சாதகங்களை தவறவிடுபவர்கள் சாதாரணமானவர்கள், பாதகங்களைச் சாதகங்களாக மாற்றுபவர்கள் சாதனையாளர்கள்!

Share Button

ஒரு நாள் விவசாயி இருட்டில் காட்டுப் பாதையைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவர் இருட்டில் காட்டுப் பாதையைக் கடக்க பயந்து நின்றபோது காட்டிலிருந்த ஞானி ஒருவர், விவசாயிக்கு பாதையில் நடக்க உதவிக்கு ஒரு விளக்கைக் கொடுத்தார்.

இங்கிருந்து பக்கத்துக் கிராமம் செல்ல எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று கேட்டான் விவசாயி. பத்து கிலோ மீட்டர் தூரம் என்று பதில் சொன்னார் ஞானி.

பத்து கிலோ மீட்டர் போக வேண்டும் என்றால், இந்த விளக்கு பத்தடிக்குக்கூட பாதையைக் காட்டாதே என்று புலம்பினான் விவசாயி. புறப்பட்டுப்போ எல்லாம் புரியும் என்றார் ஞானி.

முதல் பத்தடி தாண்டிய பிறகு அதே விளக்கு அடுத்த பத்தடிக்கும் வெளிச்சம் தந்தது. இப்படியே அடுத்தடுத்து பத்து கிலோ மீட்டர் தூரத்துகும் அந்த விளக்கு வெளிச்சத்தைத் தந்தது. அதைப் போலவே மிகப் பெரிய பயணம் கூட ஒரு சிறு அடியில் தான் தொடங்குகிறது. மிகப் பெரிய பிரச்சனைகளுக்கும் கூட தீர்வு மிச் சிறியதாக இருக்கும். பிரச்சனை என்ற கருப்பைக்குள் தீர்வு என்னும் குழந்தை இருக்கிறது.

இந்த உண்மையைக் கண்டுகொள்ளும் சாமர்த்தியம்தான் வெற்றி பெறும் மனிதர்களின் சூட்சமம்.
திட்டமிடல், விடா முயற்சி, கடின உழைப்பு, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகிய இந்த படிகளில் ஏறித்தான் சாதனையாளர்கள் உச்சத்தைத் தொட்டு உள்ளார்கள். தன்னம்பிக்கையும், துணிச்சலும் இரட்டைப் பிறவிகள். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் தான் துணிச்சல் இருக்கும்.

துணிச்சல் இருக்கும் இடத்தில் தான் தன்னம்பிக்கை இருக்கும், தனித்திறன் மிளிரும். இறக்கை இருந்தால் மட்டு போதாது. பறக்க வேண்டும் என்ற சிரத்தை இருந்தால்தான் பறக்க முடியும். இப்படியே ஒவ்வொரு செயலுக்கும் சிரத்தையுடன் கூடிய முயற்சி தேவை.

செய்ய வேண்டும் என்ற உறுதியும் சிரத்தையும் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும், தனது தனித்திறனை வெளிக்காட்ட முடியும்.

சாதகங்களை தவறவிடுபவர்கள் சாதாரணமானவர்கள். பாதகங்களைச் சாதகங்களாக மாற்றி வரலாற்றில் தன் பெயரைப் பதிப்பவர்கள் சாதனையாளர்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதனைக்கான கதவு தானாகவே திறக்கும்.

‘வழிகாட்டல்’ என்பது சில நேரங்களில் தேவைப்படும். ஆனால் அது கையில் இருக்கும் ‘டார்ச்லைட்’ போன்றது. கடும் இருளில் நடந்து செல்லும் போது அதைக் கையில் வைத்திருந்தால் அதன் ஒளி நமக்கு வழி காட்டும். இருள் மறைந்து சூரிய ஒளி வந்ததும் இந்த ‘டார்ச்லைட்’ க்கு வேலை இல்லை.

நாம் அதன் உதவியின்றி நடந்து செல்லலாம். பிறருடைய வழிகாட்டல் தேவைப்படாது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் போகவில்லை. மேற்கே நிலப்பரப்பு ஒன்று உண்டு என்ற நம்பிக்கையும் அதைக் கண்டறிய வேண்டும் என்ற உந்துதலும்தான் இந்த முயற்சிக்கு அவரைத் தூண்டியது. வழி காட்டலும் அவருக்கு ஓரளவிற்கு துணை புரிந்தது.

பல முயற்சிகளுக்குப் பின்பு அந்நாட்டு அரசர் கொடுத்த கப்பலில் பதினைந்து மாலுமிகளோடு மேற்கு நோக்கி கடற்பயணம் தொடங்கினார். துணிச்சலான இந்த முயற்சியால் காற்றும், கடும் மழையும், புயலும் பல அபாயங்களும் இவருக்குப் பல ஆபத்துக்களைத் தந்தன. பதினைந்து பேருக்குமான முப்பது நாட்களுக்குரிய உணவும் குடிநீரும் மட்டுமே கப்பலில் இருந்தன. இதில் முதல் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. எந்த நிலப்பரப்பும் தெரியவில்லை. நாடு திரும்ப வேண்டுமென்றால் மீண்டும் பதினைந்து நாட்கள் ஆகும்.

குடிநீரும், உணவும் திரும்பும் பதினைந்து நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
உடன் வந்த பதினைந்து மாலுமிகளும் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் இழந்தனர். பயணத்தைப் பாதியில் நிறுதி விட்டு நாடு திரும்ப வேண்டுமென்று வற்புறுத்தினர். கொலம்பஸ் அவர்களோடு வாதிட்டுப் பார்த்தார். உடன் வந்தோர் உயிரோடு ஊர் திரும்புவதே முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தனர்.

கொலம்பஸ் துணிச்சலோடு ஒரு முடிவுக்கு வந்தார். எனக்காக மேலும் ஒரு நாள் பயணத்தைத் தொடர்வோம். எந்த நிலப்பரப்பும் தெரியாவிட்டால் என்னை மட்டு கடலில் தூக்கி எறிந்து விட்டு, நீங்கள் பதினைந்து பேரும் ஊர் திரும்பிவிடுங்கள். உங்களுக்குரிய பதினான்கு நாட்களுக்கான உணவும், குடிநீரும் இருப்பில் இருக்கும் என வேண்டினார். உடன் வந்தோர் இதற்கு ஒப்புக் கொண்டனர்.

மறுநாள் காலை விடிந்த போது நிலப்பரப்பு தெரிந்தது. பின்புதான் அது அமெரிக்கா நாடு எனக் கண்டறிந்தார். அபாயத்தை எதிர் கொள்ளும் வெறியும், தன்னம்பிக்கையும் இல்லாமல் இருந்திருந்தால் கொலம்பஸ் உலக வரலாற்றில் இடம் பெற்றிருக்க இடமில்லை.

துணிவையே துணையாய் ஆக்கி தன்னம்பிக்கையுடன் எந்த செயலை தொடங்கினாலும் வெற்றிக்கு அது படிக்கட்டாய் அமையும். வானமும் வசப்படும். வாழ்வும் வளப்படும்.

 

 

 

 

 

த.வ.சிவசுப்பிரமணியன்
‘கல்வி உலகம்’

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *