சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்து பயணி ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டியை தாய்லாந்துக்கே திருப்பி அனுப்ப வனவிலங்கு அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கம்,போதைப்பொருட்கள், ஹவாலா பணம் போன்றவற்றை பயணிகள் சிலர் அவ்வப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திருட்டுத்தனமாக கொண்டுவருவதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாய்லாந்தில் இருந்து சென்னை வரவிருக்கும் விமானத்தில், பயணி ஒருவர் சிறுத்தைக்குட்டி ஒன்றை கொண்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இதனையடுத்து அன்றைய அதிகாலை தாய்லாந்து விமானத்தில் தீவிர சோதனை செய்யப்பட்டது. அதில் எந்தவித அனுமதியும் இல்லாமல் ஒரு பயணி சிறுத்தைக்குட்டியை கொண்டுவந்தது உறுதியானது.
பின் அவரிடம் இருந்து அந்த சிறுத்தைக்குட்டியை மீட்டெடுத்த பாதுகாப்பு அதிகாரிகள், அதனை வண்டலூர் உயிரியல் பூங்கா வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அந்த சிறுத்தைக்குட்டி தற்போது வண்டலூரில் பாதுகாப்பாக இருந்து வரும் நிலையில் தாய்லாந்து வனவிலங்கு அதிகாரிகள், பிடிப்பட்ட அந்த சிறுத்தைக்குட்டியை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய வனவிலங்கு நல அதிகாரி டி.உமாவிடம் கேட்டபோது “தாயினம் அடையாளம் கண்டு கொண்ட பிறகே அதனை தாய்லாந்துக்கு அனுப்பவிருக்கும் தேதி மற்ற விவரங்கள் அறிவிக்கப்படும்” என்று குறுந்தகவல் ஒன்றை மட்டும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply