அறம் : ஊக்கமது கைவிடேல் : Episode-4
கருப்பு என்றாலும் களையான கிராமப்புறப் பெண்ணின் முகம் போன்ற வானம். மல்லாந்து தன்மீதே ஒற்றை வைரங்களைத் தூவி அழகு பார்ப்பவளைப் போன்று கரும்பட்டுப் பின்னணியில் நட்சத்திர ஜொலிப்பு. ஏதோ ஒரு நாவலில் படித்த நியாபகம். என்றாவது நாம் இரவை, வானத்தை இப்படி இரசித்திருப்போமா? முதல் மூன்று தொகுதிகளில் மூன்று வெவ்வேறு கதைகளைப் பார்த்த நாம், இப்போது சற்று மெதுவாக ஊக்கத்தின் ஊடகச் செல்லலாம்.
ஊக்கத்தின் அடிப்படைக் கூறுகளை நாம் பின்வருமாறு புரிந்துகொள்ளலாம். இடப்புறம் இருக்கும் அனைத்து குணங்களும் ஊக்கத்தின் ஊடே பயணிக்கும் போது அதுவே, சமதரிசனமாகவும், தன் திறனறியவும், தலைமைப் பண்பாகவும் பரிணாம வளர்ச்சி பெறுகிறது.
”நோக்கும்இடம்எங்கும்
நாமன்றிவேறில்லை
நோக்கநோக்கக்களியாட்டம்”
என்ற வரிகளைத் தமதாக்கிக் கொண்டாலே இது சாத்தியம். மானம், அவமானம், உண்மை, உழைப்பு மற்றும் இன்னபிற விடயங்கள் நமக்கு எப்படியோ, பிறர்க்கும் அப்படியே எனப் புரிதல் இங்கு மிக அவசியம். பலவருடங்களுக்கு முன், என் குரு சொன்ன ஒருகதையிலிருந்து துவங்குவோம். ஒரு அரசன் மிகவும் கொடும்கோலனாக இருந்தான். அரசி இதைச் சகியாதவளாய், மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு நாட்டில் கலகத்தை உருவாக்குகிறாள்.
இதைப் புரிந்துகொண்ட அரசன், அரசியிடம் “உனக்கும், உன் நாட்டு மக்களுக்கும் விடுதலை தர சித்தமாயிருக்கிறேன், ஆனால் அதற்கு நீ ஒரு செயல் புரியவேண்டும் எனக் கேட்கிறான். அரசி யாதென வினவ, ”நீ ஆடைகளைத் துறந்து பகலில் நம் நகரத்தை வலம் வரவேண்டும்” என ஒரு நிபந்தனையை விதிக்கிறான். நாட்டு மக்களின் நலனுக்காக, அரசியும் ஆடைகளற்று நகரை வலம் வருகிறாள், நாட்டு மக்கள் அனைவரும் அவர்களின் இமைகளை ஆடைகளாகத் தருகிறார்கள் என முடிகிறது அந்தக் கதை.
இந்த தனிமனித அறமே அனைத்திற்கும் மிகமிக அவசியம். பிறர்க்குதானே என்று, தமக்கு நேராதவரை அதில் சுகம் காணும் வக்கிர மனதைக் கிள்ளி எரிந்து, தனிமனித அறத்தை நமக்குள்ளும், சமூகத்துக்குள்ளும் விதைக்கும் ஊக்கத்தைப் பெறுவோமாக.
இன்னும் தொடரும்…
நா. சௌரிராஜன், M.B.A., M.Sc., B.Com., D.P.C.S., I.R.P.M
(Founder Of PuraAbhiNavam Trust)
Leave a Reply