வெளிச்சம் என்றால் என்ன?
மெல்ல புத்தகம் ஒன்றை எடுத்து பக்கங்களைத் திருப்பியதும் மோதிய வரிகள். ”பாறையாக இருக்கட்டுமே… மெதுவாகவும், ஆவேசமாகவும் மோதிப் பிளந்து அதற்கு அப்பால் போகாமல் விடமாட்டேன் எனச் சொல்லும் நீரே… சற்று எனக்கும் சொல்லிக்கொடு. வாழ்வதுதான் வாழ்க்கையென்று”.
இன்னும் கொஞ்சம் திருப்பினேன் பக்கங்களை…. பெர்னாட்ஷாவின் வரிகள்…. “எனக்கு பூக்களைப்
பிடிக்கும், குழந்தைகளையும் பிடிக்கும், ஆனால் பூச்சாடியில் வைக்க பூக்களின் தலைகளைக் கொய்வதில் எனக்கு உடன்பாடில்லை”… படித்த விஷயங்கள் உள்சென்று பாதிக்காதவரையில் அது சுமையே.
சுமையை சுகமாக்கிக் கொண்டிருக்கும் நொடியில் ஒரு வெளிச்சம். வெளிச்சம் என்றால் என்ன?. உங்களைக் கேட்டுப் பாருங்கள். கேள்வியின் எளிமை பதிலில் இல்லை என்பதே உண்மை. மனம் சொல்லியது, இருள் இல்லாத இடமே அல்லது நிலையே வெளிச்சம் என்று. மிக அருமையான பதில், ஆனால் மீண்டும் சிக்கலில்
விழுந்தது.
இருள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுவே உண்மை. வெளிச்சம் என்கிற ஒருநிலை உண்டு, அது இல்லாத நிலையே / இடமே இருள் என்பது. மீண்டும் அதே கேள்வி, வெளிச்சம் என்றால் என்ன? மீண்டும் புத்தகங்களின் பக்கங்கள்… அரசன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றிருந்தான்.
பயணவழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன்வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டு தங்க வசதி செய்துகொடுத்தார்கள். அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.
அவனது இடதுகையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடதுகையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே. அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது.
‘‘இந்தக் குச்சி எதற்கு?’ ’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில்
காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்புக் கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’என்றான். அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்.
‘‘இந்த மணியை எதற்குக் கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால் போதும், ஓடிவிடும்!’’ என்று பதில் சொன்னான். அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது.
நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன். ‘‘நூற்பு வேலை செய்து கொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்தப் பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக்கொள்வார்கள்!’’ என்றான். ‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம்தானே!’ எனக் கேட்டான் அரசன்.
அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணைக் குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றைக் குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’என்றான்.
ஒரேநேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. ஒருவன் விரும்பினால் ஒரேநேரத்தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத்தரவும், வேலைசெய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளிதான் சாட்சி.
நமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம். வெற்றி நமதே….மீண்டும் அதே கேள்வி, வெளிச்சம் என்றால் என்ன?
இன்னும் தொடரும்…
நா. சௌரிராஜன்,
தன்முனைப்புப் பேச்சாளர்.
Leave a Reply