வாத்தியார்? – ஆசிரியர் பகவான் எழுதும் புதிய கல்வித்தொடர்!

Share Button
மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் தெய்வத்திற்கும் முன்னிலையில் போற்றத்தகுந்த இடத்தில் ஆசிரியரின் தரம் இருக்கிறது. அத்தகைய போற்றுதலுக்கும், பொறுப்பிற்கும் உரித்தான ஆசிரியரின் நிலை இச்சமூகத்தில் சக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.
சமூக வளர்ச்சிக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் வழிகோலுவது மட்டுமல்லாமல் நல்வழிப்படுத்தும் பெரும் பணியும் ஆசிரியக் குலத்துக்குரியது. “உன் நண்பனைப் பற்றிச் சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன்” எனும் கூற்றுக்கிணங்க “உன் ஆசிரியரைப் பற்றிச் சொல் உன்னைப் பற்றி நான் சொல்கிறேன்” எனும் கூற்றும் சாலப்பொருந்தும்.
குடும்பத்தில் குழந்தையாய் பரிணமிக்கும் அதே ஜீவன் பள்ளியில் மாணவராய் பரிணமிக்கிறது. பெற்றோரைப் பார்த்து வளரும் குழந்தை ஆசிரியரிடம் கற்று வளர்கிறது. ஒரு குழந்தை தனக்கான கற்றலைச் சூழலின் பலத்தரப்பட்ட வகைமைகளில் கற்றுக்கொள்கிறது. (சுயமாகவும், சார்ந்தும் கற்றல் நிகழ்த்த குழந்தையால் நிகழும்).
கற்பித்தல் நிகழ்த்த ஆசிரியர்க்குக் குழந்தை அவசியம். அதற்கான பொதுவெளியாகத்தான் கல்விக்கூடங்கள் திகழ்கின்றன. கல்விக்கூடங்களின் அத்தியவசியம் குழந்தைகளின் கற்றலும், ஆசிரியரின் கற்பித்தலும் இந்தக் கற்றல் கற்பித்தல் செயல்பாடு கல்வியைச் சார்ந்திருக்க வேண்டியது அவசியம்தான் ஆனால் கல்வியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்பது புரிதலற்ற நோக்காகும்.
கல்வியை மட்டுமே போதிப்பதில் ஆசிரியரின் கடமையும், கல்வியை மட்டுமே கற்பதில் மாணவர்களின் கவனமும் இருக்குமெனில் கல்வியின் பொதுப்பண்பு அர்த்தம் பெறாது. “கல்வி” என்பதன் பொருள் கூறச்சொன்னால் “கல் விரும்பி” என்பேன். கல்வி என்பது திணிப்பின் பேரில் நிகழ்வதல்ல மாறாக விருப்பத்தின் பேரில் புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டி, பாடம் நடத்தி, மனப்பாடம் செய்வித்து, மதிப்பெண்களைக் “கேம் ஸ்கோர்” மாதிரி சேகரிப்பதில் இல்லை கற்றலும், கற்பித்தலும்.
நடத்தி முடித்த புத்தகப் பாடப்பகுதியின் மூலம் குழந்தை அறிந்துகொண்ட வாழ்வியல் கோட்பாடு என்ன? வாழ்க்கைக்கு அது எவ்வாறு துணைபுரிகிறது? குழந்தையின் வளர்ச்சிக்குக் கற்ற பாடம் வழிகோலுகிறதா? என்றெல்லாம் ஆராய்ந்து கற்பிப்பதில் உள்ளது கற்பித்தலின் அசல் வடிவம். அதைத் தவிர்த்து மனப்பாட முறைமைகளிலும், மதிப்பெண் முறைமைகளிலும் மாய போதை நிலைக்கு உட்படுத்துவது கல்வி நோக்கமன்று. சமீபத்திய வணிகக் கல்வி முறையில்தான் இதுபோன்ற அவலநிலை.
குணம், நடத்தை, மனப்பான்மை, ஒழுக்கம் போன்ற வாழ்வியல் விழுமியங்களை / பண்புகளைத் தாண்டியும் சாதாரண மதிப்பெண் பட்டியல் குழந்தை மற்றும் பெற்றோர் மனதில் ஓங்கியிருக்கிறது. “மதிப்பெண்கள் வெறும் எண்களே மதிப்பீடுகள் அல்ல மதிப்பெண்கள் குவித்தோர் சமூக விரோதிகளாகத் திகழ்ந்ததுமுண்டு. மதிப்பெண்கள் குவிக்காதோர் சமூகநலவாதியாகத் திகழ்ந்ததுமுண்டு”.
