2021 ஆம் ஆண்டின் கடைசி நாள் இன்று – ஒரு சோகத்தில் நின்றுகொண்டு இதை எழுதுகிறேன்

Share Button

ஈரோடு :-

2021 ஆம் ஆண்டின் கடைசி நாள் இன்று – ஒரு சோகத்தில் நின்றுகொண்டு இதை எழுதுகிறேன்.

திரும்பிப் பார்க்கிறேன்…

எனது வாழ்க்கைப் பயணத்தில் இந்நாள் வரை லட்சக்கணக்கான மைல்க்கல்லை கடந்திருப்பேன்.

இந்திய அளவிலும், உலக நாடுகள் பலவற்றிலும் எனது தமிழ் வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்தப் பயணங்களில் நான் சந்தித்த மனிதர்களிடம் மேற்கொண்ட (ஆன்மீகச் சான்றோர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், ஆளும் தரப்பினர், தமிழ்ச் சான்றோர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமயத்தலைவர்கள் பிரதமர்கள், குடியரசுத்தலைவர், வெளிநாட்டுத் தலைவர்கள் போன்ற இன்னும் பலர்) மக்கள் பிரச்னைகள் அனைத்தும் பயனுள்ளதாக நிறைவேற்றியுள்ளேனா என்ற கேள்விக்கு, ஆம்! இல்லை! என்ற இரண்டு பதிலையும் சமமாகவே கருதுகிறேன்.

இந்திய அளவில் நான் சந்திக்காத, பழகாத தலைவர்கள் (வடக்கில் ஆச்சாரிய கிருபளானியிலிருந்து தெற்கில் காமராசர், ஜெயலலிதா வரை) குறைவாகத் தான் இருக்கும்.

அதே போன்று தான் நண்பர்கள், உறவினர்கள் வட்டமும். அத்தனையையும் ஒருசேர்ந்து நினைந்து பார்த்தால் இவர்கள் அனைவரும் குறுகிய மனப்பான்மைக்குள் அடங்கி விடுவதாகத் தான் (விதிவிலக்காக சிலரும் உண்டு) நினைக்கிறேன்.

என்னிடம் உள்ள ஏதாவதொரு வலிமையை பெற்றுக் கொண்டவர்கள் தான் அதிகம்! யாரிடமும் எந்தக்காலத்திலும் எதையும் நான் வேண்டிப் பெற்றதில்லை.

இதை என் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டவன் எனக்கென பலமும் உண்டு;பலகீனமும் உண்டு.

எனது பலம் என்னவென்பதை என்னைப் பயன்படுத்தி பலன் கண்டவர்களுக்குத் தான் என்னை விட அதிகம் தெரியும்.

பலகீனம் என்று சொல்வது, வெகுளித்தனமாக எல்லோரையும் நம்பி விடுவது தான்.

உண்மையானவர்கள் யார், யார் என இன்றுவரை என்னால் கணிக்க இயலவில்லை.
இவர் எனது உண்மையான நண்பர் (True Friend) என்று யாராலும் மற்றொருவரை சுட்டிக்காட்ட முடியாது என்பதை அறிவேன்.

இதிகாச காலம் முதல் இன்றைய கணனி காலத்திலும் இதுவே மெய்யாகும்.

வாழ்க்கை என்பது இன்றைய காலத்தில் போகிற போக்கில் கடப்பது என்ற பயணத்தின் கரடுமுறடு தான்.

இதில் மகிழ்ச்சி எங்கு துவங்குகிறது, துன்பங்கள் ஏன் வந்து சேருகிறது என்பதை யாரும் அறியார்.

எனது பொதுவாழ்விலும் வருத்தங்கள் அணைத்துக் கொண்ட அளவிற்கு மகிழ்ச்சி இருந்திருக்காது என்பதை முழுமையாக அறிந்திருந்தும், நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் நான் இழந்து விடவில்லை.

அந்த,” பழுதறப் பணி செய்வது” என்ற கோட்பாடு தான் என்னை உயர்த்தியும் இருக்கிறது என்பதனை நன்கறிவேன்.

அதனால் எனது எண்ணங்களை என்றும் உயர்வானதாகவே வைத்திருக்கிறேன். ஒருபோதும் அதை இழந்து விடக் கூடாது என்ற மனவலிமையை பெற்றுள்ளேன்!

பள்ளி மாணவன் காலத்திலிருந்தே ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பேன். அந்தப் பயிற்சியின் விளைவு இன்று என்னையும் ஒரு எழுத்தாளனாக உயர்த்தியிருக்கிறது.

அதேபோன்றுதான் சமூக சேவையிலும் தடுமாற்றமின்றி எனது பயணம் தொடருகிறது…

இன்றையப் பொது வாழ்க்கை, எழுத்துப் பயணத்தில் எனக்குக் கிடைத்த மாமருந்து, பொக்கிசம்
அனைத்தும் எனது நண்பர்களாகிய நீங்கள் தாம்.

இறைவன் எனக்குக் கொடுத்துள்ள இந்த வாழ்வும், மகிழ்ச்சியும் இன்னும் எத்தனை காலம் என்பது தெரியாது.

” நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் தன்மையுடயது இவ்வுலகம் ” என்ற வள்ளுவப் பெருமானின் தத்துவத்தை நன்கு உணர்ந்தவன்.

எனவே, இறைவன் கொடுத்திருக்கின்ற காலம் வரை இந்த மனித சமுதாயத்திற்கு தன்னலமற்றுப் பணியாற்றிட நம்பிக்கையுடன் 2022 ஆம் ஆண்டில் எனது அடியை நாளை எடுத்து வைக்க உள்ளேன்.

” ஒரு சோகத்தில் நின்றுகொண்டு எழுதுகிறேன் என்று சொன்னேனே , அது என்ன என்பது நாளை
உங்களுக்குத் தெரிய வரலாம் …”

உங்கள் அன்பு நண்பன்,

அரங்க சுப்ரமணியம்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *