எங்கு வேண்டும் உங்கள் சமாதிகள்? – எரிப்பதா? புதைப்பதா?

Share Button

வானமே கூரையாய்

வாழ்க்கையே இரையாய்

தேசத்திற்கு தேகமாய்

வாழப் பழகிய உன்னால்

வலி தாங்கிட முடியும்…

ஆனால் சகோதரா…

உடல் சிதறிய

உன் மறைவால்

உள்ளம் கதறி, பதறி

ஊற்று எடுக்கும் கண்ணீரை

எம்விழி தாங்கிட முடியாது.

மரணக் குழிக்குள்

மனித வேலி அமைத்து

நாட்டுக்கு உன்னுடைய

கடமையை நன்றாக செய்தாய்.

உனது வீட்டுக்கு

நாங்கள் என்ன செய்வோம்?

உன்னையே மீண்டு(ம்)

கொண்டு வர யாருக்கும்

இங்கு சக்தி இல்லையே…

 

மனையாய் உங்கள்

குழந்தையை ஏந்தி நிற்க –

பனி மலையில் நீயோ

துப்பாக்கி ஏந்தி நிற்க –

எப்போது பார்ப்போம் என

இரு நெஞ்சும் ஏங்கி நிற்க –

இறந்த உடலை

இப்போது தாங்கி நிற்கிறோம்…

தலை குனிந்து நிற்கிறோம்.

 

பனி தேசத்தில் உண்டான

பேர் இடிச் சத்தம்

இந்தியர் இதயத்தை

உறையச் செய்கிறது…

உன்னையே உருக்கி

தேசத்துக்கு ஒளி ஈந்த உமக்கு –

மெழுகுவர்த்தி ஏந்தி

அழுது வருந்துகிறோம் ;

“செந்நீர் சிந்திய

வீர உடல்களுக்கு –

கண்ணீர் மல்கிய ஈர வணக்கங்கள்“…

 

சதிகார கும்பலே…

நீங்கள் பற்ற வைத்தது

பண்டிகைக்கான

பட்டாசுகள் அல்ல..

எதையும் தாக்கும்

எங்கள் ஏவுகணைக்குள்

புகையை வைத்துள்ளீர் –

உன்னைப் பதம் பார்த்து

பகை முடித்து திரும்பும்…

 

கோடி இதயங்களை

கொதிக்க வைத்துள்ளாய் ;

தினம் தேடி வந்து

உன்னை அழித்திடுவோம்…

 

அமைதி என்றுமே

எங்ககுக்குப் பிடிக்கும்

உங்களுக்கு அதனை

நிரந்தரமாய் தருகிறோம்…

 

இருநூறு கோடி கரங்கள்

இணைந்து தட்டினால் –

யுத்தம் இல்லாமல்

இந்த சத்தத்திலேயே –

நீங்கள் சமாதி ஆவீர்கள்.

 

சாது மிரண்டால்

காடு கொள்ளாது இந்த

சாதுக்கள் வெகுண்டால்

சுடுகாடு பத்தாது…

 

அவ்வையார் வாக்கிற்கு

புது அர்த்தம் படைப்போம்

தீமைகள் அழித்து

“அறம் செய்ய விரும்பு“.

பகையை முடித்து –

“ஆறுவது சினம்“.

 

சதிகார கோழைகளே…

சொல்லுங்கள் உங்கள்

விருப்பங்களை….

நிறைவேற்ற காத்திருக்கிறோம்.

எங்கு வேண்டும் உங்கள் சமாதி?

எரிப்பதா? புதைப்பதா?

 

 

டாக்டர் R. சிவகுமார், IPS.,

துணை ஆணையாளர், சென்னை காவல்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *