தடம் மாறிய தங்கப் பதக்கம், நிறைவேற்றிய தடகளம்

Share Button

1900 இல் இருந்து இதுவரை இந்தியா 9 தங்கப்பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு, தற்போது தான், ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் தடகளத்தில் நூறாண்டு கனவை நிறைவேற்றியிருக்கிறார் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா.

130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்திய நாட்டில் ஒலிம்பிக்கில் ஒரு தங்க பதக்கம் பெறக் கூடத், தடுமாற வேண்டிய சூழல் தான் தற்போதும் நிலவுகிறது. டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு 127 பேர் கொண்ட மிகப் பெரிய அணியை இந்தியா நம்பிக்கையுடன் அனுப்பியது. தங்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள், தோல்வியைத் தழுவிய போது, தங்கம் இம்முறை கிடைப்பதும் அரிதான விசயமாக மாறிப்போய் விட்டது. இந்தியா ஒலிம்பிக்கில் அதிகப் பதக்கங்கள் பெற வேண்டும் என்பதற்காக, டாப்ஸ் (Target Olympic Podium Scheme) என்கிற பெயரில் மத்திய விளையாட்டு அமைச்சகம் முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, நிதியையும் ஒதுக்கி, பல முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு வெளிநாட்டுப் பயிற்சி மையங்களிலும் வெளிநாட்டுப் பயிற்சியாளர்களிடமும் பயிற்சியும் அளித்தது. ஆனாலும், சாய்கோம் மீராபாய் சானுவின் வெள்ளிப் பதக்கம், பி.வி. சிந்துவின் வெண்கலப் பதக்கம் போன்ற வெகு சிலரைத் தவிர, மற்ற முன்னணி வீரர்கள் பலரும் பதக்கம் வெல்லத் தவறினார்கள்.

இந்த மாபெரும் ஏமாற்றத்திற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. கிரிக்கெட்டில் இந்தியா மற்ற நாடுகளின் அணிகளோடு விளையாடி, வெற்றி பெறும் போது தேசமே கொண்டாடுவதும், தெருவெங்கும் ரசிகர்கள் வெடி வெடித்துக் குதூகலப்படுவதும், தோற்கும் போது தேசத்தின் தோல்வியாகக் கருதி சோர்வடைவதையும் கண் முன்னே பார்க்கிறோம். ஆண்டு முழுவதும் கிரிக்கெட் மட்டுமே பெரும்பான்மை இந்திய ரசிகர்களின் மனங்களை ஆக்கிரமித்திருக்கின்றது.

ஆனால் ஒலிம்பிக்கில் இந்தியா 50 ஆம் இடத்திற்கும் கீழே இருக்கும் போது கூட அது போன்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு, தூங்கிக் கிடந்து விட்டு, திடீரென்று விழித்து, ஒலிம்பிக்கில் ஏன் அதிகப் பதக்கம் வெல்ல முடியவில்லை என்கிற கேள்வியை கேட்டால், அது நியாயமான கேள்விதானா?
இளம் தலைமுறையினர் விளையாட ஆர்வம் காட்டினாலும், எத்தனை பெற்றோர் ஊக்கப்படுத்துகிறார்கள்? படிப்பைத் தவிர எதிலும் கவனம் செலுத்த அனுமதிப்பதில்லை. பள்ளிகளும் மதிப்பெண் பெறுவதில் மட்டும் அக்கறை காட்டுகின்றன. பள்ளிகளில் பெயருக்கு ஒரு பி.டி. வகுப்பு. அந்த வகுப்பையும் தேர்வு மற்றும் திருப்புதலுக்காக மற்ற பாட ஆசிரியர்கள் எடுத்துக்கொள்வார்கள். பிறகு எப்படி மாணவர்களுக்கு விளையாடுவதில் ஆர்வம் வரும்? ஒலிம்பிக்கில் தங்கம் தான் எப்படிக் கிடைக்கும்?.

இந்தியாவில் வளரும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டோடு வளர்கின்றன. ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்று வெல்ல வேண்டுமானால் உடல் தகுதி என்பது மிகவும் அவசியம். அதற்கு ஊட்டச் சத்து மிக்க உணவினை அரசு வழங்க வேண்டும். பதக்கம் வெல்ல வீரர்களை உடல் தகுதி மிக்கவர்களாகத் தயார்படுத்த வேண்டியது அவசியம். தேவையான ஆடுகள வசதிகளைச் செய்து தர வேண்டும். இது போன்ற வசதிகளை அரசு செய்து தந்து வீரர்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.

ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் பெறும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. சிறிய வளரும் நாடுகள் கூட உலகத் தரமான பயிற்சியை தங்கள் வீரர்களுக்கு வழங்குவதன் மூலம் அதிக பதக்கங்களைப் பெறுகின்றன. ஆனால், இந்தியாவில், விளையாட்டு அமைப்புகளில் அரசியல், பயிற்சியாளர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இடையில் சரியான புரிதலின்மை மற்றும் இணைந்து செயல்படாமை போன்ற காரணங்களால் வீரர்கள் பதக்கத்தைத் தவற விடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தியாவில் விளையாட்டு அமைப்புகளும், பயிற்சியாளர்களும், திறமையான விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்களோ, இல்லையோ, நிறைய பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகள், மனரீதியாக விளையாட்டு வீரர்களை பாதிக்கின்றன.

இந்தியாவில் தற்போது விளையாட்டை ஊக்குவிப்பதற்கான செயல்திட்டமும் நடைமுறைகளும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் போன்ற வீரர்கள், பல போராட்டங்களைத் தாண்டி, வறுமையுடன் போராடிக்கொண்டே ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருப்பது வீரர்களுக்கு மிகவும் உற்சாகம் ஊட்டக் கூடியது. மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு, பெரும் பரிசுத் தொகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன.

பொருளாதார வளர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெறுவதும், வளர்ச்சியில் ஓர் அங்கம் தான் என்பதை அரசும், மக்களும் உணர்ந்து அடுத்த ஒலிம்பிக்கில் அதிகம் தங்கம் வாங்கிட வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுவோம்.
முயலுவோம். (பதக்கப்பட்டியலில்) முன்னேறுவோம்.

  • முனைவர். சுடர்க்கொடி கண்ணன்
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.