கற்றல் சமயங்களில் ஒன்றல்ல. அது குடும்பம், சமூகம், வாழ்வாதாரம், ஒப்பார் குழு பொறுத்து மாறுபடும். மாற்றம் பெறும். பெரும்பாலான கற்பித்தல் பாணி அனைத்துக் குழுந்தைகளுக்கும் ஒருவாறாகவே நிகழ்ந்தாலும் உள்வாங்கும் குழந்தைகளின் கற்றல் வேறுபடும். வாழ்வியல் சார்ந்து கற்கும் குழந்தை மதிப்பெண்களில் கவனம் பெறாமல் போகலாம். மதிப்பெண்கள் சார்ந்து கற்கும் குழந்தை வாழ்வியலில் கவனம் பெறாமல் போகலாம். இரண்டிலும் கவனம் பெற்று அல்லது இரண்டிலும் கவனம் பெறாத குழந்தைகளும் உள்ளன.
 
கற்றலின் பொதுவான நோக்கம் முதன்மையான நோக்கம் வாழ்வியலுக்கானது அதன் பின்னரே மதிப்பெண்களுக்கானது என்ற புரிதல் எப்போது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எழுகிறதோ அன்றுதான் இந்தச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என்கிற நம்பிக்கை துளிர்க்கும்.
இந்தச் சமூகம் நல்வழியில் பயணம் போகிறது என்றாலோ, வழித்தவறி போகிறது என்றாலோ அதற்கு ஆசிரியர்கள், கல்வி அமைப்புக்கள், கல்வி முறைகள், கல்வித்திட்டங்கள் என ஒரு சுழல் சக்கரமே பொறுப்பாகும்.
நல்வழிப்படுத்தாத, சமூக மாற்றத்தை ஏற்படுத்தாத கல்வி முறைகளால், ஆசிரியர்களால், மாணவர்களால், கற்றலால், கற்பித்தலால் பயனென்ன பெரிதாய் இருந்துவிடப் போகிறது. வகுப்பறைக்குள்ளே கற்பிக்கும் ஆசிரியர் சமூகத்தின் பார்வையில், சமூகப் பங்களிப்பில் மாணவர்கள் பங்கேற்க வேண்டுமென்பதைப் பெரும்பாலான வகுப்பறைகள் ஏன் கற்பிப்பதில்லை? நாற்பத்தைந்து நிமிடப் பாடவேளையில் பாடத்திட்டம் நடத்தி முடிப்பதா? வாழ்வியலைப் போதிப்பதா? என்கிற உள்ளக்குமுறல்களை நன்கறிவேன்.
வெறுமனே பாடத்திட்டங்களை நடத்தி முடித்தோ முடிக்காமலோ “அடித்தது மணி முடிந்தது பணி” என்கிற குறைந்தபட்ச ஆசிரியர்களின் மனப்பாங்கு மாறவேண்டும். பிரச்சனைகளை அடையாளம் காணவோ பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவோ மாணவர்களால் முடியாதெனில் வகுப்பறையே முழுப்பொறுப்பாகும். கற்றலிலோ, கற்பித்தலிலோ சமூகப் பார்வையும் ஒன்றிணைய வேண்டும்.
வகுப்பறைகளில் பகிர வாய்ப்பில்லாததையும், பகிரத் தவறவிட்ட பலவற்றையும் பொதுவான மாணவர்களுக்கு இப்பொதுவான வெளியில் எவ்வித இதர நோக்கமின்றி வாரந்தோறும் பகிர விரும்பியுள்ளேன். வகுப்பறையில் கற்ற கல்வி வாழ்க்கையில் பிரதியிட பரவலான மாணவர்களுக்கு ‘வாத்தியார்’ என்கிற தலைப்பில் ‘புதுவரவின்’ மூலம் பகிர்கிறேன் நன்றி.
கோவிந்த் பகவான், ஆசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி,
வெளியகரம், திருவள்ளூர் மாவட்டம்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *