5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஏன் வைக்க கூடாது? நமது கற்பித்தல் முறையை மேம்படுத்த வேண்டும். கற்றலை சந்தோசமானதாக்க வேண்டும். தேர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும். இது சாத்தியமா?

Share Button

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” ”ஐந்தாம் , எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஏன் வைக்க கூடாது?” “அன்று பெயில் ஆகி பெயில் ஆகி படித்தவர்கள் பலரும் நல்ல வேலையில் உள்ளனர்.” “எதையுமே கற்றுக் கொள்ளாமல் வெறுமனே ’பாஸ்’ ’பாஸ்’ என்று எட்டாம் வகுப்பு வரை அப்படியே தூக்கி விடுவதால் என்ன பயன்?” “ஒன்பதாம் வகுப்பில் எழுதப்படிக்க தெரியாதவன் பலரும் இருக்கின்றான்.

அவனை வைத்து என்ன செய்வது?” “ ‘எழுத்து தெரியாதவனை முப்பத்தைந்து மார்க் எடுக்க வைத்து பாஸ் போடுவதற்குள் தாலி அந்து போகுது!’ எனச் சொல்லும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் எத்தனை பேர் தெரியுமா?” ”அட! ஆசிரியர்களைக் குறை சொல்லவில்லை. எப்படியும் பசங்க பரீட்சை எழுதணும். பேப்பர் திருத்தணும். அது பொதுத்தேர்வா இருக்கிறதில்லை என்ன நஷ்டம்?” ”பொதுத்தேர்வு வேண்டாம்ன்னா சொன்னா என்ன அர்த்தம்.

அப்ப அவன் முழுசா படிச்சு அடுத்த வகுப்புக்கு போறதில்லையா?” “அரசாங்கம் இப்பத்தான் ஒரு நல்ல விசயத்தை முன்னெடுத்து இருக்கு. அது பொறுக்கல!”

இப்படி பல குரல்கள். உண்மையில் பொதுத்தேர்வு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு அவசியமா?
அதற்கு முன் அரசு பள்ளிக்கு எப்படி பட்ட குழந்தைகள் வருகின்றார்கள் என்று பார்ப்போம். இன்றும், ஒருவேளை மதிய உணவு பள்ளியில் கிடைக்கும் என்று வரும் குழந்தைகள், பாட்டி பாராமரிப்பில் அருகாமை பள்ளியை தேர்ந்தெடுத்து பாதுகாப்பு காரணம் கருதி வரும் குழந்தைகள், பெயருக்கு படிச்சா போதும் என அனுப்பப்படும் பெண் குழந்தைகள், பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால், வீட்டில் கவனிக்க ஆளில்லை என அனுப்படும் குழந்தைகள், அட இன்னும் கூட முதல் தலைமுறையாய் பள்ளிக்கு வரும் குழந்தைகள்.

மேற்கூறியவற்றில் கிராமம், நகரம் என்ற பாகுப்பாடு இல்லை. குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு இப்படி பல காரணிகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்க. அதனால்தான், ராஜாராம் மோகன்ராய் கல்வி குறித்து குறிப்பிடும் போது, “கல்வி சமூக மாற்றத்திற்கான சாவி” என்கின்றார்.

யுனிசெப் inclusion of excluded என்கின்றது. அதாவது, பள்ளிக்கு வர முடியாத சமூகச் சூழலில் உள்ள குழந்தைகளையும் பள்ளிக்குள் வைத்திருப்பதற்காக ஒன்பாதாம் வகுப்பு வரை தேர்ச்சி அளிக்க வேண்டும்
என்று வலியுறுத்துகின்றது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டமும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

அனைவருக்கும் இலவச கல்வி என்ற குரல் எப்போது ஒலித்தது என்பதை அறிந்து கொள்வோம்.
ராஜாராம் மோகன்ராய் 1800 தொடக்கத்தில் அனைத்து மக்களுக்கான பொதுக்கல்வி பற்றி சிந்தித்தார்.

1817- 1833 வரை அவரது அயராத உழைப்பாலும் பல்வேறு போராட்டங்களாலும் பொதுக்கல்வியை
நிறுவிக்காட்டினார். 1833ல் பிரிட்டிஷ் அரசு தனது முதல் பொதுப்பள்ளியை தொடங்கியது. ஆனால், இன்று வரை கல்வியை அரசு இலவசமாக வழங்கவில்லை என்ற பெரும் கவலை உள்ளது. நாமும், அதற்கான
போராட்டங்களை வலுவாக முன்னெடுக்கவில்லை.

2009ல் தான் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும். இச்சட்டப்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்க வேண்டும். ஆசிரியர் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ மாணவனை காயப்படுத்தக் கூடாது. மேலும், ஆசிரியர் தனிப்பயிற்சி அளிக்கக் கூடாது.

ஆனால், கட்டாயத் தேர்ச்சி வழங்குவதால், கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக கூறி மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி, 5, 8 வகுப்புகளுக்கு கல்வியாண்டு இறுதியில் கட்டாய
தேர்வு நடத்தப்பட வேண்டும்.

அதில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியே, தமிழக அரசு 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் கொண்டு வர முடிவெடுத்துள்ளது.

ஆனால், தற்காலிகமாக, இந்த பொதுத்தேர்வு நடவடிக்கை இந்தாண்டு இல்லை எனக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்ற வாதத்தை பின்னுக்கு தள்ளி வைப்போம். அதற்கு முன் 2002ல் நடத்தப்பட்ட சர்வேயை கொஞ்சம் பார்ப்போம்.

Amarya sen, introduction to the Pratichi Education Report 2002, மேற்குவங்காளத்தில் மேற்கொண்ட சர்வே ஒன்றில் மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளில் பயிலும் முப்பத்து நான்கு குழந்தைகளைச் சோதித்தபோது அவற்றுள் இருபது குழந்தைகள் தனிப்பயிற்சி பெறுவது தெரியவந்தது. அவ்வாறு தனிப் பயிற்சி பெறும் குழந்தைகளில் எண்பது விழுக்காட்டினர் தமது பெயரை எழுதத் தெரிந்து வைத்திருந்தனர்.

தனிப் பயிற்சி பெறாமல் பள்ளிகளில் மட்டும் படிக்கும் குழந்தைகளில் வெறும் ஏழு விழுக்காட்டினர் மட்டும்தான் தமது பெயர்களை எழுதக்கூடியவர்களாக இருந்தனர் என நோபில் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்திய சென் குறிப்பிடுகின்றார்.

என்னங்க சம்மந்தம் இல்லாத சர்வேயாக உள்ளது என்று கூறுகின்றீர்களா? சம்மந்தப்படுத்தி பாருங்க. பாலர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை கூடத் தனிப்பயிற்சிக்கு அனுப்புவது இப்போது சகஜமாகிவிட்டது என்ற
உண்மையுடன் பொருத்திப் பாருங்கள். கட்டாயத் தேர்ச்சி என்று ஆன பின்பு, பெற்றோர்கள் சும்மா இருப்பார்களா? என்னத்தான் மாங்கு மாங்குன்னு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தாலும் தனிப்பயிற்சி அளித்தால் தான் திருப்தி என்ற மனநிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதனால், அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளுக்குத்தான் இலாபம் அதிகம். ஏற்கனவே, நீட் போன்ற
தேர்வுகளுக்கு கல்லா கட்டிக் கொண்டுள்ள நிறுவனங்கள் தங்கள் கடைகளை ஐந்தாம் வகுப்புக்கும் விரித்து விடுவார்கள். அதன்பின், கல்வி என்பது காசு உள்ளவனுக்கே என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

கல்வி என்பது மதிப்பெண்ணில் உள்ளதா? கல்வியின் நோக்கம் என்ன? கல்வியின் நோக்கம் ஒரு மாணவனை நல்ல மனுஷனாக மாற்றுவதே ஆகும் என்கின்றார் காந்தி. ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி என்பது நல்ல மனுசனாக மாற்றி விடுமா? நாம் மாணவனிடம் எதை சோதிக்க வேண்டும்? அறிவை வளர்ப்பதை போல், உடல் திறனையும், மனத் தூய்மையையும், வலிமையையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்கின்றார் காந்தி.

மேலும், அவர் மதிப்பெண்களை பாடங்கள் சார்ந்த பொது அறிவிற்கு வழங்காமல், அதனை புரிந்து கொண்டு செய்யப்படும் வீட்டுப்பாடங்களுக்கு அதிகம் வழங்க வேண்டும் என்கின்றார். காந்தி விளையாட்டுக்கு
முக்கியத்துவம் அளிக்கின்றார். கட்டாய தேர்ச்சி என வரும் போது நமது தற்போதைய தேர்வு முறை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். அதில் விளையாட்டிற்கு இடம் உண்டா? அதை விடுங்க தனித்திறமைகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றதா?

5,8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி முறையை அமுல்படுத்தும் முன்பு நமது கற்பித்தல் முறையை மேம்படுத்த வேண்டும். கற்றலை சந்தோசமானதாக்க வேண்டும். தேர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும். இது சாத்தியமா?

ராஜாராம் மோகன் ராய் நடத்திய கொல்கத்தா ஆங்கிலோ- இந்தியப் பள்ளியில் மூன்று மொழிப்பாடங்களுடன், கணிதம் அறிவியல், தர்க்கம் இவற்றை பாடமாகப் போதித்தார்கள். மாணவர்களுக்கு தேர்வு குறித்த அச்சம் கிடையாது. அங்கே அவரது பள்ளியில் காதிதங்களில் பதில்கள் எழுதிக் காட்டுவதை விட விவாதங்களில் பங்கேற்பதற்கு மதிப்பு தரப்பட்டது.

விவசாய நிலங்கள், தொழிற்கேந்திரங்கள், கயிறு திரிக்கும் நார்த் தொழிலில் உட்பட வாரவாரம் மாணவர்கள் நேரடியாக கற்கும் களப்பயணம் (கல்வி – விஜயம்) ஒரு அங்கமாக இருந்தது. என்னது களப்பயணமா? அய்யோ! நமது அதிகாரிகளிடம் பெர்மிசன் வாங்கி செல்வதற்குள் உயிரே போய்விடும். எவரும் களப்பயணம் அழைத்து செல்வதில்லை என்பதே உண்மை.

கற்பிக்கும் முறையில் நம்மிடம் மாற்றம் இல்லை. அதன்பின்பு, எங்கே தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது? குழந்தைகளின் வாசிப்புத் திறன், கணிதத் திறன், கல்வித் திறன் மட்டுமே தொடர்ந்து சோதித்து வரும் அரசு பள்ளிகள் அதில் மாணவன் முழுமையடையாமல் இருப்பதற்கான காரணங்களை அறிய வேண்டும். அதனை மேம்படுத்த ஆசிரியர்களும், கல்வித்துறையும் என்ன செய்யணும்னு தீவிரமா யோசிக்கணும்.

மாணவனை எழுத்து தேர்வால் மட்டும் மதிப்பிடாமல், உரையாடல், விவாதம் போன்றவைகளுடன் ,
பங்கேற்பு, எடுத்துரைத்தல், தொடர்புக்கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல் போன்ற பல வகைகளில் மதிப்பிட வேண்டும். மதிப்பீட்டு முறைகளில் மாற்றம் வேண்டும். தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு இன்று உள்ளது. ஆனால், அது உண்மையானதாக இல்லை.

“யாரையும் பெயலாக்காம பாஸ் போடுன்னு சொல்றதாலாதான் கல்வித்தரம் கெட்டு, குட்டிச் சுவராயிடுச்சுன்னு சொல்றது வடிகட்டின அயோக்கிய தனம். குழந்தைகளை கொத்தடிமைகளாக, பெரும் சமூக, பொருளாதாரச் சுரண்டலுக்கு தள்ளுகிற அபாயம் இதில் ஒளிஞ்சிருக்கு” என்று லிட்டில்ஸ்
மையத்தின் இயக்குநர் பர்வத வர்த்தினி கூறுவது போல் குழந்தைகள் பள்ளியை விட்டு நின்று விடும் அபாயமும், குழந்தை தொழிலாளர் முறையை மறைமுகமாக ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக மீண்டும் ராஜாராம் மோகன்ராய் அவர்களைக் கொண்டே இதற்கான முடிவையும் வழங்க வேண்டியுள்ளது. ஆம்! நண்பர்களே, 1819ல் ராஜாராம் மோகன் ராய் மிராத்- உல்- அக்பரி நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பொதுக்கல்வி பற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. “தண்ணீர் முவகையாக கிடைப்பது போல மனிதர்கள் மூவகைப்படுவர்.

தானாகவே ஊற்றெடுத்து ஆறாகப் பெருகும் நீர்நிலைபோல தாங்களாகவே கற்பவர்கள் முதல் ரகம். தேக்கி வைக்கப்படும் குளம் , ஏரி, கிணற்று தண்ணீர் போல வாய்ப்பு கிடைத்தால் கல்வியில் சிறப்போர் இரண்டாவது ரகம். மூன்றாவது வகை மக்கள் பாலைவனம் போல அவர்களுக்கு எந்த வசதிவாய்ப்பும் இல்லை. குடிநீரே இல்லாத இடங்களுக்கு குழாய்கள் மூலமாவது , கால்வாய் மூலமாவது தண்ணீர் கிடைக்க வைப்பது அரசின்
கடமை. அதேபோலத்தான் கல்வி வாய்ப்பே இல்லாத அடித்தள மக்களிடம் கல்வியை எடுத்துச்செல்வதும் அரசாங்கத்தின் கடமைதான்.” இது இன்றைக்கும் பொருந்தும்.

ஆகவே, நாம் முன்னெடுத்து செல்ல வேண்டியது மூன்று விசயங்கள். மத்திய அரசு பட்டியலில் இருக்கும் கல்வி , மாநில அரசு பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். இரண்டாவது, அனைவருக்கும் கல்வியை அரசு மட்டுமே வழங்க வேண்டும். மூன்றாவதாக, தாய் மொழி வழிக்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். இவைகள் மட்டுமே தரமான கல்விக்கு வழி வகுக்கும்.

இல்லையென்றால், கல்வி துவக்கப்பள்ளியில் இருந்தே முழுமையாக தனியார் மையமாக்கப்படும் அபாயம் வெகுதூரத்தில் இல்லை. கல்விக்காக ஒலிக்கப்படும் குரல்கள், காற்றில் கரைந்து போகும் வெற்றுக்குரலாக
இருந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

 

 

க. சரவணன்,

கல்வியாளர், எழுத்தாளர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *