இலக்கை நோக்கி வெற்றி பயணம்! ஞாபக சக்தி – பகுதி 2

Share Button

மனிதனுக்கு மிக முக்கியமான தேவைகள் ஆயிரம் இருந்தாலும், ஞாபக சக்தி மட்டும் அதிகமாக இருந்தால் எல்லாவற்றையும் ஜெயிக்கலாம், என்பது மறுக்க முடியாத உண்மை. அனுபவித்த, கற்றறிந்த விசயங்களைத் தேவைப்படும்போது மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் ஒரு செயலாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.

நினைவாற்றல் என்றால் என்ன? ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பது மட்டுமல்ல, மூளையில் பதியப்பெற்று இருக்கின்ற தகவல்களில் இருந்து சரியான விவரத்தைத் தேவைப்படும் நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார்கள் விஞ்ஞானிகள்! பள்ளிப் படிப்பு முடியும் முன்னரே மதிப்பெண்கள் முன்னாடி வந்து நிற்கும். 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் தொழில் ரீதியான படிப்போ அல்லது நமக்குப் பிடித்த படிப்போ கிடைக்கும். பட்டப் படிப்பிலும் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அதன் பிறகுதான் வேலை.

எங்கு வேலைக்குச் சென்றாலும் என்ன படிப்பு என்றுதான் கேட்பார்கள். அடுத்தது மதிப்பெண்களின் சதவீதம் கேட்பார்கள். அதன் பிறகே நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள். நேர்முகத் தேர்வில் நம்முடைய நினைவுத்திறன், அறிவுத்திறன், பேச்சுத் திறமை மற்றும் அறிவுத்திறன் எல்லாம் நம்மோடு கலந்துரையாடி, அறிந்த பின்னர்தான் வேலை தருவார்கள்.

பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும். ஆனால், தேவையான நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பார்கள். தேவைப்படும் நேரத்தில் தேவையான செய்தி உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியாது போதலே ஞாபக மறதி. ஞாபமறதி இருந்தால், தமக்குக் கீழ் இருப்பவர்கள் மற்றும் மேல் இருப்பவர்கள் எனப் பலரிடம் மன்னிப்பு கோர வேண்டிய சூழ்நிலை வரலாம். இது தங்களுக்கும் வராமல் இருப்பதற்கு ஞாபக சக்தி மிக முக்கியமானது, என்பதே இந்தத் தருணத்தில் முக்கியப் பதிவு.உங்களிடம் ஒரு செய்தியைச் சொல்லி, இந்தச் செய்தியை நினைவு வைத்திருங்கள், இது முக்கியமானது, இதனால் சில கோடிகள் உங்களுக்குக் கிடைக்கும், என்று சொன்னால் அது நிச்சயம் கடைசி வரைக்கும் மறக்காது.

இது உண்மை தானே, ஏனென்றால் எந்த ஒரு செய்தியும், அதன் பிரதிபலன் மட்டுமே அதன் முக்கியத்துவமாக அமைந்து மறக்க முடியாமல் செய்துவிடுகிறது. ஒரு ரூபாய் என்றால், அதன் முக்கியத்துவம் சாதாரணமாக இருக்கும். அதே நூறு ரூபாய் என்றால் சற்று அதிகமாக இருக்கும் அதே ஆயிரம் ரூபாய் என்றால் இன்னும் கொஞ்சம் சற்று அதிகமாக இருக்கும் இதே ஒரு லட்சம் ரூபாய் என்றால் மிகமிக முக்கியத்துவம் பெற்றுவிடும்.

காரணம் நாம் எந்தச் செயல் செய்தாலும் அதைப் பணமாக மாற்றிப் பார்ப்பதுதான், மனித இயல்பாக இருக்கிறது. வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களைக் கேட்டால் தெரியும், அவர்கள் அங்கு இருக்கும் பணத்தை இந்தியாவின் பணத்தின் மதிப்பிற்கு மாற்றி, இந்தப் பொருள் வாங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். எனவே எந்த ஒரு செய்தியையும் லட்சம் ரூபாய் மதிப்பாக மனதில் பதிய வையுங்கள். சிறிய வயதில் வகுப்புகளில் பயிற்சியாகக் கொடுப்பார்கள்.

ஒரு பெரிய மேஜையில் நிறையப் பொருட்களை வரிசையாக அடுக்கி வைத்து விடுவார்கள். அதை ஒரு நிமிஷம் கூர்ந்து கவனித்து விட்டு, அடுத்த அறைக்கு வந்து, என்ன பொருட்கள் இருந்தன, எவ்வளவு இருந்தன என்று எழுத சொல்லி, நினைவு சக்தியை வளர்ப்பதற்கான பயிற்சியும் கொடுத்தார்கள். இப்போது நடக்கிறதா என்று தெரியவில்லை. அது போன்று வீட்டிலேயே பயிற்சி செய்தால், இன்னும் ஞாபக சக்தி அதிகமாக வளரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

உதாரணமாகத் தமிழ் எண்களை நினைவு வைத்துக் கொள்வது எப்படி? தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி நினைவில் வைக்க ஒரு சூத்திரம் : ஒரு கன்னத்தில் இரண்டு உம்மா மூன்று சங்கும் நான்கு சலங்கையும் ஐந்து ருபாய் ஆறில் சும்மா நீந்தாதே ஏழு எப்படியோ எட்டும் அப்படியே ஒன்பதும் கூறாதே. இது போல, நீங்கள் வாகனத்தில் செல்லும் போது, எதிரே செல்லும் வாகனத்தின் பதிவு எண்ணை மனதில் பதியுங்கள். முதலில் சில மணி நேரங்கள் கழித்து நினைவுகூற முயற்சி செய்யுங்கள். சில நாட்கள் கழித்து, ஒரு சில நாட்கள் கழித்து நினைவுகூற முயற்சி செய்யுங்கள்.

சில மாதங்கள் கழித்து, ஒரு சில வாரங்கள் கழித்து, நினைவுகூற முயற்சி செய்யுங்கள். இது ஒரு பயிற்சி மட்டுமே. இதனால் நிறைய விஷயங்கள் நமக்குக் கை கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. பயிற்சி செய்துவிட்டுப் பெற்ற பலனை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்முடைய சிந்தனை, நினைவுகள், நாம் நினைத்துச் செயல்படக் கூடிய அனைத்திற்கும் மூளையே காரணமாக இருந்து செயல்படுகிறது. மனித மூளையின் செயல்களில் தாக்கங்களைச் செய்யும் காரணங்களை நாம் இனங்கண்டு கொண்டால், ஞாபக மறதி மற்றும் சிந்திக்கும் திறன் குன்றிய நிலை, சோம்பேறித்தனம் என்பனவற்றை நிவர்த்திச் செய்து கொள்ளலாம்.

இவற்றின் முக்கியக் காரணங்களாகக் கருதப்படுபவை தகுந்த ஆரோக்கியமின்மை, மூளைநரம்புகளில் ஏற்படும் சிதைவு, உற்சாகமின்மை, உடற்பயிற்சியின்மை என்பனவாகும். இவற்றிற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு ஏற்ற மாற்று முறைகளைச் செய்வதன் மூலம் ஞாபக சக்தியையும், சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும். இவற்றுடன் ஆர்வமின்மை, முயற்சியின்மை, தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணம், பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும் மனபாதிப்புகள், மன ஒருமையின்மை, கவனக்குறைவு, தப்பிக்கும் மனோபாவம் (நுளஉயிந), கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல் புகை, மது, போதைப் பழக்கங்கள், உடல்நலக் குறைபாடுகள், உடல் நோய்கள் போன்றவை மனிதனின் சிந்திக்கும் திறனை அதிகம் பாதிக்கின்றன.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியக் காரணம் கவலைகளே. இரத்த ஓட்டம் குறையும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் ஏனைய முக்கியக் காரணங்களாகும். மூளை சோர்ந்து விடாமல் கவனித்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும். பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் வருவதற்கு முன்பே யோசித்துக் கொண்டிருக்காமல், அந்தந்த நேரத்திற்கு அதற்கு உரிய தீர்வைக் கண்டு சரி செய்து, எதற்கும் கவலைப்படாமல் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

01. குறுகிய கால நினைவாற்றல்

மூளையில் அத்தனை தகவல்களும் தொடர்ந்து சேமித்து வைக்கப்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்தத் தகவல்கள் மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்தத் தகவல்கள் மறக்கப்பட்டுவிடுகின்றன. இது குறுகிய கால நினைவாற்றல் எனப்படும்.

02. நீண்ட கால நினைவாற்றல்
நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை, அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை, நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நமது மூளையில் நீண்ட கால நினைவுகளாகப் பதிந்து விடுகின்றன. நமது மூளை பல செய்திகளையும், தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது. அவற்றுடன் புதிய தகவல்களையும் சேர்த்துப் பாதுகாக்கிறது. பல ஆண்டுகளாக அந்தத் தகவல்கள் வெளிக் கொணரப்படாமல் போனால், சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன.

நீண்ட கால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலவேளை சிரமப்படுவது அதனாலேயாகும். நீண்ட காலத்தின் பின்னர் நாம் சந்திக்கும் நபரின் அல்லது சிறுவயது நண்பரின் பெயர் ஞாபகத்துக்கு வராமல் இருப்பதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
முதல் முதலாக இரண்டு சக்கர வாகனம் ஓட்டியது அனைவருக்கும் கண்டிப்பாக நினைவிருக்கும். எங்கே எடுத்தீர்கள்? எங்கே கியர் மாற்றினீர்கள்? எங்கே பிரேக் பிடித்தீர்கள்? எங்கே திரும்பினீர்கள், எங்கே ஹாரன் அடித்தீர்கள்? போன்ற விஷயங்கள் நன்றாக நினைவிருக்கும். ஏனென்றால் இது முதன்முறையாக என்ற ஒரு சரித்திர நிகழ்வு என்பதாகும். அதனால் நிச்சயமாக இது நினைவிருக்கும்.

ஆனால் அதற்குப் பின் பல முறை நீங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டி இருப்பீர்கள். ஆனால் எடுத்தது தான் தெரியும், போய்ச் சேர்ந்த இடம் வந்துவிடும். எதுவுமே நினைவில் இருக்காது.
முதலில் சொன்னது நீண்ட கால நினைவாற்றல், அது முதல் முறையாக என்பதாலும், அது வரலாற்றுப் பதிவு என்பதாலும் அது முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாவது, அடிக்கடி நிகழ்வது என்பதால் முக்கியத்துவம் குறைந்து, அது குறுகிய கால நினைவாக மூளையில் பதிவாகிறது.

இதற்கு உடற்பயிற்சியும் சில உணவு பழக்க வழக்கங்களும் ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் தன்னிச்சையாகத் தலையைச் சொறிந்து கொண்டு நிற்பதும், ஆசிரியர் அதற்குத் தண்டனையாகத் தோப்புக் கரணம் போட செய்வதும் மறதிக்குச் செய்யப் பெறும் சில சிகிச்சைகள். தலையச் சொறியும் போது மூளை நரம்புகள் உயிர்த்து எழுகின்றன. அதே போல் தோப்புக் கரணம் போடும் போது மைய நரம்பு தொகுதி உயிர்ப்படைந்து மூளையைத் தூண்டுகின்றது.

மனதை ஒரு நிலைப்படுத்துதல் : யோகாசனம், தியானம், சமய வழிபாடுகளில் ஈடுபடல் போன்றவை மூலமாக ஆரோக்கியமான மூளைகளில் தகவல்களைப் பதிவு, செய்வதன் மூலம் சிறந்த நினைவாற்றலை பெற முடியும்.

உடற்பயிற்சி : காலை அல்லது மாலை ஒரு வேளையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பேட்மிட்டன் அல்லது டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம் மூளைக்கு பயிற்சி வழங்குதல் : செஸ் விளையாட்டு, குறுக்கெழுத்து போட்டி, எண் புதிர், அயல் மொழிகளைக் கற்றல் போன்றன சில உதாரணங்களாகும். ஆரோக்கியமான உணவு : குறிப்பாக அரிசி உணவை குறைத்துக் கொண்டு காய்கறி வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும். செயற்கை உணவு வகைகளை விட்டுவிட்டு பழ வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உறக்கமும் ஓய்வும் : குறைந்தது 8 முதல் 9 மணி நேரமாவது தூங்க வேண்டும். தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வு நேரத்தில் பிடித்தமான இசை மற்றும் பாடல்களைக் கேட்க வேண்டும். சூழ்நிலை அனுமதிக்கும் எனில் பணி செய்யும் போதும் கேட்கலாம். வெளிநாடுகளில் அலுவலகங்களில் மெல்லிய இசை மனதை வருடும். அது புத்துணர்ச்சியாக வைப்பதுடன் வேலை விரைந்து செய்யவும் உதவுகிறது.
முதிர் வயதிலும் ஏதாவது பணிகளை செய்தல் : வயதாக நினைவாற்றல் குறைவடையும், பணியில் ஈடுபட்டிருப்பவர் ஓய்வு பெற்ற பின் விரைவில் நோய்களுக்கு ஆளாவது இயற்கை, தொடர்ந்து ஏதாவதொரு பணியில் ஈடுபட்டிருந்தால் மூளைக்கு வேலை கிடைக்கும். நினைவாற்றலோடு ஆரோக்கியமும் மேன்மை அடையும்.

குடிநீர் : உடம்புக்கு தேவையான அளவு நீர் அருந்துதல் வேண்டும். அதையும் துளசி இலையைத் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடிப்பது ஞாபக சக்தியை அதிகரிக்கும். உணவு வகைகள் : வல்லாரைக்கீரை. இது காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக எடுத்துக் கொண்டாலும் ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத விஞ்ஞானமாக இருக்கிறது. ஆனால் வல்லாரைக்கீரை சற்று கசப்பாக இருப்பதால், அதை உணவுப் பொருளாகச் சமைத்தும் சாப்பிடலாம்.

தூதுவளை கீரையைக் குழம்பு மற்றும் பொரியல் செய்து வாரத்துக்கு ஒரு தடவை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு வலிமை கிடைக்கும். பசுமையான வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து குடித்துவந்தால் ஞாபக மறதி நீங்கி, நினைவாற்றல் அதிகரிக்கும். கேரட், வெண்டைக்காய், முட்டை, வால்நட்ஸ், பாதாம், மீன், பசலைக்கீரை போன்ற உணவுப் பொருட்கள் கண்களுக்கு மட்டுமல்லாமல் நமது நினைவாற்றலை அதிகப்படுத்தவும் மூளைக்கு, புத்துணர்ச்சி கொடுக்கவும் பெரிதும் உதவுகின்றன.

பாசவலை என்ற திரைப்படத்தில் கமலஹாசன் படித்திருக்க மாட்டார். ஆனால் அதிக ஞாபகசக்தியுடன் இருப்பார். இயக்குனர் கே.விஸ்வநாத் தன்னுடைய நிறுவனத்தில் நடந்த கணக்கு விபரங்களைத் தன்னுடைய கணக்காளரிடம் கேட்பார். அவருக்குத் தெரியாது. கணக்கு நோட்டை பார்த்து சொல்லனும் என்று சொல்லி, அலுவலகம் சென்று விடுவார். இயக்குனர் கே.விஸ்வநாத் உடனே கமலஹாசன் வீட்டுக்கு வந்து, நடந்த கணக்கு விபரங்களைக் கேட்க, அவர் உடனே சொல்வார்.

அது அவருக்குப் பெருமையைத் தருமாறு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். நிஜத்திலும் அப்படியே அங்கீகாரம் நிச்சயம். எந்த ஒரு மனிதனுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கிறதோ, அது அவருக்குப் பணமாக ஈட்டித் தரும் என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ள ஒரு உண்மை. ஊட்டச்சத்தான உணவு உடம்பு உயர்வு உண்மை என இரண்டாம் பகுதி நிறைவு பெறுகிறது.

 

 

 

 

 

கமலக்கண்ணன், எழுத்தாளர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *