

திரைப்படத்தில் மட்டுமல்ல; திரைப்பட விழா மேடைகளிலும் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அழைத்து அவரைப் பற்றி பேசி, இல்லையெனில் அவரிடமே பேசி அந்த இடத்தைக் கலகலப்பாக்கி விடுவார். பொருத்தமாகவும், தேவையானவற்றையும் பற்றி மட்டுமே கச்சிதமாகப் பேசுவார்.

ஒவ்வொரு திரைப்பட, இசை வெளியீட்டு விழாவிலும், வெற்றி விழாவிலும், கதாநாயகியை மட்டுமல்ல, இயக்குனரை மட்டுமல்ல, இசையமைப்பாளரை மட்டுமல்ல, உடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்களையும் அழைத்து அவர்கள் குறித்த ஒரு உயர்வான விஷயத்தை சொல்லிப் பாராட்டுவார்.

அதே சமயம் அதிகமாகவும் பேச மாட்டார். தான் இயக்குனருக்கான நடிகன் என்பதை ஒவ்வொரு மேடையிலும் வெளிப்படையாக சொல்லி இயக்குனர்களைப் பாராட்டுவதுண்டு. தான் நடித்த படங்களின் ஒவ்வொரு கதாநாயகியையும் இயல்பாகப் பாராட்டிப் பேசுவார்.

என் உயிருக்கு உயிரான ரசிகப் பெருமக்களே என்று ஆரம்பித்து, இது ஒரு ஸ்பெஷலான நாள் என்று சொல்லி பேச்சைத் தொடர்வார். ஒரு காணொளியில் புஷ்பா படம் யார் பார்வை வழியாக கதை சொல்வதாகக் காட்டப்படுகிறதோ, அந்த கேசவனை அருகில் பிரியமாக அழைத்து என் நண்பன் என்று பேசுவார்.

துணை கதாபாத்திரங்கள் அனைவரும், இவரைப் பற்றிப் பேசும்போது ஒருவித மனநெகிழ்வுடன் பிரியத்துடன் நட்புடன் மரியாதையுடன் பேசுவது அவ்வளவு இனிமையாக இருக்கும். தான் மட்டும் பேசாமல், அனைவரையும் பேச அனுமதிப்பார்.

மேடைகளில் ஒரு தொகுப்பாளினி மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்குவார். அந்தப் பெண்ணின் பெயர் தெரியவில்லை. ஆனால், அவர் மேடையில் வந்தாலே கலகலப்பாக உயிர்ப்புடன் நிகழ்வைத் தொகுத்து வழங்குவார்.

அல்லு அர்ஜுன் மகன் அல்லு அயான், மகள் அல்லு அர்ஹா இருவரும் புஷ்பா விழா மேடையில் வரும்போது, கேமராக்கள் அனைத்தும் அவர்களை நோக்கித் திரும்ப அந்தத் தொகுப்பாளர் மிகச் சிறப்பாக குழந்தைகளுடன் பேசி, அவர்களைப் பேச வைத்து, புகைப்படங்கள் எடுத்த பிறகு, மேடையிலிருந்து கீழே அல்லு அர்ஜுனும் மனைவி அல்லு ஸ்னேகா ரெட்டியும் இருக்கும் இருக்கைக்கு அவர்களைச் சேர்க்கும் வரையிலும், சோர்வோ, அலுப்போ, எரிச்சலோ ஏற்படுத்தாமல், இயல்பாக கலகலப்பாக அதை ரன்னிங் கமெண்ட்டரி போல நிகழ்த்தினார்.

புஷ்பா திரைப்பட கதாநாயகி, ராஷ்மிகாவை இவங்க இந்தியா முழுக்க க்ரஷ்மிகா ஆகிட்டாங்க, சிறப்பாக நடிச்சாங்க என்று சொன்னவர்,’ஊ சொல்றியா’ பாடல் சர்ச்சை குறித்த கேள்விகள் கேட்கப்பட்ட போது, இது இசை அமைப்பாளர் பதில் சொல்ல வேண்டிய கேள்வி, அவர் பதில் சொல்வார் என்று மைக்கை தேவி ஸ்ரீ பிரசாத்திடம் கொடுப்பார்.

சமயோஜிதமாகப் பேசுவார். தமிழில் தான் டப்பிங் பேசவில்லை என்பதையும் டப்பிங் பேசியவர் தன்னை விட மிகவும் நன்றாக பேசி இருக்கிறார் என்பதையும் மனதார பாராட்டி சொல்வார்.
தெலுங்கில் எந்த பிராந்திய மொழியில் பேசினாரோ, அந்த இடத்தில் நடந்த விழாவில், நம்ம மொழியில் தான் படம் முழுக்க பேசி இருக்கிறேன்; தவறில்லாமல் பேசினேனா என்று கேட்டு, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசுவதைப் போல பார்வையாளர்களை ஈர்ப்பார்.

புஷ்பா விழாவில், நேர்காணல்களில் எல்லாம், இயக்குனர் சுகுமாரை டார்லிங் என்று அழைத்தும், ஆர்யா படத்தைப்போலவே, இந்தப் பட வெற்றிக்கும் சுகுமாரின் அர்ப்பணிப்பு உணர்வே காரணம் என்பதை பலவிதமாக சொல்லி இருப்பார்.

இப்படி தான் நடித்த படத்தின் இயக்குனரை, இசையமைப்பாளரை எந்த ஈகோவும் இல்லாமல் மகிழ்ந்து மனதார கொண்டாடும் பண்பு தனித்துவமானது.

இன்னொரு கதாபாத்திரத்தை மேடைக்கு வருமாறு அழைத்து, ’வா வா என் அருகில் இருந்து போட்டோ எடுத்துக்கோ; இனி இன்று முதல் நீ பிரபலம்’ என்று சொல்லி விட்டு, ’கல்யாணம் செய்யணும் என்று சொன்னாயே, இனி உனக்கு பிரகாசமான எதிர்காலம், உனக்கு விரைவில் பெண் கொடுப்பாங்க’ என்று சொல்வார். அவரவர்க்கு உண்டான மரியாதை செய்தல் என்பதை அப்படி ஒரு நிமிடத்தில் அனைவரின் முன்பும் செய்து காட்டி விடுவார்.

அப்பாவின் மீதான அன்பும், மரியாதையும் அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் மேடைகள், நேர்காணல்களில் வெளிப்படும். அப்பா இருக்கும்போது ஒரு மேடையில், அவர் அருகில் அவர் முன்னிலையில் அவரைப் பற்றிப் பேசும்போது, நெகிழ்ந்து போய் கன்களில் நீர் வர, லேசாக துடைத்துக்கொண்டு, திரும்பி கண்களைத் துடைத்துக்கொள்வார்.

நாம் அவருடைய முதுகைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, அவர் பேசுவது மட்டும் கேட்கும். ’அப்பா இருக்கும் போது பேசுகையில், இரண்டாவது முறையும் இப்படி ஆகிடுச்சு. எல்லோரும் என்ன நினைப்பாங்க; சரி சரி கொஞ்சம் நேரம் குடுங்க.

கண்ணில் லென்ஸ் சரிசெய்யறேன்’ என்றபடி மீண்டும் பார்வையாளரை நோக்கித் திரும்பிப் பேசுவார். இவரைத் தவிர எந்தவொரு திரைப்பட ஆளுமையாலும் இப்படி இயல்பாக வெளிப்படையாக பேசவே முடியாது.

அல்லு அர்ஜுனுக்கு நடிப்பு, நடனம் என்பது எவ்வளவு விருப்பமோ அது போல
பியானோ வாசிக்க இவருக்கு மிகவும் பிடிக்கும். இந்தத் துறைக்கு வரவில்லையென்றால் பியானோ கற்றுக்கொடுப்பவராகவும், மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொடுப்பவராகவும் இருந்திருப்பார்.

நேரடி மலையாளப்படத்தில் நடிக்க வேண்டுமென்பதும், தமிழில் ஹிட் படம் தர வேண்டுமென்பதும் இவரின் விருப்பம்.

மலையாள நேர்காணல் காணொளியில் தமிழில் தான் பேசினார். மலையாளத்தில் பிடித்த நடிகர் மோகன்லால், ஆலியா பட் பிடித்த நடிகை என்று சொல்லி இருந்தார். பிடித்த உணவு வகைகள் என்று இயல்பாக பகிர்ந்து கொண்டார்.

பேட்டி எடுத்தவர் ஒரு பெண்மணி. அதிகமாகப் பேசியதும், அவர் அமைதியாக இருக்க, இப்படி தான் இருப்பீங்களா என்று வேறு கேட்டுவிட்டார். அப்போது அமைதியாக மிகவும் பொறுமையாக அல்லு அர்ஜுன், ‘பேட்டி எடுக்கும்போது இப்படி தானே இருக்கணும்’ என்றதைக் கேட்டு சிரித்தது வேறு விஷயம்.

ஒவ்வொரு படமாக விரிவாக எழுதினால், இருபது கட்டுரைகள் எழுத வேண்டி இருக்கும் என்பதாலும், (ஒவ்வொரு படத்துக்கும் தனிக்கட்டுரை எழுதவே விருப்பம். ஆனால், வாசிப்பவர்களுக்கு அயற்சி ஏற்படுத்தி விடக்கூடாது என்பதனால் ஒவ்வொரு கட்டுரையையும் சுருக்கமாகவும் எழுதுகிறேன்…)

இந்தக் கட்டுரையை இதோடு முடிக்க வேண்டும் என்பதாலும் இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லி முடித்து விடலாம்.

இப்போது 1. படம் சொல்லும் கதை, கருத்து, 2. துணைக் கதா பாத்திரங்களுக்கும் வருவோம். விரிவாக இல்லாமல் சுருக்கமாக இருபது படங்கள் குறித்தும் பார்க்கலாம்.

1.கங்கோத்ரி – 2003 இல் கதாநாயகனாக நடித்த முதல் படம். தாய், தந்தை பாசம், காதலுக்கான போராட்டம். ஒன்றை செய்ய நினைத்தால் அதில் உறுதியுடன் இருத்தல். இதில் வரும் துணை கதாபாத்திரங்கள் இவரின் இன்னும் இரண்டு, மூன்று படங்களிலும் வருகிறார்கள்.

2. ஆர்யா – 2004 இல் வெளிவந்த இந்தப் படத்தின் கதையை ஒட்டிதான், தமிழில் தனுஷ் ஸ்ரேயா நடித்த ‘குட்டி’ படம் எடுக்கப்பட்டது. காதலுக்காக மட்டுமல்ல. அன்புக்காக என்ன வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம் என்பதாக நடித்திருப்பார்.

3. Bunny – 2005 பிரகாஷ் ராஜ் இதில் வில்லனாக வருகிறார். தந்தை மீதான பாசம். வேறு பெற்றோரின் வளர்ப்பில் வளர்வார். தந்தைக்காக அத்தை சீதாவின் உதவியுடன் அந்த வீட்டுக்குள்ளேயே வரும் கதை.

4. ஹாப்பி – 2006 தமிழில் வெளிவந்த, ‘அழகிய தீயே’ படம் கதையை ஒட்டிய காட்சிகள் அமைந்த படம். அன்புக்காக பொய் சொல்வதும், வேறு வேறு உத்திகளைக் கண்டுபிடித்து மற்றவரைக் காப்பாற்றுவதும் இவர் ஏற்ற கதாபாத்திரம் செய்யும் விஷயங்கள். பிரம்மானந்தம், போலீஸ், நண்பர்கள், என துணை கதாபாத்திரங்கள் கதையை எடுத்துச் செல்ல பொருத்தமாக உதவுவார்கள்.

5. தேசமுதுரு – 2007 ஹன்ஸிகா – மீடியா, அரசியல் சார்ந்த படம். அல்லு அர்ஜுன் யாரையாவது காப்பாற்றுகிறேன் என்று சிக்கலில் மாட்டிக்கொள்வார். தமிழர்கள் வில்லன் கும்பல்களாகக் காட்டப்பட்ட படம்.

மா டிவி மீடியாவைச் சேர்ந்த அல்லு அர்ஜுன் ஒரு கொலைகாரக்கும்பல் விஷயத்தில் தேடப்படுகிறவராகிறார். அதிலிருந்து தப்பிக்க குலுமணாலிக்குப் போக, அங்கே சந்நியாசினியாக ஹன்ஸிகாவை சந்தித்து, முதல் பார்வையிலேயே விரும்பி கடைசியில் பல போராட்டங்களுக்குப் பிறகு, மீடியா உதவியுடனேயே என்னென்ன யுக்திகளுடன் தப்பிக்கிறார் என்பது கதை.

சந்நியாசிகளின் தலைவியாக ரமாபிரபா, கோவை சரளா அந்தக் கூட்டத்தில் ஒருவராகவும் வருவார்கள். தியாகம் செய்து அனைவரையும் காப்பாற்றுவதே கதாநாயக கதாபாத்திரம்.

6. பருகு – 2008 பிரகாஷ் ராஜ் – இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளின் திருமண நாளில் காதலை சேர்த்துவைக்க உதவிய அல்லு அர்ஜுன், பிடிபட்டு இருக்கும் போது, இரண்டாவது மகளைக் காதலித்து, தந்தையான பிரகாஷ் ராஜின் வருத்தத்தைப் பார்த்து, பெற்றோர் சம்மதம் இல்லாமல் அவர்களை வருத்தப்படச் செய்து வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பதைக் காட்டியிருப்பார். கதாநாயகி, அவளின் தோழி, அடியாட்கள், அல்லு அர்ஜுனின் அம்மா, அவரின் நண்பர்கள் அனைவருமே கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி நடித்திருப்பார்கள். கதையின் ஒவ்வொரு திருப்பமும் சுவையாக இருக்கும்.

7. ஆர்யா 2 – 2009 ஆர்யா ஒன்றின் மற்றொரு தொடர்ச்சி இந்தப் படம். காஜல் கதாநாயகி. பிரம்மாநந்தம் வரும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பு. இளைஞர்கள் ரசிப்பார்களாக இருக்கும்.

8. வருடு – 2010 சுஹாசினி அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்த படம். திருமண நாளில் தான் மனைவியைப் பார்ப்பேன் என்று, அந்தக் காலத்திலேயே காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெற்றோரிடம், அவர்களையே மணமகளைப் பார்த்து நிச்சயம் செய்யச் சொல்லும் கதாபாத்திரம். திருமண நாளில் காணாமல் போகும் மணமகளை எப்படியும் மீட்டு வருவாரா மாட்டாரா என்பதே கதை. இதில் வரும் துணை கதாபாத்திரங்கள் மற்ற படங்களிலும் வருகிறார்கள்.

9. வேதம் – 2010 தமிழில், ‘வானம்’ என்னும் பெயரில் சிலம்பரசன் நடித்து வெளி வந்த படம். ஒரு மருத்துவமனையில் ஒரு நாளில் நடக்கும் நிகழ்வு. அந்த மருத்துவமனைக்கு என்னென்ன காரணங்களால் எங்கெங்கிருந்தோ வந்து சேர்ந்தவர்களின் கதை.

எல்லா இஸ்லாமியர்களையும் எப்போதும் தீவிரவாதிகளாகப் பார்க்கத் தேவையில்லை, தீவிரவாதிகளை மட்டும் தடுக்க வேண்டும் என்பதை சிறப்பாகக் காட்டி இருப்பார்கள்

10. பத்ரிநாத் – 2011 அல்லி அர்ஜுன் அனைத்து சண்டைப் பயிற்சிகளும் கற்று பத்ரிநாத் ஊருக்கும் கோயிலுக்கும் காவல் வீரனாக இருக்கும் கதாபாத்திரம். குருவாக பிரகாஷ்ராஜ்.

தாய் தந்தையை இழந்த கதாநாயகி தமன்னா தாத்தாவுடன் பத்ரிநாத் வரும்போது, அல்லு அர்ஜுனைக் காதலித்து, காதல் நிறைவேற அபூர்வ மலைரைப் பறித்து வணங்கி கோயிலில் வைத்து, பூட்டப்படும் கோயில் ஆறுமாதம் கழித்து திறக்கப்படும்போது வர வேண்டும் என்று இருக்க, குரு பிரகாஷ் ராஜ் பத்ரிநாத் கோயிலைக் காக்க அல்லு அர்ஜுன் திருமணம் செய்யக்கூடாது என்று வணங்குகின்றனர்.

தாத்தாவை தவிக்க விட்டுப் போன அத்தையின் மகனை தமன்னா திருமணம் செய்ய வேண்டும் அப்போதுதான் சொத்து தங்களுக்குக் கிடைக்கும் என்று, அத்தை, மாமா, மகன் மூவரும் வில்லன்களாக ஏகப்பட்ட பேருடன் மூன்று முறை பத்ரியைக் கொல்ல வந்தும், எப்படி அவரும் தமன்னாவும் வில்லன்களை அழித்து இணைகிறார்கள் என்பது கதை.

11. ஜூலை – 2012 வேகம், அன்பு. இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கிய படம். அல்லு அர்ஜுனின் விவேகம், புத்திசாலித்தனம் அனைத்தும் போலீசை மிஞ்சும் வண்ணம் இருக்கும்.

வங்கிக்கொள்ளை, அதைத் தொடர்ந்து செல்லும் கதை, அந்தப் பணத்தை தேடிக்கண்டுபிடித்து, குடும்பத்தைக் காப்பாற்றி காதலியுடன் இணையும் கதை.

12. இத்தரு அம்மாயிலதோ – 2013 அமலா பால், கேத்ரின் தெரஸா இரு கதாநாயகிகள், பிரம்மானந்தம் இன்னும் சில கதாபாத்திரங்கள் சுவாரஸ்யமாக வருவார்கள். அரசியல்வாதி, கடத்தல், கொலை, கொடுமை செய்தவர்களை பழிவாங்குதலே கதை.

கேத்ரினுக்கு அப்பாவாக வருபவர் புஷ்பா படத்திலும் அரசியல்வாதியாக வருவார். இசை, நடனம், சண்டை, அரசியல் இதற்கு நடுவில் கதையை நகர்த்தி இருக்கிறார்கள்.

13. ரேஸ் குர்ரம் – 2014 ஸ்ருதிஹாஸன் கதாநாயகி. இவருடைய அப்பா பிரகாஷ் ராஜ். அல்லு அர்ஜுனும் அவரின் அண்ணனும் சிறு வயதிலிருந்தே எப்போதும் போட்டியிடுபவர்களாக இருப்பார்கள். சகோதரர்கள் இப்படி இருக்கிறார்களே என்று அம்மாவுக்கு இதில் அவ்வளவு வருத்தம். அண்ணன் போலீஸாக இருக்கிறான்.

அண்ணனை மாட்டி விட நினைக்கும்போது, அண்ணனைக் கொல்ல வருபவர்களிடம் மாட்டிக்கொண்ட தம்பி அல்லு அர்ஜுன், தன் அண்ணன் மீதான தனது அன்பை கண்டுகொள்வதும், அண்ணனையும் குடும்பத்தையும் காப்பாற்ற, அரசியல்வாதிகளுடன் எப்படி சண்டையிடுகிறார் என்பதும் கதை.

பிரம்மானந்தமும், அரசியல்வாதி கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருப்பார்கள். அல்லு அர்ஜுன் பிரம்மானந்தத்தை நடிக்க விட்டு மாட்டி விட்டு ரசிக்கும் காட்சி தமிழ் படத்தில் வடிவேலு, விவேக் நடித்த படங்களை நினைவு படுத்தும்.

14. S /O சத்தியமூர்த்தி – 2015 அன்பும் சத்தியமும் தவறாத சத்தியமூர்த்தியாக நடிக்கும் பிரகாஷ் ராஜ், மகனாக வரும் அல்லு அர்ஜுன், எப்படி அப்பாவின் வாக்கைக் காப்பாற்றுகிறார், குடும்பத்தை பழைய நிலைக்குக் கொண்டுவர ஏற்கும் சிரமங்கள் என்ன என்பதே கதை. சமந்தா கதாநாயகி, நித்யா மேனன் தங்கையாக, சிநேகா வில்லனின் மனைவியாக வரும் கதாபாத்திரம். இதயத்தால் அன்புடன் இயங்கி பொய்மையை, தீமையை வெல்வதே கதை.

15. ருத்ரமகா தேவி – 2015 அனுஷ்காவும் ராணாவும் இருக்கும் படத்தில், கோன கன்னா ரெட்டியாக (Gona Ganna Reddy) அல்லு அர்ஜுன் இதில் துணை கதாபாத்திரமாக வந்தாலும், சிறந்த நடிப்பைக் கொடுத்திருப்பார். எங்கும் தைரியமும் வீரமும் வெல்லும்.

16. சர்ரைநொடு Sarrainodu – 2016 இந்த ஒரு படம் மட்டும் முழுவதுமாகப் பார்க்கவில்லை. இராணுவ அதிகாரி. எம் எல் ஏவை அந்தப் பெண் பார்க்கும் காட்சி சிறப்பு. சாட்சிகள் சரியாக இல்லாமல் கோர்ட்டில் அவமானப் பட்டதால் தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு நீதி கிடைக்கிறதா? ஆதி வில்லனாக வந்து சண்டையில் மிரட்டுகிறார். ராகுல் ப்ரீத்தி சிங், கேத்ரின் தெரஸா இருவரும் நடித்திருக்கிறார்கள்.

17. டிஜெ DJ – 2017 பூஜா ஹெக்டே கதாநாயகி. அலா வைகுந்தபுரமுலோ பத்திலும் இவரே கதாநாயகி. அல்லு அர்ஜுன் திருமணத்துக்கு சமையல் செய்யும் தொழில் செய்து கொண்டு, முரளி சர்மாவுடன் இணைந்து எங்கெல்லாம் அநியாயங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் போய் அவர்களை அழித்துவிடுவதே கதை.

18. நா பேரு சூர்யா – 2018 என் பெயர் சூர்யா என்று தமிழில் வெளிவந்த படம். ஏற்கனவே முந்தைய கட்டுரையில் எழுதியாச்சு.

19.அலா வைகுந்தபுரம்லோ – 2020 ஏற்கனவே முந்தைய கட்டுரையில் எழுதியாச்சு.

20. புஷ்பா (The Rise) – 2021 ஏற்கனவே முதல் கட்டுரையில் எழுதியாச்சு.
பாடல், நடனம், சண்டை, இசை, ஒளிப்பதிவு, இயக்கம், கதாபாத்திரங்கள் சித்தரிப்பு என ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக எழுதலாம். ஆனாலும் போதும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

21. புஷ்பா (The Rule) – 2023 இனி வரவிருக்கும் படம். என்ன கதை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நெகடிவ் கதாபாத்திரம் இளைஞர்கள் சிறுவர்களிடையே தவறான பழக்கங்களை ஏற்படுத்தி விடக்கூடாதே என்னும் பதட்டமும் பரிதவிப்பும் இருக்கிறது. எப்படியும் கதையை சரியாக முடித்திருப்பார்கள் என்னும் நம்பிக்கையில் காத்திருப்போம்.

வெற்றியும் புகழும் சேர, சிறப்பாக இந்தப் படம் வெளி வரும் என்னும் பாராட்டுடன் இந்தக் கட்டுரை முடிகிறது.

வென்று வா மகனே! ஆசிகளும் வாழ்த்துகளும்!

அன்புடன்,

மதுமிதா
21.04.2022

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *