சும்மா என்ற சொல் சும்மாவா?
தமிழில் சும்மா என்கிற சொல் சும்மா சும்மா எல்லோரும் பயன்படுத்துகிறோம். இதற்கென்று பிரத்தியேக இடம், பொருள் இல்லையா என்னும்படி பல பொருள் படும்படியாக இந்த சும்மா பயன்படுகிறது. அமைதி, செயலற்ற நிலை, வீண், இலவசம், பொய், சதா காலம், எப்போதும், தற்செயலாக, மீண்டும் மீண்டும், எதுவுமின்றி, களைப்பாறுதல், விளையாட்டிற்காக, வினையேதுமின்றி எனப் பல பொருள் தருகிறது. “சும்மாது” என்ற சொல்லிலிருந்து சும்மா என்று உருவாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலக்கையினால் குத்தும்போது ‘‘சும்சும்” என்று மூச்சு விடுவார்கள். அப்போது “சும்மேலோ சும்முலக்காய்” என்று பாடுவதாக பரணி நூல்களில் வருகிறது. ‘‘சும்முதல்” என்பதை மூச்சு விடுதல் என்று பொருள் கொண்டு, மூச்சு விடாமல் இருப்பதைச் சும்மாது இருத்தல் என்று கொள்ள வேண்டும். பின்னால் இது சும்மா, பேச்சற்று, செயலற்று என்ற பொருள்கள் வந்திருக்க வேண்டும் என கி.வ.ஜெகந்நாதன் கூறியுள்ளார்.
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து தூங்காமல் தூங்கிச் சுகம் பெறும் நிலையை சும்மாயிருத்தல் என்கிறாரா திருமூலர்.
மனக்கட்டு நிலையை மொழிகிறது, பொறிகளின் மீது நாட்டம் இன்றி இறைநிலை ஒன்றையே குறியாகக் கொண்டவர்கள், உலக வாழ்க்கையில் பற்றற்று பரகதிப் பேரு எய்துவர்.
சேட்டைகள் செய்யும் குழந்தைகளை ஆற்றுப்படுத்துவதற்கு “சிவனேன்னு இரு” என்கிற கூற்று இன்னும் பல ஊர்களில் புழக்கத்தில் உள்ளது.
“எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமோ!” –
திருமந்திரம்-2635, சிற்றின்பத்தின்பால் ஈர்ப்புக் கொண்டு சலனத்தால் சிக்கித் தவித்த மானுடற்கான மறுமலர்ச்சி மார்க்கமாக சும்மாயிரு என ஆறுமுகக் கடவுள் அருள் உபதேசம் செய்ததாக திருப்புகழ் வரலாறு பகர்கிறது.
“சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே”
கந்தரனுபூதி அருணகிரி நாதர் அரிய மந்திரங்களை அருளிய அகப்பேய்ச்சித்தர் அதை பயன்படுத்தாமல் விட்டுவிடாதீர்கள் என்று ஆர்வத்தோடும் உரிமையோடும் உலகோரை வேண்டும் படியாக அமைந்திருப்பது காணத்தக்கது.
‘‘சும்மா இருந்துவிடாய்… அகப்பேய் சூத்திரஞ் சொன்னேனே”-
காளமேகத்தின் கவிதை வீச்சு, கனல் பொங்கும் பேச்சு, தன்னம்பிக்கையின் தருவாக உயர்ந்து சொற்களில் தெறிக்கிறது உணர்ச்சி பிழம்பாய்.
“சும்மா இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாமாயின் பெருங்காள மேகம் பிளாய்!” –
காளமேகப் புலவர் சாமானிய மனிதர்களால் செய்து முடிக்க முடியாத செயற்கு அரிய செயல்களையும் செய்து காட்டிவிடலாம், ஆனால் சும்மா இருத்தல் மிகப்பெரிது என்று யோக நெறியின் தத்துவங்களில் நின்று சும்மா இருத்தலை அளவிடுகிறார் தாயுமானவர்.
“சிந்தையை அடக்கியே சும்மாயிருக்கின்ற திறம் அரிது”
தாயுமானவர் சிவயோக சித்தியாக ‘சும்மாயிருத்தல்’ இன்றைக்கு வருமா, அல்லது நாளைக்கு வருமா, என்றைக்கு வருமோ! அறியாமல் இருக்கின்றேன் என்று மனக்கண்ணால் எண்ணி மகிழ்ந்து காத்திருக்கிறார் வடலூர் வள்ளர் பெருமான்.
“துன்றுமல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம்” –
இராமலிங்க அடிகள் உடல், பொருள், ஆவி என பல தியாகங்களை நிகழ்த்தி சுதந்திர தாகத்தை தணித்த நமது இந்திய தேசத்தில், விடுதைலைக் காற்றுக்கான வேள்வித் தீயை மூட்டி வினையாற்ற உத்வேகமளித்த உணர்ச்சிக் கவிஞர் நாமக்கல் திரு வே. இராமலிங்கம் பிள்ளை.
“சும்மா கிடைக்குமோ சுதந்தர சுகமது–மனமே!” – நாமக்கல் கவிஞர் பல தவ யோகிகளும், தத்துவ ஞானிகளும் சும்மா இருக்கும் நிலையை வெளிப்படுத்த சும்மா என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கின்றனர். பிற்காலத்தில் இடையூறு இல்லமால் இருக்கவும், செயலற்று அமைதி நிலையை வலியுறுத்தவும், குறிக்கோள் இன்றி ஆற்றப்படும் வினையை சுட்டிக்காட்டவும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது என்பதை யாவரும் அறியலாம்.