என்னிடம் உள்ள குறைகளை எப்படிக் கண்டறிந்துகொள்வது? எதனைக் குறைகளாக பார்ப்பது?
கேள்வி: என்னிடம் உள்ள குறைகளை எப்படிக் கண்டறிந்துகொள்வது? எதனைக் குறைகளாக பார்ப்பது?
- கே. வெங்கடேஷ், நெமிலி
பதில்: இக்கேள்வியை இரண்டுவிதத்தில் பார்க்கவேண்டும். உங்களின் தொழில்முறை குறைகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் என்று அணுகவேண்டும். முதலாவது நீங்கள் செய்யும் தொழிலுக்கு அல்லது வேலை செய்யும் நிறுவனத்திற்கு தேவையான திறமைகள் உங்களுக்கு உள்ளனவா என்று பார்க்கவேண்டும்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
உங்களுக்குத் தேவையான திறமைகள் எவை என்று உங்களின் தொழில் அல்லது நிறுவனம்தான் வரையறுக்கமுடியும். உதாரணமாக நீங்கள் ஒரு துணிக்கடையில் வேலைசெய்பவராக இருந்தால் சிரித்தமுகத்துடன் பேசும் திறமை, நீண்டநேரம் நின்றுகொண்டு வேலைசெய்யும் உடல் ஆளுமை, அனைத்து துணிகளின் விலையை பதிவுசெய்துகொள்ளும் ஞாபகத்திறமை உங்களுக்கு அடிப்படையாக வேண்டும்.
இதுவே நீங்கள் ஆசிரியர் தொழில் செய்பவராக இருந்தால் சத்தமான குரல்வளம், உங்களுக்குத் தெரிந்ததை சிறியவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லும் யுக்தி, நாற்பது பேருக்கும் அதிகமானவரை கட்டுப்படுத்தும் ஆளுமை ஆகியவைகள் உங்களுக்கு அடிப்படையாக வேண்டும்.
அதுவே நீங்கள் ஒரு மேலாளராக இருந்தால் சுயமாக சிந்திக்கும் ஆற்றல், சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் பொறுமை, மற்றவர்கள் செய்யவிருக்கும் தவறுகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதனைத் தவிர்க்கும்
பார்வை, உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் துணிச்சல், அவர்களைப்
பாராட்டும் தைரியம் ஆகியவைகள் அடிப்படையாக வேண்டும்.
இதுபோல் ஒவ்வொரு தொழிலுக்கும் அதன் தளம் சார்ந்து அதற்கென்று தேவையான, அடிப்படையான சில திறமைகள் உள்ளன. உங்களின் தொழிலுக்கு எவைகள் வேண்டுமோ அதனை நீங்கள் வளர்த்துக்கொண்டே ஆகவேண்டும். அப்படிப்பட்ட எந்தத் திறமை உங்களிடம் குறைவாக உள்ளதோ அதுவே உங்களின் தொழில்முறைக் குறைகள்.
உங்களின் வருமானம் நிலைப்பட அல்லது மேம்பட அக்குறைகளை களையுங்கள். அதற்கான முயற்சியை நீங்கள் எடுக்காவிட்டால் உங்கள் தொழிலில் அல்லது நிறுவனத்தில் நீங்கள் பல இக்கட்டான, தர்மசங்கடமான, இயலாமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிவரும். அவைகள்
உங்களை மன உஅளிச்சளுக்கு உள்ளாக்கி உங்களை நிலைகுலைய வைக்கும்.
இரண்டாவது உங்களின் தனிப்பட்ட குறைகள். உங்களிடம் ஏதும் குறைகள் அல்லது குறை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் நீங்கள் நீங்கள்தான். உங்களில் எதனை மாற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் உருவத்தையா அல்லது உருவத்தில் உள்ள மூக்கு அல்லது தாடையை சிறிது மாற்றலாம் என்றா? இதுவரை எனக்குத் தெரிந்து யாருமே தன்னுடைய முகத்தைத் தவிர தனது விரல்களையோ, காலையோ அல்லது உடம்பின் எந்தப் பாகத்தையோ அழகிற்காக மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை.
ஏனென்றால் யாருமே ஒருவரை அவருடைய கைகளையோ, கால்களையோ பார்ப்பதில்லை. முகத்தை மட்டுமே பார்ப்பதனால்தான் முகத்தில் ஏதேனும் மாற்றம் செய்யமுடியுமா என்று யோசிக்கிறார்கள்.
மற்றவர்கள் எனும் நிலை இருப்பதனால்தான் நீங்கள் எதனையோ (அழகையோ அல்லது குணத்தையோ) மாற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
உங்களின் இயல்பை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளும்போதுதான் உங்களிடம் ஏதோ மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஏதோ தோன்றுகிறது. உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ள அனைத்து மனிதர்களும் ஒரே SOFTWARE-ல் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு நிறுவங்களின் மொபைல் போன்கள் அல்ல. எந்த model-ல் அதிக performence அண்ட் features இருக்கிறது என்று பார்ப்பதற்கு.
பல்வேறு சூழ்நிலையில், மனநிலையில், உணர்வுநிலையில் ஒன்றுசேர்ந்த உங்கள் பெற்றோரின் வித்துகள்தான் நீங்கள். இயற்கையின் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கம் நீங்கள். உங்களின் கைரேகை யாருக்கும் கிடையாது. உங்களின் குரல் இசைவு யாருக்கும் கிடையாது. உங்களின் மனவேகம் யாருக்கும் கிடையாது.
100 சதவீதம் உங்களின் குண இயல்புடனும் உங்களின் உருவத்துடனும் ஒருசேர ஒத்துப் போகிற உங்களைப் போன்றவர் இந்த உலகத்தில் முன்பும் இல்லை உங்களுக்குப் பின்பும் இருக்கப்போவதாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட தனித்தன்மையான, தனித்துவமான நீங்கள் எப்படி குறையுள்ளவர் என்று சொல்லமுடியும்?
உங்களுக்குப் புரியும்படியாக சொல்கிறேன்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்கள் தனியாக ஏதோ ஒரு தீவில் மனித நடமாட்டமே இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது உங்களின் குணம் மற்றும் அழகைப் பற்றிய எண்ணமே உங்களிடம் எழாது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்பொழுது உங்களை
மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறீர்களோ அப்போது மட்டுமே நீங்கள் குறை உள்ளவர்களாக மற்றவர்களுக்கும் உங்களுக்கும் தெரிவீர்கள்.
மற்றவர்கள் உங்களை குறை சொல்வதைத் தவிர்க்க இயலாது. ஏனெனில் அது அவர்களுடைய கருத்து. ஆனால் நீங்கள் உங்களையே குறைசொல்லும் மனப்பான்மை அகன்றவுடன் உங்களின் உணர்வு அலை
வேறுதளத்தில் இயங்கும். அது உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆகவே உங்கள் தொழில் உங்களின் குறைகளை கண்டிப்பாக கண்டுபிடித்து அத்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அதேநேரத்தில் உங்கள் தனிப்பட்ட இயல்பை வரமாக உணருங்கள்.
அதனை மாற்றிக்கொள்ள அவசியம் ஏதுமில்லை. அதுவே உங்களின் ஆதாரம், சொத்து மற்றும் மரபு.
இரண்டையும் பிரித்துப் பார்ப்பது சற்று சிரமம்தான். கற்றுக்கொண்டால் வாழ்வு செழிக்கும். மேலும் நீங்கள் மற்றவர்களின் தனிப்பட்ட இயல்பில் குறை காணுவதை நிறுத்திக்கொள்வீர்கள். வாழ்த்துக்கள்.
ஓஷோனிக்ராஜ்
மனநல ஆர்வலர்
Leave a Reply